செய்தியைக் கேட்க / Listen to News
கொரோனா பெருந்தொற்று போன்ற கடுமையான நெருக்கடி காலத்தில் அவசர கால நிவாரணப் பணிகளுக்காகவும் மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் நிதியம், இன்றைக்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியைக் கையில் வைத்துக்கொண்டு அதனை உரிய தேவைகளுக்குச் செலவிடாமல் வங்கிகளில் முடக்கி வைத்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது; மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட தணிக்கை அறிக்கையின்படி, கடந்த 2025 மார்ச் 31 நிலவரப்படி இந்த நிதியத்தில் ரூ.8,452 கோடி கையிருப்பில் உள்ளபோதிலும், அதில் ரூ.7,846 கோடி வங்கி நிரந்தர வைப்புத் தொகைகளாகப் பூட்டி வைக்கப்பட்டிருப்பதையும், கடந்த நிதியாண்டில் கைவசம் உள்ள நிதியில் வெறும் 0.01 சதவீதமான ரூ.87.85 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான அமைப்புகள் மத்திய அரசின் பொறுப்புக்கூறலையும் நிதி நிர்வாகத்தையும் கடுமையாகக் கேள்விக்குறியாக்கியுள்ளனர்.
8,452 கோடி ரூபாய் நிதி குவியல்: செலவோ சொற்பம்!
மத்திய அரசு வெளியிட்ட தணிக்கை அறிக்கையின்படி, கடந்த 2025 மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி பிஎம் கேர்ஸ் நிதியில் கைவசம் உள்ள மொத்த இருப்புத் தொகை ரூ.8,452 கோடியாகும். இதில் ரூ.7,846 கோடி வங்கி நிரந்தர வைப்புத் தொகைகளாகவும் (Fixed Deposits), ரூ.605 கோடி சேமிப்பு வங்கிக் கணக்குகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. இவ்வளவு பெரிய நிதி கையிருப்பில் உள்ளபோதிலும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் அவசர உதவிகளுக்கும் செலவிடப்பட்ட தொகையோ அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. கடந்த 2023-24-ஆம் ஆண்டில் குழந்தைகள் நலத் திட்டத்துக்காக ரூ.15.37 கோடி செலவிடப்பட்ட நிலையில், 2024-25-இல் அது வெறும் ரூ.87.8 லட்சமாகச் சரிந்துள்ளது. மொத்த நிதியில் 0.01 சதவீதம் மட்டுமே பயன்பாட்டிற்குச் சென்றுள்ளது என்றால், இந்த நிதி எதற்காக உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.

சரிவடையும் நன்கொடைகள்: மக்கள் நம்பிக்கை குறைகிறதா?
பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு வரும் நன்கொடைகளின் அளவு ஆண்டுக்கு ஆண்டு தொடர்ச்சியாகச் சரிந்து வருவதை அரசுத் தரவுகளே உறுதி செய்கின்றன:
1. உள்நாட்டு நன்கொடை சரிவு: 2020-21-இல் அதிகபட்சமாக ரூ.7,184 கோடி கிடைத் பெற்ற உள்நாட்டு நன்கொடை, 2021-22-இல் ரூ.1,896 கோடியாகவும், 2022-23-இல் ரூ.909 கோடியாகவும் குறைந்தது. தொடர்ந்து 2023-24-இல் கிடைத்த ரூ.681.8 கோடியிலிருந்து, 2024-25 நிதியாண்டில் கிடைத்தத் தொகை ரூ.479 கோடியாகச் சரிந்துள்ளது. இது ஒரே ஆண்டில் 30 சதவீதப் பெரும் சரிவாகும்.
2. வெளிநாட்டு நன்கொடை சரிவு: 2020-21-இல் ரூ.495 கோடியாக இருந்த வெளிநாட்டு நன்கொடை, 2024-25-இல் ரூ.1.13 கோடியில் இருந்து ரூ.92.8 லட்சமாகக் குறைந்துள்ளது. இது 18 சதவீதச் சரிவாகும்.
324 கோடி ரூபாய் ரீஃபண்ட்: விடை தெரியாத மர்மம்
இந்தத் தணிக்கை அறிக்கையில் மேலும் ஒரு குழப்பமான அம்சம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திட்டங்களைச் செயல்படுத்தும் முகமைகளிடமிருந்து சுமார் ரூ.324.66 கோடி பிஎம் கேர்ஸ் நிதியத்திற்குத் திரும்பப் பெறப்பட்டுள்ளது (Refund).
இந்தத் தொகை எதற்காக வழங்கப்பட்டது, எந்தெந்த முகமைகள் இந்த நிதியைத் திரும்பச் செலுத்தின, அல்லது வாங்கிய மருத்துவ உபகரணங்கள் பழுதுபட்டதால் இந்தத் தொகை திரும்பப் பெறப்பட்டதா என்பது குறித்து தணிக்கை அறிக்கையில் எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
கேள்விக் குறியாகும் வெளிப்படைத்தன்மை
தேசிய அளவிலான தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கான மக்கள் இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி பரத்வாஜ் உள்ளிட்ட ஜனநாயகச் செயல்பாட்டாளர்கள் பலரும் சுட்டிக்காட்டுவது போல, மக்களின் பங்களிப்பிலும் அரசு ஊழியர்களின் சம்பளப் பிடித்தத்திலும் இயங்கும் இந்த பிரம்மாண்டமான நிதியம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) வரம்பிற்குள் கொண்டுவரப்படாமல் வெளிப்படைத்தன்மையின்றி முடக்கப்பட்டிருப்பதோடு, நாட்டின் தலைமைத் தணிக்கை அதிகாரியான CAG-இன் அதிகாரப்பூர்வ ஆய்விற்கும், நாடாளுமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பிற்கும் கட்டுப்படாமல் இயங்குவது மிகக் கடுமையான ஜனநாயக சீர்கேடாகும்; கொரோனா பெருந்தொற்று மற்றும் அவசர கால நிவாரணங்களுக்காகப் பொதுமக்கள் வழங்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகப் பயன்படுத்தாமல் வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகைகளாகப் பூட்டி வைத்து வட்டி ஈட்டுவது எவ்விதத்தில் நியாயமாகும் என்றும், மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படையான வெளிப்படைத்தன்மையும், பொதுப் பணத்திற்கான பொறுப்புக்கூறலும் இல்லாத ஒரு நிதியம் ஜனநாயக நாட்டின் அறத்திற்கே அச்சுறுத்தலானது என்ற காட்டமானக் கேள்வியோடு சமூக ஆர்வலர்களும் சட்ட வல்லுநர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
ரமாபிரபா

