மெக்காவில் உம்ரா செய்ய வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதி..!

மெக்காவில் உம்ரா செய்ய வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு அனுமதி..!

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் உம்ரா செய்வதற்கு வெளிநாட்டு யாத்ரீகர் களுக்கு அனுமதி அளித்துள்ளது சவுதி அரேபியா அரசு. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 7 மாதங்களாக விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தியுள்ளது சவுதி அரேபியா. சவுதி சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கொரோனா கால கடும் நிபந்தனைகளை ஏற்று 10,000 வெளிநாட்டு யாத்ரீகர்கள் முதற்கட்டமாக உம்ரா செய்வதற்கு மெக்காவுக்கு வரவுள்ளார்கள்.

இதனிடையே அவர்கள் அனைவரும் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உடல்நிலை கண்காணித்த பின்னரே மெக்காவிற்குள் அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.

இந்த தகவலை சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார துணை அமைச்சர் அமர்-அல்-மத்தா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், உம்ராவுக்காக மெக்கா வரும் வெளிநாட்டு யாத்ரீகர்கள் 10 நாட்கள் வரை மட்டுமே தங்க அனுமதிக்கப் படுவார்கள் என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரவலுக்கு முன்பு மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள 1,300 தங்கும் விடுதிகள் மற்றும் ஆயிரக்கணக்கான உணவு விடுதிகள் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்தன. ஆனால் கடந்த மார்ச் மாதம் முதலே அவைகள் அனைத்தும் படிப்படியாக முடங்கிவிட்டன. தற்போது மீண்டும் யாத்ரீகர்களுக்கு படிப்படியாக அனுமதி தரப்பட்டு வருவதால் மீண்டும் ஹோட்டல்கள் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

இதனிடையே கஹ்ஃபா எனப்படும் கருப்பு நிறத்திலான புனித கட்டிடத்தைத் தொட சிறிது காலம் யாத்ரீகர்களுக்கு அனுமதி இல்லை என சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தின் நிலைமைக்கேற்ப மேலும் சில தடைகளை சவுதி அரசாங்கம் தளர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!