ஐமா – விமர்சனம்

ஐமா –  விமர்சனம்

மா என்றால் கடவுள் சக்தி என்றும் பொருளாம்.. ஐமா எனும் சொல்லில் (ஐ ) எனும் எழுத்து தெய்வத்தையும் (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது ஆகவே ஐமா எனும் சொல் இறைவனின் வலிமை என்றார் இப்படத்தின் இயக்குனர். அதே சமயம் கிரேக்க மொழியில் இரத்தம் என்று அர்த்தம். இரத்தத்தை கதைக்கருவாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருபப்தால் இந்த தலைப்பை வைத்திருக்கிறார்களாம். டைட்டில் தொடங்கியவுடன் திரில்லர் படம் என்ற சமிக்ஞை தெரிந்து விடுகிறது. . பேய் படமாக இருக்குமோ என்று யோசிக்க வைத்து மெல்ல, மெல்ல சைன்ஸ் பிக்ஷனாக மாறுகிறது. சிறிய பட்ஜெட் மற்றும் குறைந்த கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு, யூகிக்க முடியாத திருப்புமுனைகளோடு, ரசிகர்களை இரண்டு மணி நேரம் கட்டிப்போடும் வித்தை என்னவெல்லாமோ செய்து  பாஸ் மார்க் வாங்க முயன்று இருக்கிறார்கள் இந்த ஐமா டீம்!

அதாவது ஆதரவான ஒரே உறவான தனது அண்ணன் இறந்து போனதில் அப்செட் ஆன நாயகி எல்வின் ஜூலியட் தற்கொலைக்கு முயற்சிக்கிறார். மறுபக்கம், உடல் நிலை பாதிப்பால் உயிருக்கு போராடும் தனது தாயை காப்பாற்றுவதற்காக தனது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறார் நாயகன் யூனஸ். ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாத இவர்கள் திடீரென்று கடத்தப்பட்டு ஒரே இடத்தில் அடைத்து வைக்கப்படுகிறார்கள். அந்த இடத்தில் ஒலிக்கும் ஒரு குரல், “உங்கள் உடலில் விஷம் செலுத்தப்பட்டுள்ளது, குறிப்பிட்ட நேரத்திற்குள் தப்பிக்கவில்லை என்றால், இறந்து விடுவீர்கள்” என்று சொல்கிறது. அதன்படி, அங்கிருந்து தப்பிப்பதற்கான முயற்சிகளில் இறங்கி இருவரும் வெற்றி பெறும் நிலையில், இறுதிக்கட்டத்தில் இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்றில், இருவரது உயிரையும் காப்பாற்றிக் கொள்ளும் மருந்து இருப்பதாகவும், மற்றொரு வழியில் மருந்து மற்றும் மர்மம் இருப்பதாகவும் எழுதப்பட்டிருக்கிறது. மருந்துடன் அந்த மர்மத்தின் பின்னணியையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் இருவரும், அதற்கான வழியில் பணிக்கிறார்கள். அந்த மர்மம் என்ன?, என்பதை இருவரும் தெரிந்துக் கொண்டார்களா?, இதை யார் எதற்காக செய்கிறார்கள்? என்பதை சொல்வது தான் ‘ஐமா’ படக் கதை.

நாயகனாக ‘ஆதாம்’ ரோலில் நடித்திருக்கும் யூனஸ் துடிதுடிப்பான இளைஞராக வருகிறார். சில கோணங்களில் தோற்றத்தில் நடிகர் விஜய்யை நினைவூட்டும் மேனரிசத்தை எல்லாம் செய்து அசத்துகிறார். ஆனால் இதை எல்லாம் அவாய்ட் செய்தால் அவரின் சினிமா வாழ்க்கை தொடர சான்ஸ் உண்டு. நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை எல்வின் ஜூலியட், வழக்கமான நாயகியாக அல்லாமல் கதைக்கு பலம் சேர்க்கும் கதாபாத்திரத்தில் அளவாக நடித்து அசத்தியிருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் படத்தின் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி புதுவரவு போல் அல்லாமல் கேஷூவலாக நடித்து அசத்தியிருக்கிறார். வில்லனாக மிரட்ட உருவம் தேவையில்லை, கண்களே போதும் என்பதை நிரூபித்திருக்கும் சண்முகம் ராமசாமி, தனது நடிப்பு மற்றும் ஆக்ரோசமான கண்கள் மூலமாக பல காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

கேமராமேன் விஷ்ணு கண்ணன் குறுகிய அறை கொண்ட ஒரு செட்டப்பில் ஏகப்பட்ட கோணங்களில் பலக் காட்சிகளை சுழன்று படமாக்கி வாவ் சொல்லவைத்திருக்கிறார். கே ஆர்.ராகுல் இசையில் படத்தில் மொத்தம் பத்து பாடல்கள் படத்தில் உள்ளது. எல்லாமே சின்னச் சின்னதாக ஓடி மறைகிறது. கிளைமாக்ஸ் முடிந்த பிறகும் திரையில் கடைசியான பாடல் தொடர்கிறது.

தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பவர்கள். தங்கள் உயிருக்கு ஆபத்து வரும்போது அதிலிருந்து தப்பித்து உயிர் வாழவே எண்ணுகிறார்கள் என்ற உளவியல் உண்மையைக் காட்ட ஹாலிவுட் சைன்ஸ் பிக்ஷன் பாணியில் ஒரு கதையை சொல்ல முயன்றிருக்கிறார். எடுத்தக் காட்சிகளில் இன்னும் அக்கறைக் காட்டி இருந்தால்
ஐமா – சர்வைவல் சஸ்பென்ஸ் ஆகி இருக்கும்.

மார்க் : 2.5 / 5

error: Content is protected !!