சபரிமலை சன்னித்தானத்துக்குள் நுழைந்த நான்கு திருநங்கைகள்!

சபரிமலை சன்னித்தானத்துக்குள் நுழைந்த நான்கு திருநங்கைகள்!

இருமுடி கட்டி வந்த 4 திருநங்கைகள் சபரிமலை சன்னிதானத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்ல தடை இல்லை என்று தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். இதன்பின்னர், மூன்று முறை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டபோதும் இதுவரை ஒரு பெண் கூட ஐயப்ப தரிசனம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதியன்று அனன்யா, திருப்பதி, அவந்திகா, ரஞ்சுமோள் என்ற 4 திருநங்கைகள் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். இருமுடி கட்டிக்கொண்டு வந்த அவர்களைக் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுத்தனர் போலீசார். இதனால் எருமேலியில் அவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டனர். சிறிது நேரம் கழித்து, நான்கு திருநங்கைகளையும் கோட்டயம் பேருந்தில் அனுப்பி வைத்தனர் போலீசார்.

இதையடுத்து, போலீசார் தங்களை இழிவுபடுத்தியதாகவும் கேலி செய்ததாகவும் 4 பேரும் புகார் அளித்தனர். தங்களைச் சிறையில் அடைப்போம் என்று போலீசார் மிரட்டியதாகவும், ஆண்களின் உடையை அணிந்துவந்தால் பரிசீலிப்போம் என்று ஒரு போலீஸ்காரர் அவமானப்படுத்தியதாகவும் தெரிவித்தார் அனன்யா. இவர்களை அனுமதித்தால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று கருதி திருப்பி அனுப்பியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நேற்று (டிசம்பர் 17) அனன்யா, திருப்பதி, அவந்திகா, ரஞ்சுமோள் நால்வரும் கேரள உயர் நீதிமன்றம் நியமித்த உயர்நிலைக் குழுவில் உள்ள காவல் துறை அதிகாரி ஏ.ஹேமச்சந்திரனைச் சந்தித்துப் பேசினர். அப்போது, சபரிமலைக்குச் செல்லும்போது ஏற்பட்ட அனுபவங்களை விவரித்தனர். இதையடுத்து, உயர் நிலைக் குழுவின் இதர உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் பி.ஆர்.ராமன், எஸ்.ஸ்ரீஜெகன் ஆகியோருடன் ஹேமச்சந்திரன் விவாதித்தார். அதன்பின்னர், இந்த விவகாரம் குறித்து தந்திரி குடும்பத்தினருடனும் பந்தளம் மகாராஜா குடும்பத்தினருடனும் உயர் நிலைக் குழுவினர் ஆலோசனை செய்தனர். முடிவில், திருநங்கைகளை சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என்று இரு குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, தற்போதைய சபரிமலை சீசனிலேயே திருநங்கைகள் கோயிலுக்குள் நுழைவதை அனுமதிக்கலாம் என்று முடிவானது.

இன்று (டிசம்பர் 18) சபரிமலைக்குச் செல்ல 4 திருநங்கைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போலீசார் பாதுகாப்புடன் அவர்கள் சபரிமலை சன்னிதானம் செல்லவுள்ளனர். இதை முன்னிட்டு, இன்று காலையில் அவர்கள் பம்பை சென்றடைந்தனர். அவர்களை போராட்டக்காரர்கள் எவரும் தடுத்து நிறுத்தவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. .

Related Posts