மத்திய அமைச்சரவையில் அதிமுக சேரக் கூடும்!
தமிழகத்தில் 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை அதிமுக கைப்பற்றியது. பாஜக, பாமக ஆகியவை தலா ஒரு இடத்தை பிடித்தது. தற்போது, நாடாளுமன்றத்தில் 37 அதிமுக உறுப்பினர்கள் உள்ளனர்.இந்த நிலையில், சமீபத்தில் நடந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மாநில சட்டப்பேரவையில் கட்சிகளுக்கு உள்ள எம்.எல்.ஏ.க்கள் அடிப்படையில் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்வில் அதிமுக சார்பில் வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், விஜயகுமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு மனுதாக்கல் செய்தனர். இவர்கள் 4 பேரும் போட்டியின்றி மாநிலங் களவை உறுப்பினர்களாக தேர்வும் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.இதன் மூலம் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுகவின் பலம் 13-ஆக உயர்ந்தது. அதாவது, தமிழகத்தில் இருந்து வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், எஸ்.முத்துக்கருப்பன், எல்.சசிகலா புஷ்பா, டாக்டர் ஆர்.லட்சுமணன், டி.ரத்தினவேல், டாக்டர் வா.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், ஏ.கே.செல்வராஜ், விஜிலா சத்தியானந்த், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகிய 12 பேரும், புதுச்சேரியில் இருந்து என்.கோகுலகிருஷ்ணனும் உறுப்பினர்களாக உள்ளனர்.
எனவே, நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்களின் பலம் 50-ஆக உயர்ந்துள்ளது. 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தும் அதிமுகவுக்கு கிடைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவையை சேர்த்து, பாஜகவுக்கு 331 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 108 உறுப்பினர்களும் உள்ளனர். 50 உறுப்பினர்களை பெற்று 3-வது இடத்தை அதிமுக பிடித்துள்ளது. 46 உறுப்பினர்களை பெற்று 4-வது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது.நாடாளுமன்றத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற உறுப்பினர்கள் பலத்தில் 3-வது இடத்தை பிடித்துள்ள அதிமுகவின் ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையடுத்து தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-பா.ஜ.க.வுக்கு சாதகமாகவும், காங்கிரசுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது. இதனால் மாநிலங்களவையில் அதிமுகவின் கை ஓங்கி உள்ளதால் திட்டங்களை செயல்படுத்துவதில் பா.ஜ.க.வுக்கு காங்கிரசின் தயவு இனி தேவையிருக்காது என்றும் அதிமுக சாதகமாக செயல்பட்டாலே போதும் என கூறப்படுகிறது.
அத்துடன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் பங்கு மிகப் பெரிய அளவு இருக்கும். எனவே இதுவரை வெளிப்படையாக கூட்டணிக்கு விரும்பாத அதிமுக பல்வேறு நிலைகளில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதால். அடுத்த மாதம் மாற்றியமைக்கப்பட உள்ள மத்திய மந்திரி சபையில் அதிமுகவுக்கு 2 மத்திய மந்திரி பதவிகளை தர மோடி அரசு முடிவு செய்துள்ளதாகவும். இதற்கு ஜெயலலிதா பச்சைக் கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான இறுதி முடிவை பிரதமரும், முதல்வரும் 14-ந் தேதி சந்திப்பின் போது முடிவு செய்யப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.


