சமையல் கலைக்கு ஒரு சிறப்பு தினம்: தேசிய சமையல் கலைஞர்கள் நாள்!
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 25 ஆம் நாள், தேசிய சமையல் கலைஞர்கள் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சமையல் என்பது வெறும் உணவு தயாரிப்பது அல்ல, அது ஒரு அற்புதமான கலை. அன்பு, அக்கறை, அர்ப்பணிப்பு ஆகியவற்றைச் சுவை கூட்டிப் பரிமாறும் சமையல் கலைஞர்களுக்கும், அன்னைமார்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாகவே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
சமையல் கலையின் தொன்மை
சமையல் கலையின் தோற்றம் சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களிடமிருந்து துவங்குகிறது. ஆதி மனிதன் நெருப்பை மூட்டி இறைச்சியை சமைத்து உண்டதுதான் வரலாற்றின் முதல் சமையலாகக் கருதப்படுகிறது. காலப்போக்கில் அரசர்கள் மற்றும் பிரபுக்களின் ஆதரவால், உணவுகள் தயாரிப்பதில் நுட்பங்களும், விதிகளும் வளர்ந்தன. தொழில்முறை சமையல்காரர்களின் பங்கு அதிகமாகியது. இன்று, சமையல் கலை மாணவர்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கலாச்சாரங்களின் உணவுகளையும், சமையல் நுட்பங்களையும் கற்றுக்கொண்டு, அவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றனர்.

சமையல் – ஒரு அலாதி மகிழ்ச்சி!
சமையல் என்பது பலர் நினைப்பது போல கடினமான விஷயம் அல்ல; ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சமைக்கலாம். சமைக்க சமைக்க அனுபவம் ஏற்பட்டு, நாள்தோறும் சுவை கூடுவதை உணரலாம்.
- ஆரோக்கியம் மற்றும் சேமிப்பு: நமக்கான உணவை நாமே சமைக்கும்போது, ஆரோக்கியமான பொருட்களைப் பயன்படுத்த முடியும். இதனால் உடல்நலம் சிறப்படைவதுடன், மாதாமாதம் ஒரு பெரும் தொகையினை நம்மால் சேமிக்க முடியும்.
- பாராட்டின் இன்பம்: நாம் சமைத்த உணவை மற்றவர்கள் ரசித்துச் சாப்பிட்டு, “ரொம்பப் பிரமாதமா இருக்கே!” என்று பாராட்டும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.
- படைப்பாற்றல்: முன்பெல்லாம் சமையல் புத்தகங்கள் துணை இருந்தன. இன்று கணினி யுகத்தில், யூடியூப் சேனல்கள் வழியாக ஆயிரக்கணக்கான உணவுகளை நாம் எந்தச் சிரமமும் இன்றி சுவையாகச் சமைக்க முடிகிறது. தேவைப்படுவது வெறும் ஆர்வம் மட்டுமே.
சமையல் கலை: அங்கீகாரமும் பாராட்டும்
இந்தியக் கலாச்சாரம் ஆயகலைகள் அறுபத்து நான்கு என்று கூறினாலும், அதில் சமையல் கலையைச் சேர்க்கவில்லை. ஆனால், இன்றைய உலகில் சமையல் கலை உலகமே கொண்டாடும் ஒரு மதிப்புமிக்க துறையாக வளர்ந்துள்ளது.
சமையல் கலையில் நிறைய புதுமைகளைப் புகுத்தி, வித்தியாசமான ருசியில் சமைத்துப் பரிமாறி, விருந்தோம்பலைச் செழிக்கச் செய்யும் அர்ப்பணிப்பைப் பாராட்டி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. புதுப்புது சுவைகள், ரெசிபிகள், நுட்பங்கள் மற்றும் புதுவிதமான யோசனைகளைக் கொண்டு சமைத்து அனைவரையும் வசீகரிக்கும் வீட்டுப் பெண்கள் மட்டுமல்ல, சிறு சிற்றுண்டி சாலைகளை அமைத்து அனைவரின் பசியையும் ஆற்றும் அனைத்து உள்ளங்களையும் சிறப்பிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தச் சிறப்பு நாளில், சமையலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நீங்கள் ஒரு தொழில்முறை சமையல்காரராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
- பிள்ளைகளின் பசி அறிந்து, அதைப் போக்கும் அனைத்து அம்மாக்களுக்கும் வாழ்த்துக்கள்!
- சமைத்து அன்புடன் பரிமாறும் மனைவியை நேசியுங்கள்!
- தினமும் விதவிதமாக சமைத்து அசத்தும் பெண்களுக்கு, பிள்ளைகளும் கணவன்மார்களும் வாழ்த்து தெரிவிப்பதே இந்த நாளுக்கான மிகச் சிறந்த கொண்டாட்டம்.
நம் பாட்டிமார்களின் பாரம்பரிய சமையலும், அம்மாக்களின் நவீன ஃபியூஷன் சமையலும் நம் சுவை மொட்டுக்களை ஈர்க்கத்தான் செய்கின்றன. அத்தகைய உன்னதமான சமையல் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த இனிய நாளில் மனமார்ந்த பாராட்டுகள்!
டாக்டர்.ரமாபிரபா


