32°C
விளம்பரம்
Advertisement

சமூக ஆர்வலர்கள் 5 பேருக்கு செப்.6 வரை வீட்டுக் காவல்:சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

admin சேலம் Published: August 29, 2018 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




புனேவில் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி பீமா-கோரேகான் போர் வெற்றியின் 200-ஆவது ஆண்டு தினக் கொண்டாட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் ராகுல் ஃபெடங்கல் (28) என்ற இளைஞர் உயிரிழந்தார். 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மும்பை முழுவதும் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இந்தக் கலவரம் தொடர்பான வழக்கில் புனே போலீசார் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு அதிகாரிகளின் உதவியுடன் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரோனா ஜேக்கப் என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இதேபோல், கடந்த ஜூன் 6ஆம் தேதி தலித் செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள் என 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளனர் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர். இந்த கைது சம்பவங்களின் தொடர்ச்சியாகவே நேற்றைய கைதும் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர்கள் 5 பேரும் கைது தொடர்பான நிலை ஆணை விதிகளை சரியாக பின்பற்ற வில்லை எனத் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ள மனித உரிமைகள் ஆணையம், மகாராஷ்டிர மாநில அரசுக் கும் அம்மாநில டிஜிபிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் 5 பேரையும் செப்டம்பர் 6-ம் தேதிவரை வீட்டுக் காவலில் வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

கடந்த ஜனவரி 1-ம் தேதி புனேயின் பீமா கோரிகான் பகுதியில் நடந்த கலவரத்தில் தொடர்பு இருப்பதாகவும், மாவோயிஸ்ட்டு களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டி சமூக ஆர்வலர் கள், மனித உரிமை ஆர்வலர்கள், இடது சாரித் தலைவர்கள் எனப் பலரின் வீடுகளில் புனே போலீஸார் நேற்று திடீர் ரெய்டு நடத்தினார்கள். கோவா, ஹரியாணா, தெலங்கானா, மும்பை, டெல்லி என 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள நகரங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் சமூக ஆர்வலர் வெர்நான் கோன்சால்வேஸ், அருண் பெரேரியா, கவுதம் நவ்லகா, தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் சுதா பரத்வாஜ், தெலுங்கு கவிஞர் வரவரா ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கைதை எதிர்த்து ரோமிலா தாப்பர், பிரபாத் பட்நாயக், தேவகி ஜெயின், சதீஸ் தேஷ்பாண்டே, மஜாதருவலா ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது. அவசர வழக்காக எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி இருந்தார்.இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர், டி.ஓய்.சந்திரசூட் ஆகியோர் முன் இந்த வழக்கு மாலை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சமூக ஆர்வலர்கள் 5 பேரையும் சிறைக்கு அனுப்ப நீதிபதிகள் மறுத்துவிட்டனர். மாறாக, 5 பேரும் செப்டம்பர் 6-ம் தேதிவரை வீட்டுக் காவலில், போலீஸாரின் கண்காணிப்பில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது  நீதிபதி கள் கூறுகையில், ”ஜனநாயகத்தில் மறுப்பும், எதிர்ப்பும் ’சேப்டி வால்வு’ போன்றது. சேப்டி வால்வு களை (எதிர்ப்பு) நீங்கள் அனுமதிக்காவிட்டால் அது வெடித்து விடும்’’ என்று தெரிவித்தனர். மேலும், வரலாற்று அறிஞர் ரோமிலா தாப்பர், பொருளாதார அறிஞர் பிரபாத் பட்நாயக், தேவிகா ஜெயின் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிபதிகள் மகாராஷ்டிரா அரசுக்கும், மாநில போலீஸா ருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். வழக்கை வரும் செப்டம்பர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனிடையே இந்த கைதுகள்  குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவில் ஒரே ஒரு என்.ஜி.ஓ.வுக்குத்தான் இடமிருக்கிறது. அது, ஆர்.எஸ்.எஸ். மற்ற எல்லா என்.ஜி.ஓ.க்களையும் மூடிவிடலாம். எல்லாச் செயற்பாட்டாளர்களையும் சிறையிலிடுங்கள். முரண்படுபவர்களை சுட்டுத்தள்ளுங்கள். புதிய இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறோம்.” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்