“பாரதிய ஜனதாவை காங்கிரஸ் கட்சி வீழ்த்தும்” – ராகுல் நம்பிக்கை!

“பாரதிய ஜனதாவை காங்கிரஸ் கட்சி வீழ்த்தும்” – ராகுல் நம்பிக்கை!

பாரத் ஜோடோ யாத்திரையின் நூறாவது நாள் நிகழ்ச்சியில், ஜெய்ப்பூரில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “காங்கிரஸுக்குள் சர்வாதிகாரம் இல்லை, காங்கிரஸ் கட்சி பாசிஸ்ட் இல்லை. காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் ஈடுசெய்ய முடியாததாகவும், இணையற்றதாகவும் இருக்கும். என் வார்த்தைகளை குறித்து வைக்கவும், பாரதிய ஜனதாவை காங்கிரஸ் கட்சி வீழ்த்தும்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் இருந்து தேச ஒற்றுமை யாத்திரையின் 100வது நாள் நடைபயணத்தை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தேச ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட நடைபயணம் ஜம்மு காஷ்மீரில் நிறைவடையவுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து தற்போது ராஜஸ்தானில் ராகுல் காந்தியின் தேச ஒற்றுமை யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த பயணத்தின் போது ஆங்காங்கே அமைக்கப்படும் பொதுக்கூட்ட மேடைகளில் உறையாற்றி வரும் ராகுல், பொதுமக்களையும் சந்தித்து பேசி வருகிறார்.

இதுவரை 2,800 கிலோமீட்டர் தூர நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல் காந்திக்கு வழிநெடுகிலும் திரளான கட்சியினர் மற்றும் பொதுமக்களின் வரவேற்பை பெற்றார். ராகுலை பார்க்கவும், அவரது ஒற்றுமை பயணத்தில் கலந்து கொள்ளவும் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவ, மாணவிகள், சிறுவர், சிறுமியர்கள் எனப் பலரும் கைகோர்த்தனர்.

இந்நிலையில் இன்று யாத்திரை 100வது நாளை எட்டியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் தொடங்கியுள்ள 100வது நாள் யாத்திரையில் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அதுமட்டுமின்றி பிரபலங்கள், எழுத்தாளர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றது கவனம் பெற்றது. இருப்பினும் ராகுலின் பயணம் வாக்குகளாக மாறுமா? என்பது தான் கேள்வியாக முன்வந்து நிற்கிறது. தேர்தல் அரசியலில் வாக்குகளுக்கு தான் அதிக மதிப்பு. அதுவே நாட்டின் அரசியலை தீர்மானிக்கிறது.

இச்சூழலில்தான் இன்று மீடியாக்களிடம் பேசிய ராகுல், “என் வார்த்தைகளை குறித்து வைக்கவும், பாரதிய ஜனதாவை காங்கிரஸ் கட்சி வீழ்த்தும் ..எங்கள் கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை, எங்கள் கட்சியில் சில நேரங்களில் இதுபோன்ற விஷயங்கள் நடக்கும், ஆனால் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எதிராக திட்டமிட்ட அவதூறு பிரச்சாரம் செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சி அழிந்து வருகிறது என்ற எண்ணம் பா.ஜ.க.வால் பரப்பப்படுகிறது. காங்கிரஸ் ஒரு கருத்தியல் கட்சி, அது பாசிசத்திற்கு எதிராக உறுதியாக நிற்கிறது” என்றார்

error: Content is protected !!