‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ – விமர்சனம்!

‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ – விமர்சனம்!

ர்வதேச அளவில் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘அவதார்’ படத்தின் முதல் பாகத்தில் நவிக்கள் வாழும் பண்டோரா உலகத்தை அழித்து, அந்த இடத்தில் உள்ள வளங்களை கொள்ளையடிக்க முயற்சி மேற்கொள்வார்கள். இதில் நாயகன் ஜாக் சல்லிக்கும், கர்னல் மைல்சுக்கும் இடையில் யுத்தம் நடக்கும். இதில் கர்னல் தோற்று விட, பண்டோராவை விட்டு ஆகாயவாசிகள் சென்று விடுவார்கள். அதன் பிறகு ஜாக் சல்லியும் நேத்ரியும் தங்களுடைய குழந்தை சகிதமாக மகிழ்ச்சியாக பண்டோரா உலகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் பெரும் படையுடனும் ஆயுத பலத்துடனும், நாயகன் ஜாக் சல்லியை அழிக்க கர்னல் வருகிறார். அவரிடமிருந்து தப்பிக்க ஜாக் சல்லியும் அவனது குடும்பமும் கடல்வாசிகளான மெட்கயினாவுடன் அடைக்கலம் ஆகிறார்கள். அங்கேயும் ஜாக் சல்லியை தேடி கர்னல் நெருங்குகிறார். கடல் வாழ் ராட்சத மீன்களின் அபூர்வ திரவத்தை மனித இனத்தின் தேவைக்காக அபகரிக்க முயலும் இன்னொரு குழுவும் இன்னொரு திசையிலிருந்து வருகிறார்கள். கடல்வாசிகளும் வனவாசிகளும் அவர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள்? ஜாக் சல்லியின் குடும்பம் என்னவானது என்பதுதான் இப்போது ரிலீசாகி இருக்கும் ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் கதை.

முதல் பார்ட் ரிலீஸாகி 13 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகி இருக்கிறது இந்த இரண்டாம்‘அவதார்’.இதன் முதல் பாகம், சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான காட்சியனுபவத்தை அறிமுகப்படுத்தியது. பண்டோரா உலகமும், நவி இனமக்களும், அதன் கிராஃபிக்ஸ் காட்சிகளும் நிஜமாகவே பார்வையாளர்களுக்கு பிரம்மிப்பூட்டும். முதல் பாகத்தைக் காட்டிலும் இந்த இரண்டாம் பாகத்தில் தொழில்நுட்பம் பிரமிப்பையே தருகிறது. கடல்வாசிகளும், அவர்களின் உலகமும், கடலுக்கடியில் உள்ள வண்ண மீன்களும், அன்பு காட்டும் இராட்சத மிருகம், அவர்களோடு உறவாடி அன்பு காட்டும் மக்கள், போருக்கு பயன்படுத்தும் இராட்சத பறவைகள், கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கும் யுத்தம்.. என ஒவ்வொன்றும் திரையில் 3டி-யில் விரியும் போது, நாமும் அந்த உலகத்திற்கு பயணிக்கும் அனுபவத்தை வழங்கியதில் படக்குழு அப்ளாஸை அள்ளுகிறது.

பின்னணி இசையும் கிராஃபிக்ஸ் அனுபவத்துக்கு நிகராக தூக்கலாக இருக்கிறது. சாம் வொர்திங்டன், ஸ்டீபன் லேங், ஜாய் சல்டனா என நடிகர்களின் தேர்ந்த நடிப்பும், தொழில்நுட்பமும் ’அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்திற்கான ரசிகர்களின் காத்திருப்புக்கு நியாயம் சேர்க்கிறது. ஆனால், ’ஹீரோ- வில்லன்’ இடையிலான யுத்தமாக கதை சுருங்கிப் போயிருப்பது பெரும் ஏமாற்றம்.

அவதாராக மனிதர்களே நடித்திருந்தாலும், அது ஒரு இடத்தில் கூட தெரியாத அளவிற்கு மிகவும் மெனக்கெட்டு ஒவ்வொரு சீனிலும் பிக்ஸல் பிக்ஸலாக செதுக்கி இருக்கிறார்கள் அவதார் படத்தின் கிராஃபிக்ஸ் கலைஞர்கள். பாண்டோராவின் ஒரு முகத்தை மட்டுமே முதல் பாகத்தில் காண்பித்த ஜேமஸ் கேமரூன், இந்த பாகத்தில் பிற முகங்களையும் காண்பித்துள்ளார். புதுப்புது மிருகங்கள், புது இன நாவி மக்கள் என நிறைய இந்த பாகத்தில் நிறைய புதுமைகளை புகுத்திய விதத்தில் சபாஷ் ஜேம்ஸ் என்றே சொல்லத்தோன்றுகிறது. கடலில் துப்பாக்கியுடன் மனிதர்களும், அம்பு-வேல் கொம்புடன் நாவி மக்களும் சண்டையிடும் காட்சிகளின் கிராஃபிக்ஸ் ரசிகர்களை வாயை பிளந்து கொண்டு பார்க்க வைக்கிறது.

கதை ரீதியாக, அவதார்-2 வழக்கமான பழிவாங்கும் படம்தான். இந்த வழக்கமான புள்ளியை கிராபிக்ஸ் மூலம் காட்சி விருந்தாக மாற்றியிருக்கிறார் இயக்குநர். ஜேம்ஸ் கேமரூன் ரீஃப் தீவின் பின்னணி, விலங்குகள் மற்றும் அங்குள்ள மனிதர்களுடன் ஒரு புதிய உலகத்தை உருவாக்கினார். அந்தப் பின்னணியில் வரும் காட்சிகள் சுவாரஸ்யமாக உள்ளன. கிளைமாக்ஸ் ஆக்‌ஷன் எபிசோடுகள் ஹைலைட். ஆனாலும் திகட்ட திகட்ட நேரத்தை விழுங்கியதால் முதல் அவதாருடன் ஒப்பிட்டு அதிருப்தி அடைவோருமுண்டு..

ஆனாலும் இந்த நவீன சினிமா மிஸ் செய்யக் கூடாத ஒன்று.

error: Content is protected !!