32°C
விளம்பரம்
Advertisement

மனித குலத்திற்கு அச்சுறுத்தல் தரும் குட்டி வில்லன்:உலகக் கொசு தினம்!

admin Published: August 20, 2026 5 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


டைனோசர்கள் பூமியில் உலாவித் திரிந்த 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, எந்தவித பரிணாம மாற்றமும் இன்றி அப்படியே வாழும் ஒரு சில அரிய உயிரினங்களில் கொசுவும் ஒன்று. உலகம் முழுவதும் சுமார் 3,600 இனங்களாகப் பெருகி வாழும் இந்த மிக நுண்ணிய பூச்சி, தன் வாழ்நாளில் வெறும் 1 முதல் 2 கிலோமீட்டர் தூரமே பறக்க முடிந்தாலும், மனித குலத்தின் நிம்மதியான உறக்கத்தைக் கெடுப்பதுடன் ஆண்டிற்கு 7 லட்சத்திற்கும் அதிகமான மனித உயிர்களைப் பறித்து, புலி, சிங்கம் போன்ற கொடூர விலங்குகளை விட உலகின் மிக ஆபத்தான உயிரினமாக முதலிடத்தில் நிற்கிறது. தன் உடல் எடையை விட மூன்று மடங்கு அதிக இரத்தத்தை உறிஞ்சும் திறன் கொண்ட பெண் கொசுக்கள் மட்டுமே தன் முட்டைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரதத்திற்காக மனிதர்களைக் கடிக்கின்றன என்பதும், குறிப்பாய் ‘O’ பிரிவு இரத்தம் கொண்டவர்கள், அதிக கரியமில வாயுவை வெளிப்படுத்தும் கர்ப்பிணிகள், உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் மது அருந்தியவர்களைத் தேடிப்பிடித்துத் தாக்கும் என்பதும் இதன் வியப்பூட்டும் பண்புகளாகும். 1897 ஆகஸ்ட் 20 அன்று இந்தியாவில் பணியாற்றிய பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்டு ரோஸ், பெண் அனோபிலிஸ் கொசுவின் வயிற்றுப் பகுதியில் மலேரியா ஒட்டுண்ணி இருப்பதை வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் கண்டறிந்து நோபல் பரிசு பெற்றதன் நினைவாகவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைத் தயாரிக்கும் வல்லரசு நாடுகளாலும் அழிக்க முடியாத இந்த குட்டி வில்லனிடமிருந்து மனித குலத்தைப் பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி உலகக் கொசு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

கொசுவின் தோற்றமும் உடலமைப்பும்

கொசுக்கள் இன்று நேற்றல்ல, சுமார் 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பூமியில் வாழ்ந்து வருகின்றன. டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலிருந்தே பூமியில் இருக்கும் பழமையான உயிரினங்களில் இதுவும் ஒன்றாகும். இதுவரை உலகம் முழுவதும் சுமார் 3,600 கொசு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பொதுவாக கொசுக்கள் 3 முதல் 6 மில்லி மீட்டர் நீளமும், 2 முதல் 5 மில்லிகிராம் எடையும் கொண்டவை. இவை ஒரு மணி நேரத்தில் 1 முதல் 2 கிலோமீட்டர் தூரம் வரை பறக்கும். சில வகை கொசுக்கள் இரவு நேரத்தில் 12 கிலோமீட்டர் தூரம் வரை கூட பயணம் செய்யக்கூடியவை.

இரத்த உறிஞ்சும் பெண் கொசுக்கள்

கொசுக்களின் முக்கிய உணவு தாவரங்களின் சாறு மற்றும் மலர்களில் இருக்கும் தேன் ஆகும். ஆண் கொசுக்கள் தேனை மட்டுமே குடித்து வாழ்கின்றன. அவற்றிற்கு மனிதத் தோலைத் துளைக்கும் உறுப்புகள் இல்லை என்பதால் அவை கடிப்பதில்லை.

ஆனால் பெண் கொசுக்களுக்கு முட்டைகளை உற்பத்தி செய்ய புரதமும் அமினோ அமிலங்களும் தேவைப்படுகின்றன. இவை மனித மற்றும் விலங்குகளின் இரத்தத்தில் மட்டுமே அதிகமாக இருப்பதால், பெண் கொசுக்கள் இரத்தத்தைக் குடிக்கின்றன. ஒரு பெண் கொசு தன் உடல் எடையை விட மூன்று மடங்கு அதிக இரத்தத்தை உறிஞ்சும் திறன் கொண்டது.

யாரை அதிகம் கடிக்கும்?

கொசுக்கள் சிலரை மட்டும் தேடிப்பிடித்து கடிப்பதை நாம் பார்த்திருக்கலாம். பொதுவாக O வகை இரத்தப் பிரிவு உள்ளவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கின்றன. மேலும் மனிதர்கள் சுவாசித்து வெளியிடும் கரியமில வாயுவை தூரத்திலிருந்தே மோப்பம் பிடிக்கும் ஆற்றல் கொசுக்களுக்கு உண்டு. அதனால் தான் மனித முகத்திற்கு அருகே வந்து ரீங்காரமிடுகின்றன.

உடற்பயிற்சி செய்பவர்கள், மது அருந்தியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை கொசுக்கள் அதிகம் நாடிச் செல்கின்றன. காரணம்,  உடலிலிருந்து அதிக வெப்பமும் கரியமில வாயுவும் வெளிப்படும். கால்களில் இருக்கும் வியர்வை மற்றும் அழுக்கு நாற்றம் கொசுக்களைக் கவர்வதால் பாதப் பகுதிகளிலும் கடி அதிகம் ஏற்படுகிறது.

ஆயுட்காலம் மற்றும் இனப்பெருக்கம்

பெண் கொசு தன் வாழ்நாளில் மூன்று முறை முட்டையிடும். ஒவ்வொரு முறையும் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகளை நீரின் மேல் இடும். ஆண் கொசுக்களின் வாழ்நாள் வெறும் 7 நாட்கள் மட்டுமே. ஆனால் பெண் கொசுக்கள் 30 முதல் 40 நாட்கள் வரை உயிர் வாழக்கூடியவை.

ரொனால்டு ரோஸின் வரலாற்றுச் சாதனை

மலேரியா நோய் கொசுக்கள் மூலமே பரவுகிறது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உண்மையைக் கண்டுபிடித்தவர் பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்டு ரோஸ். இவர் 1857 ஆம் ஆண்டு இந்தியாவில் அல்மேராவில் பிறந்தவர். சென்னை மாகாணம், செகந்திராபாத் போன்ற இடங்களில் மருத்துவப் பணியாற்றிய இவர், 1895 முதல் மலேரியா பற்றிய தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று செகந்திராபாத்தில் வைத்து, பெண் அனோபிலிஸ் கொசுவின் வயிற்றுப் பகுதியில் மலேரியா ஒட்டுண்ணி இருப்பதைக் கண்டறிந்தார். இந்த மகத்தான கண்டுபிடிப்பிற்காக அவருக்கு 1902 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் மலேரியா காரணியைக் கண்டுபிடித்த ஆகஸ்ட் 20 ஆம் தேதியே உலகக் கொசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள்

சிங்கம், புலி போன்ற விலங்குகளை விட மனித உயிர்களுக்கு அதிக ஆபத்தை விளைவிப்பது கொசுக்கள் தான். உலகில் நோய்களைப் பரப்பும் 30 வகையான கொசுக்கள் உள்ளன. மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா, யானைக்கால் நோய், மஞ்சள் காய்ச்சல், ஜிகா காய்ச்சல் மற்றும் மூளை அழற்சி போன்றவை கொசுக்களால் பரவும் முக்கிய நோய்களாகும்.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கொசுக்களால் மட்டுமே ஆண்டிற்கு 7,25,000 மனித உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மனித தாக்குதல்களால் 4,75,000 பேரும், பாம்புக்கடியால் 50,000 பேரும் இறக்கும் நிலையில், உலகிலேயே அதிக மனிதர்களைக் கொல்லும் உயிரினமாக கொசு முதலிடத்தில் உள்ளது. மலேரியாவால் மட்டும் ஆண்டுதோறும் 4,35,000 பேர் உயிரிழக்கின்றனர்.

ஆபத்தான ஏடீஸ் ஏஜிப்டி

கொசு இனங்களிலேயே மிகவும் ஆபத்தானது ஏடீஸ் ஏஜிப்டி எனப்படும் புலிக் கொசு ஆகும். இது டெங்கு காய்ச்சலைப் பரப்பும் முதன்மை காரணியாக விளங்கும். பகல் நேரத்தில் கடிக்கும் இயல்புடைய இந்த கொசு, வெப்பமண்டல பகுதிகள் முழுவதும் பரவியுள்ளது. பெரும் வல்லரசு நாடுகளால் கூட இந்த கொசுவை முற்றிலும் ஒழிக்க முடிவதில்லை.

கொசு இல்லாத நாடுகள்

உலகின் பெரும்பாலான இடங்களில் கொசுக்கள் நிறைந்திருந்தாலும், ஐஸ்லாந்து நாட்டில் கொசுக்களே இல்லை. அங்கு நிலவும் கடுமையான உறைபனி காலநிலை காரணமாக கொசுக்களால் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய முடிவதில்லை. அதேபோல சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கடுமையான கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கொசுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இயற்கைச் சமநிலையும் கொசுக்களும்

மனிதர்களுக்குத் தீமை விளைவித்தாலும், இயற்கைச் சூழலில் கொசுக்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு. தவளைகள், மீன்கள், வௌவால்கள், பல்லிகள் மற்றும் பறவைகளுக்கு கொசுக்கள் முக்கிய உணவாக அமைகின்றன. நீர்நிலைகளில் வாழும் மீன்களுக்கு கொசுவின் லார்வாக்கள் சிறந்த உணவாகும்.

மேலும் ஆண் கொசுக்கள் பூக்களில் உள்ள தேனைக் குடிக்கும் போது தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெற உதவுகின்றன. எனவே கொசுக்கள் முற்றிலும் அழிந்தால் இயற்கை உணவுச் சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

தடுப்பு நடவடிக்கைகள்

கொசுக்களிடம் இருந்து தப்பிக்க வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஜன்னல்களில் வலைகளைப் பொருத்துவதும், கொசு வலைகளைப் பயன்படுத்தி உறங்குவதும் பாதுகாப்பானது. சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதே கொசுக்களால் பரவும் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் சிறந்த வழியாகும்.

நிலவளம் ரெங்கராஜன்

உடனடி செய்திகள்