சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை! –
சிறுமி பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரபல சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரது உதவியாளர்கள் 2 பேருக்கு தலா 20 ஆண்ட சிறை தண்டனையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
ராஜஸ்தானில் ஆசிரமம் தொடங்கி, இப்போது நாடு முழுவதும் 400 இடங்களில் ஆசிரமம் வைத்திருப்பவர் சாமியார் ஆசாராம் பாபு (77). இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான சீடர்கள், பக்தர்கள் உள்ளனர். இந்த ஆசாராம் பாபு கடந்த 1941ம் ஆண்டு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பெரானி கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அசுமால் சிறு மாலானி. 1947ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு பெற்றோருடன் அகம தாபாத்தில் குடியேறினார். மணிநகரில் 4ம் வகுப்பு வரை மட்டுமே அவரால் படிக்க முடிந்தது. அவருக்கு 10 வயதாக இருக்கும்போது அவரது தந்தை தாவ்மால் உயிரிழந்தார். தந்தை இறந்த பிறகு அவர் பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். சிறு வயதிலேயே பல்வேறு கடினமாக பணிகளை அவர் செய்யவேண்டி இருந்தது.வாலிப வயதை அடைந்த அவர் இமயமலைக்கு சுற்றுலா சென்றார். அங்கு லிலாஷா பாபு என்பவரை சந்தித்தார்.
அவரை தனது குருவாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆசாராம் என பெயரை இந்த குருதான் வைத்தார். 1964ம் ஆண்டு அவரது சொந்த பாதையில் செல்லும்படியும், மக்களுக்கு வழிகாட்டும் படியும் குரு லிலாஷா பாசுவால் உத்தரவிடப்பட்டார். தொடர்ந்து 70ம் ஆண்டுகளில் அகமதாபாத் வந்த ஆசாராம், மோதிரா பகுதியில் சபர்மதி ஆற்றின் அருகே சொற்பொழிவு ஆற்றினார். 1972ம் ஆண்டு ஆன்மிக தலைவராக தனது பயணத்தை தொடங்கினார். சபர்மதி ஆற்றங்கரை அருகே “மோட்ச குதிர்” என்ற சிறிய குடிசையில் ஆசிரமத்தை தொடங்கினார். ஒரே ஆண்டில் மக்களி டையே பிரபலமனார். மக்களும், ஆதரவாளர்களும் அவரை ஆசாராம்ஜி பாபு என அழைக்க ஆரம்பித்தனர். சிறிய குடிசை மிகப்பெரிய கட்டிடமான உயர்ந்து முழு ஆசிரமமாக மாறியது. 40 ஆண்டுகளில் 400 ஆசிரமங்களை அவர் ெதாடங்கி நடத்தி வருகிறார். இன்றளவும் மோதிரா பகுதியில் உள்ள ஆசிரமத்திற்கு பக்தர்கள் படையெடுத்தபடி உள்ளனர்.ஆசாராம்பாபுவுக்கு லக்ஷி தேவி என்ற மனைவியும், நாராயண சாய் என்ற மகனும், பாரதி தேவி என்ற மக்ளும் உள்ளனர்.
இந்நிலையில்உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் தனது 16 வயது மகளை மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில் உள்ள ஆசாராம் ஆசிரம பள்ளியில் சேர்த்தார். இவரை ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் அருகே உள்ள மனாய் பகுதி ஆசிரமத்துக்கு வரும்படி சாமியார் ஆசாராம் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அழைப்பு விடுத்தார். ஆகஸ்ட் 15ம் தேதி இரவு அந்த சிறுமியை ஆசாராம் பலாத்காரம் செய்தார். இச்சம்பவத்தை சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஆசிரமத்தில் நடந்த பலாத்காரம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து, சாமியார் ஆசாராம் உட்பட 5 பேர் மீது சிறுவர்கள் பாலியல் குற்ற பாதுகாப்பு சட்டம் (போக்சோ), சிறார் நீதிச் சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது. 2013, செப்டம்பர் 1ம் தேதி ஆசாராம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2013ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி ஜோத்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் 6 முறையும், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் 3 முறையும், உச்ச நீதிமன்றத்தில் 3 முறையும் ஆசாராம் மனு செய்தார். இந்த 12 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்த வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளும் ஜோத்பூரில் உள்ள எஸ்சி, எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 7ம் தேதி முடிந்து, தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.
சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி மதுசூதன் சர்மா ஜோத்பூர் மத்திய சிறைக்கு சென்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் ஆசாராம், அவருக்கு உடந்தையாக இருந்த சில்பி, சரத் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ், சிவா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கும் விவாதம் உடனடியாக தொடங்கியது. முதுமையை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என ஆசாராம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்பின் தீர்பளித்த நீதிபதி, ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்தார். சில்பி, சரத் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறுமிகள் பலாத்கார குற்றத்துக்கு தூக்கு தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் விதிப்பதற்கான அவசர சட்டம் பிறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2002ல் நடந்த பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரகீமுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது, பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராமுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்புக்குப்பின் அரசுவக்கீல் போகர் ராம் பிஸ்னாய் அளித்த பேட்டியில், ‘‘ஆசாராம் பாபுவுக்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனைப்படி அவர் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். மேலும், அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.





