செய்தியைக் கேட்க / Listen to News
தென்னிந்தியத் திரையுலகில் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணித் தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட், தங்களின் அடுத்த பிரம்மாண்ட படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக பூஜையுடன் தொடங்கியுள்ளது. ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். விஷால் நடித்த ‘சக்ரா’ திரைப்படத்தை இயக்கி கவனத்தைப் பெற்ற இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இப்படத்தை இயக்குகிறார்.
நட்சத்திரக் பட்டாளமும் முதன்மைப் பாத்திரங்களும்
இப்படத்தில் கதாநாயகனாக ஜெய் நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் முதன்மை வேடத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு இணைகிறார். மேலும், பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ராஜீவ் மேனன், மூத்த நடிகர் நாசர், ஜி.எம். சுந்தர், ரமேஷ் திலக் மற்றும் அருள் தாஸ் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திறமை வாய்ந்த கலைஞர்களின் கூட்டணி படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இருக்கையின் நுனியில் அமரவைக்கும் அதிரடி ஆக்ஷன் கதைக் களம்
படம் குறித்துப் பேசிய இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன், “ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியிலேயே அமர வைக்கும் விறுவிறுப்பான அதிரடி ஆக்ஷன் திரில்லராக இது உருவாகவுள்ளது. வெறும் ஆக்ஷன் மட்டுமின்றி, நகைச்சுவை மற்றும் குடும்பங்கள் ரசிக்கும் சுவாரஸ்யமான அம்சங்களும் இதில் சரியான விகிதத்தில் கலந்திருக்கும். ஏஜிஎஸ் போன்ற பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கூட்டணி மற்றும் படப்பிடிப்புத் திட்டங்கள்
பிரபல கன்னடத் திரைப்படமான ‘கேஜிஎஃப்’ மற்றும் ‘பிளாஸ்ட்’ படங்களின் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவைக் கவனிக்க, பிரதீப் இ. ராகவ் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்குநராக எஸ். கண்ணன், சண்டைப் பயிற்சி இயக்குநராக ஃபீனிக்ஸ் பிரபு ஆகியோர் பணியாற்றுகின்றனர். ஆடை வடிவமைப்புப் பணிகளை தினேஷ் மனோகரன், பல்லவி சிங், செல்வி தங்கராஜ் மேற்கொள்ள, விளம்பர வடிவமைப்பை டூனி ஜான் மேற்கொள்கிறார்.
இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் நிர்வாகத் தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் ஆகியோர் செயல்படுகின்றனர். இப்படத்தின் பூஜை செப்டம்பர் 6 அன்று சிறப்பாக நடைபெற்ற நிலையில், முதற்கட்டப் படப்பிடிப்பு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. சென்னை மற்றும் ஊட்டியில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் எக்ஸ்க்ளூசிவ் லொகேஷன்களில் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பு நடத்தத் தயாரிப்புக் குழு திட்டமிட்டுள்ளது.
