32°C
விளம்பரம்
Advertisement

‘அமரம்’:இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாத்துளிகள்!

admin Published: August 20, 2026 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


திவ்ய சேத்ரா பிலிம்ஸ் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க, C.R.ராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அமரம்’. மூன்று வெவ்வேறு காலகட்டங்களில், மூன்று வெவ்வேறு நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அழுத்தமான காதல் கதையாக இத்திரைப்படம் செதுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கோகுல் மற்றும் ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அருள் கிருஷ்ணன், இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.

தேஜஸ் ராஜன் கதாநாயகனாக அறிமுகமாகும் இத்திரைப்படத்தில் ஐரா அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 28 அன்று படம் உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ள நிலையில், இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாக் கோலாகலமாக நடைபெற்றது.

கலைஞர்களின் உழைப்பால் சாத்தியமான படம்: தயாரிப்பாளர் C.R. ராஜன்

விழாவில் பேசிய தயாரிப்பாளர் C.R. ராஜன், “ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அதற்குத் தேவையான கலைஞர்களின் அர்ப்பணிப்பும் உழைப்பும் சில படங்களுக்கு மட்டுமே அமையும். அந்த வகையில் ‘அமரம்’ படத்திற்கு அத்தகைய சிறப்பான உழைப்பு கிடைத்துள்ளது. இயக்குநர் அருள் கிருஷ்ணன், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் என அனைவரும் பணத்திற்கு முக்கியத்துவம் தராமல் உழைத்துள்ளனர். கதையைக் கேட்டவுடனேயே எனது குடும்பத்தினர் அனைவர்க்கும் பிடித்துவிட்டதால் உடனடியாகத் தயாரிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பின் போது துரை பாண்டி உறுதுணையாக இருந்து உதவினார். ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகும் இத்திரைப்படத்திற்கு மக்கள் திரையரங்குகளுக்கு வந்து ஆதரவு அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

புயலிலும் கொடைக்கானல் குளிரிலும் பிறந்த படைப்பு: நாயகன் தேஜஸ் ராஜன்

கதாநாயகன் தேஜஸ் ராஜன் பேசுகையில், “இது எனக்கு மிகவும் முக்கியமான நாள். புயலுக்கு மத்தியிலும், கொடைக்கானலின் கடுங்குளிரிலும், எண்ணூர் கடற்கரையிலும் எனப் பல சவால்களுக்கு இடையே 40 நாட்களுக்கும் மேலாகப் படப்பிடிப்பு நடத்தினோம். 330-க்கும் மேற்பட்ட நடிகர்கள் தங்களது முழு உழைப்பையும் கொடுத்துள்ளனர். புதுமுகங்கள் மற்றும் நடனக் கலைஞர்களின் பங்களிப்பு இப்படத்தில் மிக முக்கியமானது. டிரெய்லருக்குக் கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது, படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.

குறைந்த பட்ஜெட்டில் ஒரு பிரம்மாண்ட முயற்சி: இயக்குநர் அருள் கிருஷ்ணன்

இயக்குநர் அருள் கிருஷ்ணன் பேசுகையில், “சினிமா பின்னணி ஏதும் இல்லாத ஊரிலிருந்து வந்து கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர் ஆகியோரின் தாக்கத்தால் திரைத்துறைக்கு வந்தவன் நான். தமிழ் சினிமா உணர்வுப்பூர்வமான கதைகளில் சிறந்து விளங்கினாலும், ஆக்ஷன் திரைப்படங்களில் இன்னும் பெரிய உயரங்களைத் தொட வேண்டும். ‘கே.ஜி.எஃப்’ போன்ற படங்களின் தாக்கத்தால் ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் கதையை உருவாக்க நினைத்தேன். ஆனால் சூழல் காரணமாக அது தள்ளிப்போனது.

பிரபல கதாநாயகர்களின் தேதிகள் கிடைப்பது சவாலாக இருந்தபோது, குறைந்த பட்ஜெட்டில் புதுமுகங்களை வைத்து ஒரு தரமான படைப்பை உருவாக்க முடியும் என்பதற்கு ‘அமரம்’ ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சார் இப்படத்தைப் பார்த்தவிட்டு, இது ஒரு ‘புதிய பாதை’, ‘சுப்பிரமணியபுரம்’, ‘பருத்திவீரன்’ போன்ற கல்ட் கிளாசிக் வரிசையில் அமையும் என்று பாராட்டினார். மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் இக்கதைக்குத் துணிச்சலாகத் தயாரிப்பாளர் ஆதரவு அளித்தார். யோகிபாபு நண்பர் என்ற முறையில் நடிக்க ஒப்புக் கொண்டாலும் பட்ஜெட் காரணங்களால் அது இயலாமல் போனது. எனினும் ஒட்டுமொத்தத் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பால் படம் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

சிறப்பான வழிகாட்டுதலில் உருவான திரைப்படம்: நாயகி ஐரா அகர்வால்

கதாநாயகி ஐரா அகர்வால் பேசுகையில், “பல மாதக் காத்திருப்புக்குப் பின் இசையும் டிரெய்லரும் வெளியாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இயக்குநர் அருள் கிருஷ்ணன் கதையைக் கூறியவிதத்திலேயே எனக்கு முழு நம்பிக்கை வந்தது. அவரே எனக்கு நடிப்பைக் கற்றுக்கொடுத்து அழகாகச் செய்ய வைத்தார். தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சக நடிகர்களின் ஒத்துழைப்பால் படம் சிறப்பாக உருவாகியுள்ளது” என்றார்.

மக்களின் வலியைப் பேசும் படைப்பு: டாக்டர் V. ராமராஜ்

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாமன்ற நடுவர் டாக்டர் V. ராமராஜ் பேசுகையில், “சாதாரண வணிகப் படமாக இல்லாமல், மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் வலியையும் பேசும் கதையாக இது இருக்கும். ஊழலுக்கு எதிரான ‘லோக் ஆயுக்தா’ அமைப்பு குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் இன்னும் முழுமையாகச் சென்றடையவில்லை. ஊழலுக்கு எதிரான போரில் அனைவரும் இணைய வேண்டும். மக்களின் குரலாக ஒலிக்கும் ‘அமரம்’ திரைப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்” என வாழ்த்தினார்.

இத்திரைப்படத்திற்குப் பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மிக்கி ஜெ. மேயர் இசையமைத்துள்ளார். வெற்றிமாறனின் ‘வடசென்னை’, ‘அசுரன்’ படப் புகழ் R. ஸ்ரீராமர் படத்தொகுப்புச் செய்ய, மிராக்கிள் மைக்கேல் சண்டைப் பயிற்சிகளை அமைத்துள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும் வலுவாக உருவாகியுள்ள ‘அமரம்’ ஆகஸ்ட் 28 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

உடனடி செய்திகள்