‘பாகுபலி’ உலகம் தொடர்ந்து கொண்டே இருக்கும்!- ராஜமெளலி தகவல்!
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ‘பாகுபலி-2 தமிழ் இசை வெளியீட்டு’ நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தயாரிப்பாளர் ஷோபு, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். சுமார் ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவான ‘பாகுபலி 2’, ஏற்கனவே வசூல் வேட்டையை துவங்கியிருப்பதாகவும், தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்னதாகவே, பாகுபலி 2 படம், தயாரிப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் வசூலை குவித்து வருகிறது. நாடு முழுவதும், 6,500 திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

படத்தை தயாரித்துள்ள அர்க்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம், தியேட்டர் விற்பனை மூலம், 250 கோடி ரூபாயும், வெளிநாட்டு உரிமை மூலம், 100 கோடி ரூபாயும் அள்ளியுள்ளது. மேலும் டிவி உரிமை மூலம், 78 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தின் அடிப்படையில், காமிக்ஸ், நாவல்கள், வீடியோ கேம்ஸ் தயாரிக்கும் உரிமை அளித்ததன் மூலம், 10 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில், பாகுபலி திரைப்படக் குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில், பாகுபலி திரைப்படத்தின் கதாநாயகன் பிரபாஸ், நடிகைகள் தமன்னா, அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய பலரும் இப்படத்தில் தங்களின் பங்களிப்பை எண்ணி பெருமிதம் கொள்வதாக குறிப்பிட்டனர்.
அச்சந்திப்பில் இயக்குநர் ராஜமெளலி பேசியது, “தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரலாற்று படம் செய்ய வேண்டும் என்று தான் தொடங்கினோம். முதல் பாகம் தமிழில் பெரும் வெற்றி பெற்றது, அதற்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை.
இது ஒரு கற்பனை கலந்த வரலாற்று படம். ஆகையால் இந்த காலத்தில் தான் இக்கதை நடைபெற்றது என்று சொல்ல முடியாது. கதையை 1000 வருடங்களுக்கு முன்பு நடப்பது போல வைத்துக் கொண்டோம்.
‘பாகுபலி’ கதையைத் தொடங்கும் போது என்ன எழுதினோமோ அது ‘பாகுபலி தி கன்க்ளூஷன்’ படத்தோடு முடிந்துவிடும். ஆனால், படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களுக்கு அக்கதாபாத்திரத்தின் பின்னணி தெரிய வேண்டும் என்று நிறைய பணியாற்றினோம். அக்கதைகள் அனைத்துமே மிகவும் சுவாரசியமாக வந்துள்ளது. அதை ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்துள்ளோம். படமாகயின்றி தொலைக்காட்சி தொடர்கள், அனிமேஷன், நாவல்கள் என பல வடிவில் அவை வெளிவரும்.
‘பாகுபலி’ முதல் பாகத்தில் கதாபாத்திரங்களின் அறிமுகம் மட்டுமே இருக்கும். அக்கதாபாத்திரங்களுள் என்ன நடந்தது என்பதை நாங்கள் கூறவில்லை. இரண்டாம் பாகத்தில் கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள கதை மிகவும் கவரும். அனைத்துமே பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளோம்.
‘பாகுபலி’ என்றாலே பிரபாஸ் மட்டும் தான் என் கண்ணுக்கு தெரிகிறார். எனக்கு மட்டுமன்றி இந்தியாவிலேயே யாருக்கும் வேறு ஒரு கதாபாத்திரம் நினைவில் வராது. ‘பாகுபலி’க்குப் பிறகு என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. ‘பாகுபலி’ மிகவும் சிறியது. ஆனால் ‘மகாபாரதம்’ மிகவும் பெரியது. அதை எப்போது படமாக்குவேன் என தெரியவில்லை. உடனே கண்டிப்பாக இருக்காது.
‘பாகுபலி தொடங்கப்பட்ட போதே முழுக்கதையையும் எழுதி முடித்துவிட்டோம். ஆகையால் முதல் பாகத்துக்குப் பிறகு எதையுமே மாற்றவில்லை. இது இரண்டாம் பாகம் என எடுத்துக் கொள்ள கூடாது. ஒரு பெரிய கதையை 2 பாகங்களாக கொடுக்கிறோம் அவ்வளவு தான்.
நிறைய நாயகர்களை வைத்து நிறைய படம் செய்ய வேண்டும் என்ற ஆசையுள்ளது. ஆனால், தற்போது ‘பாகுபலி’ தவிர வேறு எதுவுமே என் மனதில் இல்லை என்பது உண்மை. ‘பாகுபலி’ முழுக்க முழுக்க கற்பனை கதை தான். நிறைய பண முதலீடு இருப்பதால் அனைத்து சமூகத்தினரும் படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் செய்துள்ளோம். ஒரு தரப்பு மக்கள் பார்க்க வேண்டாம் என்ற எண்ணோட்டத்தில் நாங்கள் எதையுமே வைக்கவில்லை. அனைவருமே படம் பார்க்க வேண்டும் என்பதில் தான் எங்களுடைய நோக்கமாக இருந்தது” என்றார்


