தமிழ் குரல் / AI Voice
விமான ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது மேக ஜாலத்தில் மெய் சிலிர்த்தது. வானம் என்கிற போதி மரம் வைரமுத்துவுக்கு கூட செய்திகளை ஒவ்வொரு நாளைக்கும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் மேகத்துக்கும் மேலே பறக்கையில் நிமிடத்திற்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டச்சிக் கொண்டிருக்கிறது அதே வானம்.
ஒவ்வொரு நிலப்பரப்பிலும் காற்றின் வேகத்துக்கு ஏற்ப ஒவ்வொரு விதமான வடிவத்தைத் தாங்கி அலைந்து கொண்டிருந்த மேகம், அருகில் வந்து “மே ஐ கம்… இன் சைட்..?” எனும்படியாக அவ்வப்போது ஜன்னல் தட்டிப் போய்க் கொண்டிருந்தது. அது ஒரு Flying on cloud nine அனுபவம்.
அது தெளிவான கோடைகாலமாக இருந்ததால் 30 ஆயிரம் அடி வரை உயரத்தில் பறந்து கொண்டிருந்த போதும் கூட கீழே இருக்கும் நிலப்பரப்பு தெளிவாகவே தெரிந்தது. அதன் அடிப்படையில் பஞ்சாப் தாண்டி பாகிஸ்தான் கடந்து ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைகளின் மேலே பறந்தபோது மலைத்து விட்டேன்.
சில திரைப்படங்களிலும் புகைப்படங்களிலும் மட்டுமே நான் பார்த்திருந்த ஆப்கானிஸ்தானின் புழுதி படிந்த பாலைவனப் பகுதிகள் கலைத்துப் போட்ட அரக்குக் கலர் போர்வை போல அழகாக விரிந்து வியாபித்திருந்தது.
வழிமாறிய விமானப் பாதை
அதைக் கடந்து துருக்மனிஸ்தான் தாண்டியபோது விமானம் கொஞ்சம் இடப்பக்கம் சைடு வாங்கியது.
“விமான வழி எல்லாம் உனக்கு அத்துப் படியா..?” என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. முன்னால் இருக்கும் மேப்பில் பார்த்துக் கொண்டே வரும்போது அது நமக்குத் தெரியாதா என்ன..? விமானம் போகிற நேர்கோட்டிலேயே பின்லாந்து இருக்க, சம்பந்தமில்லாமல் அது லெஃப்ட் எடுக்கும் போது வந்த ரைட்டான சந்தேகம்தான் அது.

மேப்பில் விரித்துப் பார்த்த போதுதான் தெரிந்தது நேர்கோட்டில் பயணித்தால் உக்ரேன் மீது பறந்தாக வேண்டிய உக்கிரம். உண்மை சுட்ட போது, “பார்த்து சூதானமா நல்லாவே லெஃப்ட் எடுத்து போங்கப்பா..!” என்று பைலட்களை கேட்டுக்கொள்ளத் தோன்றியது.
அதற்குபின் காஸ்பியன் கடலைத் தாண்டி முடிக்க கொஞ்ச நேரம் ஆகும் என்பதால் களிப்பைத் தவிர்த்து விமானத்துக்குள் இப்படியும் அப்படியும் பார்வையைச் சுழற்றினேன். ஒரு சிலர் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் Game களில் மூழ்கி இருந்தார்கள். இன்னும் சிலர் ஜன்னல் ஓர இருக்கை இருந்தும் Window Shield களை இறக்கி விட்டு விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த விந்தை மனிதர்களின் வேடிக்கைகளிலிருந்து மீண்டு ஜன்னலுக்கு வெளியே வர நினைத்தபோது மதிய உணவும் வந்தது.
நீல வெல்வெட்டில் காகசஸ் மலைகள்
விமானம் அசர்பைஜான் தாண்டி ஜார்ஜியாவுக்குள் புகුந்த போது நீல வெல்வெட்டில் பிரித்து வைக்கப்பட்ட வைரக் கற்களைப் போல் மின்னியவை தலையில் ஐஸ் வைத்துக் கொண்டிருந்த காகசஸ் மலைத்தொடர்கள். அந்தக் கண்கொள்ளாக் காட்சி முழுவதுமாக தாண்டி முடியும் வரை கண்களை இந்தப் பக்கம் அந்தப் பக்கம் நான் அசைக்கவில்லை.
25 வருடங்களுக்கு முன் உலகிலேயே அதிக வயதைக் கடந்தவர்கள் வசிக்கும் பகுதியாக இந்த காகசஸ் மலைத் தொடர்களைப் பற்றி நான் முத்தாரத்தில் ஒரு கட்டுரை எழுதியது நினைவுக்கு வந்தது. இப்போது அந்த மலையே அண்ணாந்து பார்க்கும் அண்ணாமலையாக நான் பறந்து கொண்டு இருந்தேன்.
அதற்குப்பின் பெருந்தொலைவு கருங்கடலைத் தாண்ட வேண்டி வந்தது. மேலே பார்த்தாலும் நீலம், கீழே பார்த்தாலும் நீலம் என்பது இன்னொரு அதிசயம். என்றாலும் இரண்டு நீலத்திலும் சின்ன வித்தியாசம் தெரிந்தது.
பால்டிக் கடல் கடந்த பின்லாந்து பயணம்
அப்புறம் ருமேனியாவில் ரைட் எடுத்து ஸ்லோவாகியா, போலந்து என்று கடந்து ஒரே மூச்சில் லிதுவேனியா, லாட்வியா, எஸ்டோனியா கடந்தால் மீண்டும் ஒரு கடல் – அது பால்டிக் கடல்.
அதைத் தாண்டியதும் பின்லாந்து தொடங்கி விடுகிறது என்று தெரிந்த போது பால்டிக் கடல் பாற்கடலைப் போல் மின்னியது.
கடலைத் தாண்டிய கொஞ்ச நேரத்திலேயே Altitude குறைத்து ஆடாமல், அசங்காமல் தரை இறங்கத் தயாராகியது விமானம். கரை கடந்ததும் பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியின் விமானதள ஓடுபாதை தெரிய ஆரம்பிக்க, மேகக் கூட்டங்கள் விலகி அதுவரை நாம் கண்ட காட்சிகள் மாறி ஒரு பரிசுத்தமான பசுமை நகரத்தை முழுமையாகக் காண முடிந்தது.
டெல்லியில் கொஞ்சம் லேட்டாக எடுத்தாலும் இடையில் மணிக்கு 990 கிலோ மீட்டர் வேகம் வரை ஏறி மிதித்து சொன்ன நேரத்துக்கு ஷார்ப்பாக ஓடுபாதையில் இறக்கி இருந்தார்கள் திறன்மிகு விமானிகள். வேகம் குறைத்து விமானம் நின்ற போது ஜன்னலின் வழியே வெளியே பார்த்தால் இதமான மழை நம்மை சுகமாக வரவேற்றது.
“நான் வருகையிலே… என்னை வரவேற்க… வண்ணப் பூமழை பொழிகிறது…” என்று நினைவில் ஒரு கணம் வந்து எம்ஜிஆர் பாடி விட்டுப் போனார்.
பின்லாந்து மண்ணில் கால் பதித்த தருணம்
ஒரு குறை வைக்காமல் உபசரித்த Finnair சிப்பந்திகளுக்கு கொஞ்சம் உணர்ச்சி மேலிட நன்றி சொல்லிவிட்டுக் கீழிறங்கி Border Control லில் பதிந்து கொள்ள வந்தால் புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோவில் போல கூட்டம் லைன் கட்டி நின்றிருந்தது. வழக்கமாக இந்த ஜூலையில்தான் ஐரோப்பாவில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் குவிகிறார்கள் என்ற உண்மை பிறகு தெரிந்தது.
லைனில் நின்றபோது Tulli என்ற எழுத்துக்களுடன் அங்கி போட்ட அதிகாரி ஒருவர் எங்கள் லைனில் யாரையோ தேடி பின்னர் அவரைக் கண்டுபிடித்து அழைத்துக் கொண்டு போனார். Tulli என்றால் Finnish மொழியில் customs என்பதும் அந்தப் பயணி கொண்டுவந்த பொருள்கள் குறித்த விசாரணைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டதும் ‘நாம் மேற்கொண்ட விசாரணையில்’ தெரிந்து கொள்ள முடிந்தது.
Border Control லிலும் சில கேள்விகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அப்படி என்னிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, “எப்போது இங்கிருந்து கிளம்புவீர்கள்..?” என்பதுதான். அந்த அபாரமான வரவேற்புடன் பேக்கேஜ் எடுத்து ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்து பின்லாந்து மண்ணில் கால் பதித்தபோது சில்லென்று காதுகளுக்குள் உள் புகுந்தது 15 டிகிரி குளிர்.
24 மணிநேரத்துக்கு முன்பு வரை அக்னிக் கதிர்வீச்சுகளில் அல்லாடிக் கொண்டிருந்த நிலை மாறி அடுத்த 25 நாட்கள் ஒரு குளிர் பருவத்துக்குள் குதூகலிக்கத் தயாரானோம்.
