தமிழ் குரல் / AI Voice
என்னை வெளிநாடு செல்லவும், சென்று வந்ததைப் பதிந்து வைக்கவும் தூண்டிய நல் உள்ளங்களுக்கு நன்றி சொல்லித் தொடங்குகிறேன்…🙏
பயணங்களைப் பொறுத்த அளவில் நான் கூரை ஏறி கோழி பிடிக்காதவன்… தமிழ்நாட்டு மேப்பில் மல்லாந்து படுத்துக்கொண்டு பார்த்தால் தலைப்பக்கம் ஹைதராபாத், இடப்பக்கம் புதுச்சேரி, வலப்பக்கம் எர்ணாகுளம், கால்பக்கம் கன்னியாகுமரி என்கிற சிலுவை வடிவத்துக்குள் என் சிறுசிறு பயணங்கள் அடங்கிவிடும். தாஜ்மஹாலைக் கூட தீப்பெட்டியிலும், டீப்பெட்டியிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
அப்பேர்ப்பட்ட ‘பயணமணி’யான நான் ஐரோப்பா சென்று வந்தது ஆல்ப்ஸ் அளவு ஆச்சரியம்தான். அது என் மகன் ஆதிபகவனால்தான் சாத்தியப்பட்டது. தன் சொந்தக் கல்வியில் பெற்ற அனுபவம், பணிகள் அதன் மூலம் பெற்ற சம்பாத்தியத்தில் ஐந்து வருடம் முன்பு ஸ்பெயின் போன ஆதி, அங்கிருந்து ஒரு வருடத்தில் பின்லாந்துக்குக் குடி பெயர்ந்த போது அவ்வளவு மகிழ்ந்தேன். காரணம் அந்த நாட்டின் பெயர் பின்லாந்தாக இருந்தாலும் உலகில் மனிதர்கள் வாழத் தகுதி பெற்ற மகிழ்ச்சியான 10 நாடுகளில் முன்னணியில் இருப்பது அதுவே.
அங்கே சென்றதும் மூன்று முறை இந்தியா வந்து சென்ற ஆதி ஒவ்வொரு முறை வரும்போதும் அங்கே என்னையும் என் மனைவியையும் அழைத்தும், என் அம்மாவின் உடல்நிலை மற்றும் உமாவின் விடுமுறை போன்றவைகளைக் காரணம் காட்டி அதை நான் மறுத்து வந்தேன். கட்டக் கடைசியாக ஆதி, “நான் மூன்று முறை வந்து விட்டேன். இனி நீங்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்றால் அங்கே வந்து பாருங்கள்… Dot..!” என்று எய்த பிரம்மாஸ்திரம் ஒர்க் அவுட் ஆனது.

விசா நடைமுறைச் சிக்கல்களும் விஐபி லவுஞ்சும்!
பிறகு மாறி மாறி விவாதித்து ஒரு வழியாக VFS Global-ல் விசாவுக்கு விண்ணப்பித்தோம். எடுத்து ஏழு வருடங்களாகியும் ‘கன்னி கழியாமல்’ இருந்த பாஸ்போர்ட்டுக்கு வேலை வந்தது அப்போதுதான். எங்களுக்கு ஸ்பான்சர் செய்து எங்களை அழைத்த ஆதி பக்காவாக எல்லாப் பேப்பர்களையும் வைத்து விசாவுக்கு விண்ணப்பித்திருந்தும் உடனே அது சாத்தியப்படவில்லை. ஆன்லைனில்தான் விசாவுக்கு அப்ளை பண்ண முடியும். அதற்கான விண்ணப்பத்துக்கு 2200 ரூபாய் வரை கட்டணம் வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நேர்காணல் வைத்திருக்கும் நேரத்துக்குச் சென்றுவிட வேண்டும். அந்த ஒரு நாளில்தான் அந்த விண்ணப்பம் அனுமதி.
எங்கள் விண்ணப்பம் நிறைய அமில சோதனைகளுக்கு உட்பட்டு, நாங்கள் இணைத்திருந்த புகைப்படத்தில் ‘காது தெரியவில்லை… அது தெரிந்தாக வேண்டும்…’ என்றார்கள். வெளியே சென்று இன்னொரு புகைப்படம் எடுத்துக் கொண்டு வருவதற்குள் கவுண்ட்டர் மூடிவிட, பிறகு இன்னொரு அப்ளிகேஷன், இன்னொரு கட்டணம், இன்னொரு இன்டர்வியூ என்றானதில் முதல் நகர்விலேயே 4,400 ரூபாய் ‘பிம்பிளாக்கி பிளாக்கி’ ஆனது.
ஆனால், பத்தாயிரம் ரூபாய் பிரீமியம் கொடுத்து விண்ணப்பித்தால் நேர்காணலுக்கு விஐபி லவுஞ்சில் உட்கார வைத்து எல்லா வேலைகளையும் அவர்களே முடித்து விடுகிறார்கள். சில வாரங்களுக்குப் பின் கடைசியாக செஞ்சன் விசா கிடைத்தது. இந்த செஞ்சன் விசா 29 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கியது. இந்த ஒரு விசாவின் மூலம் அந்த எல்லா நாடுகளுக்கும் நம்மால் பயணிக்க முடியும்.
பயணத் திட்டம் மற்றும் விமானப் பயணம்
“ஓகே… எங்கெல்லாம் போகலாம்..?” என்று ஆதி கேட்டபோது, “முடிந்தால் ஸ்விட்சர்லாந்து போகலாம் (அக்கவுண்ட் தொடங்க அல்ல… பனிமலைகளில் சில் பண்ண…) இதனூடே கப்பல் பயணம் ஒன்று இருந்தால் சிறப்பு…” என்று இரண்டு அபிலாசைகளை மட்டும் அப்டேட் செய்தேன். அதற்கு ஆதி திட்டமிட்ட வரைவில், ஆகாயம், தண்ணீர், தரை என்று மூன்று மார்க்க வழி பயணமும் முத்தாய்ப்பாக வந்து நின்றது. அதன்படி முதலில் பின்லாந்து, பிறகு ஸ்வீடன் அடுத்து நார்வே என்று பயணிக்க முடிவு எடுத்ததன் முதற்கட்டமாக நானும், என் மனைவி உமாவும் பின்லாந்து பயணம் செய்ய ஆயத்தமானோம்.
சென்னையில் இருந்து நேரடியாக பின்லாந்துக்கு விமானம் இல்லை. லுஃப்தான்சா விமான சர்வீஸ் மூலம் இங்கிருந்து ஜெர்மனி, அங்கிருந்து பின்லாந்து செல்லலாம். இல்லையென்றால் மும்பை அல்லது டெல்லி போய்விட்டால் கத்தார், எமிரேட்ஸ், பிரிட்டிஷ், டர்க்கிஷ், ஃபின்னிசார் என்று ஏகப்பட்ட விமான சர்வீஸ்கள் இருக்கின்றன. ஆனால் எல்லாவற்றிலும் ஒரு பிரச்சனை – நேரடியாக அவை பின்லாந்து செல்வதில்லை. இடையே ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி போட்டு இரண்டு மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை லே ஓவர் போட்டு “காபி, டிபன் சாப்பிடுறவங்க சாப்பிடலாம்..!” என்றுதான் அங்கிருந்து வண்டியை எடுக்கிறார்கள். இதில் 13 இல் இருந்து முப்பது மணி நேரத்துக்கு மேல் ஆகிறது பின்லாந்து செல்ல.
ஃபின்னிசார் ஏர்லைன்ஸ் மட்டும் நேரடியாக பின்லாந்து செல்கிறது. ஒன்பதரை மணி நேரப் பயணம் மட்டுமே. எனவே எங்கள் சாய்ஸ் அதுவாக இருக்க, இங்கிருந்து பிற்பகலில் டெல்லி சென்று இரவு அங்கு கட்டையை நீட்டி… அடுத்த நாள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்குக் கிளம்பினோம்.
இமிகிரேஷன் அனுபவமும் வானகக் காட்சியும்!
காலை 7.40 மணிக்கு விமானம். அதற்குள் பேக்கேஜ் டிராப்பிங், செக்யூரிட்டி செக் போன்ற வழக்கமான நடைமுறைகளுடன் இமிகிரேஷன் கிளியர் செய்ய வேண்டும். அங்கும் பல விசாரணைகளுக்கு ஆட்பட வேண்டி இருந்தது. எல்லாம் முடிந்த போது, என்னிடம் “நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்..?” என்றார் விசாரணை செய்த அதிகாரி.
நான் “ஜர்னலிஸ்ட்..!” என்றேன். “ஓ நீங்கள் எல்லாம் இன்னும் கூட இந்தியாவில் இருக்கிறீர்களா..?” என்று கேட்டுவிட்டு எனது பாஸ்போர்ட்டில் ஸ்டாம்ப் போட்டு கிளியர் செய்து அனுப்பினார் ஒரு எள்ளலான சிரிப்புடன். அவருக்கு நம் சிஸ்டம் மீது என்ன கோபமோ..?
ஒரு வழியாகப் பிளைட்டில் ஏறி அமர்ந்தாகிவிட்டது. அது 279 பேர் அமரக்கூடிய ஏர்பஸ் விமானம். ‘அடுத்த ஒன்பதரை மணி நேரம் நான்-ஸ்டாப்பாகப் பறக்கப் போகிறோம்…’ என்று நினைக்கும் போதே மண்டைக்குள் மகிழ்ச்சியாகவும் வயிற்றுக்குள் பதட்டமாகவும் சில பட்டாம்பூச்சிகள் பறந்தன.
“இரண்டு வேளை உண்ணும் நேரம், சின்னதாக உறங்கும் நேரம் போக இரண்டு ஹாலிவுட் படங்கள் பார்த்தால் நேரம் சரியாக இருக்கும்..!” என்று சொன்னதுடன் படங்களின் சாய்ஸ் செய்யும் ஆதியே தேர்வு செய்து கொடுத்திருந்தார். 279 பேருக்கும் ஆறு பேர் ஓடி ஓடி பிரேக்பாஸ்ட் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சைவம், ஒரு அசைவம் வாங்கி சாப்பிட்டோம். ஐரோப்பிய பயணத்துக்கு சைவத்தை விட அசைவம்தான் ஒர்த் என்பது அந்த ஸ்பாட்டிலிருந்து எனக்குப் புரிய ஆரம்பித்தது. தாகம் தணிக்க சரக்கு இருந்தது. எனக்கு டீஃபால்ட் ஆகவே நிறைய சரக்கு இருந்ததால் நான் ப்ளூபெர்ரி ஜூஸ் வாங்கிச் சுவைத்தேன்.
…முடிந்ததும் தொடுதிரையைத் தட்டி ஆதி தேர்ந்தெடுத்துச் சொன்ன ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ படத்தை பத்து நிமிடம் ஓட விட்டு லியோனார்டோ டிகாப்ரியோவின் நடிப்பில் லயிக்க ஆரம்பித்திருந்த நேரம், சட்டென்று ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தால் சினிமாப் படமெல்லாம் தேவைப்படாத அளவுக்கு சுவாரஸ்யத்தைத் தந்தது அந்தப் பகல் நேர ஆகாயம்…
