June 2, 2023

இன்ஜினியரிங் : முதலாமாண்டு வகுப்புகள் 23ம் தேதி தொடங்கும்!

பொறியியல் படிப்புக்கான முதலாமாண்டு வகுப்புகள் வரும் 23 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது!

தமிழகத்தில் உள்ள 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், அதில், 71 ஆயிரத்து 195 இடங்கள் நிரம்பின. அதாவது தமிழக அரசு பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்ட 461 பொறியியல் கல்லூரிகளில், 33 சதவீத கல்லுரிகள் 20 சதவீதத்திற்கும் குறைவான இடங்களை மட்டுமே நிரப்பியுள்ளன. 103 கல்லூரிகள் வெறும் 10 சதவீதத்திற்கும் குறைவான இடங்களை மட்டுமே நிரப்பியுள்ளன. 20 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை பூஜ்யமாக உள்ளது.

இதனால், அநேக பொறியியல் கல்லூரிகள் மோசமான நிதி நெருக்கடி காரணமாக கல்லூரியை இழுத்து மூடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. ஒரு கல்வியாண்டில். 50- 60 சதவீத மாணவர்கள் சேர்க்கை இருந்தால் மட்டுமே நிர்வாக செலவுகள், ஆசிரியர்களுக்கு சம்பளம் , தரமான ஆய்வகம் போன்றவைகளை கல்லூரியால் செயல்படுத்த முடியும்.

உடனடியாக, அண்ணா பலகலைக்கழகமும், தமிழக அரசும் இதற்கு தீர்வு காணவில்லை என்றால், மாணவர்களின் கல்வியின் தரம் கேள்விக்குறியாவதோடு, கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பல பொறியியல் கல்லூரிகள் இழுத்து மூட வேண்டிய சூழல் உருவாகும் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நிலையில், முதலாமாண்டு மாணவர்களுக்கான முன்பயிற்சி வகுப்புகள் வரும் 9 ஆம் தேதி முதல் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் நடப்பு பருவத்துக்கான வகுப்புகள் 23 ஆம் தேதி தொடங்கி அடுத்தாண்டு பிப்ரவரி 24 ம் தேதி உடன் முடிவடையும் என்றும் பருவத் தேர்வுகள் மார்ச் 8 ஆம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.