பொம்மை நாயகி -விமர்சனம்!

பொம்மை நாயகி  -விமர்சனம்!

ந்திய சமூகத்தினுள் ஆண்டாண்டு காலமாக வேரூன்றி இருக்கும் சாதி எனும் வடிவத்திற்கு எதிராக, பொதுத்தளத்தில் களமாடிய மற்றும் களமாடுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டேயிருக்கிறது. சாதி எனும் அநீதி மூலம் ஒடுக்குதலுக்கு உள்ளான மக்களின் குரல் கடந்த காலங்களை விட, சமகாலத்தில் சற்று ஓங்கியே ஒலித்து வருகிறது. தமிழ் சினிமாவில் காலம் காலமாக சாதிக்கு எதிரான கருத்துகள், கதைகளைக் கொண்ட படங்கள் வெளிவந்திருந்தாலும் எந்த வகையிலும் நீர்த்துப் போகாத நிஜத்திற்கு நெருக்கமான அரசியலை சினிமாப்படுத்தி தன்னுடைய திரைப்படங்கள் மூலம் பல புதிய விவாதங்களை ஏற்படுத்தியவர் இயக்குனர் பா.இரஞ்சித். அவர் தயாரிப்பில் வழக்கம் போல் சாதிய தீண்டாமை, பாலியல் வன்கொடுமை, அப்பா – மகள் பாசம் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சமூகம் உயர் வர்க்கத்துக்காகவே சுழல்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி வெளி வந்திருக்கும் படமே ‘ பொம்மை நாயகி படம்..!

அதாவது கடலூர் அருகேயுள்ள வில்லேஜில் மனைவி மற்றும் சின்ன மகளுடன் வாழ்ந்து வருகிறார் வேலு(யோகி பாபு). இந்த யோகி பாபுவின் தாய் இரண்டாம் தாரம் என்பது மட்டுமல்ல அவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், உஅயர் வர்க்கமான சொந்த அண்ணனாலும், சொந்த ஊரிலும் யோகிபாபு பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார். இந்நிலையில் ஊர் திருவிழாவின்போது தனது அண்ணனின் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பேர் யோகி பாபுவின் மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர். இதை ஊரில் யாரும் தட்டிக் கேட்காத நிலையில், காவல்துறை மற்றும் நீதித்துறையின் உதவிக்காக யோகி பாபு நாடிச் செல்கிறார். இறுதியில் அவருக்கு நீதி கிடைத்ததா என்பதே படத்தின் கதை.

வேலுவாக யோகி பாபு, காமெடி மட்டுமல்ல.. தன்னால் கனமான பாத்திரங்களை தாங்க முடியும் என்பதை இப்படத்திலும் நிரூபித்து காட்டி அசத்தி இருக்கிறார். அவர் ஒரு காட்சியில் கூட சிரிக்கவில்லை என்பதே குறிப்பிடத்தக்கது. ஒரு பெண் குழந்தையின் பாசமுள்ள தந்தையை நம் கண்முன் நிறுத்துகிறார். சீரியஸான கதை என்பதால் கிடைத்த வாய்ப்பில் எல்லாம் அழுது வடியாமல் வறுமை குடி கொண்ட முகம், விரகிதியான உடல்மொழி, சிரிப்பில் வறட்சி என நடிப்பில் உண்மையானஅடித்தட்டு அப்பா ஒருவரைக் கண்முன் காட்டும் யோகிபாபு குலுங்கி அழும் இடத்தில் ஆறுதல் ச்ல்ல உந்த வைத்து விடுகிறார். மனைவியாக சுபத்ரா . மகளாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். யோகிபாபுவுக்கும் இவருக்குமான பிணைப்பு திரையில் ரசிக்க வைக்கிறது. அப்பாவாக ஜிஎம்.குமார், அண்ணனாக அருள்தாஸ், நண்பராக ஜெயச்சந்திரன், ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் தங்களது கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

நீதிமன்ற காட்சிகள் பல படங்களில் பார்த்த சாயலில் இருந்தாலும் யதார்த்தத்தை பிரதிபலிக்கின்றன. நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவும் முடியுமே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்ற கசப்பான உண்மையை உணர வைத்துள்ளார் இயக்குனர். சட்டத்தில் உள்ள ஓட்டை யாருக்கு எல்லாம் சாதகமான இருக்கிறது என்பதையும் சொல்லியுள்ளார். குறிப்பாக நீதிபதியிடம் ஸ்ரீமதி பேசும் இடம் கைதட்டலை பெறுகிறது. மானம், கௌரவம் என்ற பெயரால் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்படுபவர்கள் மிரட்டப்படுவதையும், அதிலிருந்து மீள வேண்டிய தேவையையும், பெண் கல்வியின் அவசியத்தையும் பதிய வைக்கும் இடங்களெல்லாம் பலே சொல்ல வைக்கிறது.

ஒருகட்டத்தில் படம் முடிந்துவிட்டது என நினைக்கும்போது, அது தொடர்ந்து மற்றொரு க்ளைமாக்ஸுக்காக நீளும்போதும் அதிலும் பிரசார நெடியும். இறுதியில் யோகிபாபு செய்யும் செயற்கையான போக்கும் .ஒட்டாமல் போய் விட்டது.

முத்தாய்ப்பாக உயர் சாதியினர் தப்பு செய்தால் சொந்தமும் சட்டமும் அவர்கள் பக்கமே இருக்கும் என்பதையே இயக்குனர் பதிவு செய்துள்ளார்.

மார்க் 3/5

error: Content is protected !!