32°C
விளம்பரம்
Advertisement

சர்கார் பட இசை வெளியீட்டு விழா – முழு விபரம்!

admin சேலம் Published: October 3, 2018 4 நிமிட வாசிப்பு Running News2
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சர்கார் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. ஏற்கெனவே இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் மற்ற பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது. தனியார் கல்லூரியில் நடந்த இவ்விழாவில் விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், முருகதாஸ், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி எனப் படத்தில் பணியாற்றியவர்கள் மற்றும் பிற நடிகர்களும் கலந்துகொண்டனர். மிகப்பெரிய அளவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. விழாவை தியா மேனன் மற்றும் நடிகர் பிரசன்னா ஆகியோர் தொகுத்து வழங்கினர். ஆடியோவை புது விதமாக மக்களே வெளியிடுமாறு வடிவமைத்தனர். கலை நிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பலரும் விஜய்யை வாழ்த்திப் பேசினர். ரசிகர்களின் கையில் உள்ள மொபைல் மூலம் சர்கார் ஆடியோவை வெளியிட்டது டிஜிட்டலில் நடைபெற்ற ஒருவிரல் புரட்சி.

இதில் முருகதாஸ் பேசுகையில், ”இதயத்தைத் தொடும் படமாக ‘சர்கார்’ இருக்கும். இதுவரை பார்க்காத ஆக்‌ஷன் படமாக இருக்கும். சில வசனங்கள் நான் எழுதினேனா, விஜய் சார் எழுதினாரா என்று தெரியாத அளவுக்கு அவர் பிரமாதமாக நடித்திருக்கிறார். சிலர் மட்டும் தான் அந்தக் கதாபாத்திரத்துக்கு வலிமையாகப் பொருந்திப் போவார்கள். அப்படி விஜய் சார் கச்சிதமாக இருக்கிறார். இதை நான் முகஸ்துதிக்காகச் சொல்லவில்லை.

விஜய் சார் என்ற மிகப் பெரிய ஆயுதத்தை வைத்துக்கொண்டு நான் பூக்கடை வைக்க முடியாது. அதனால் பெரிய பீரங்கி வண்டிகளை வைத்திருக்கிறேன். நான் மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருந்து வந்தவன். வலிகள் பழகியவன். அரசியல் என்பதை பெயர் மாற்றி, உருவம் மாற்றி சட்டையர் மாதிரி படத்தில் சொல்லவில்லை. உண்மையை இதயத்திலிருந்து சொல்லி இருக்கிறேன். தீபாவளியில் உங்களுக்கு சர்கார் படம் பார்க்கும் போது தெரியும். மூன்றாவது முறையாக இணைந்து படம் பண்ணதற்காக விஜய் சாருக்கு நன்றி. விஜய் சாருடன் வேலை செய்த துப்பாக்கி, கத்தி ஆகிய இரண்டு படங்களைக் காட்டிலும் சர்கார் பெரிய அளவில் பேசப்படும்” என்றார் முருகதாஸ்.

பின்னர், பேசிய விஜய் , “எல்லோருக்கும் வணக்கம். என் நெஞ்சில் குடியிருக்கும் எனது நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் வணக்கம். நெஞ்சில் குடியிருக்கும்னு இப்போ சொல்லத் தோணுது. ரசிகர்களைப் பார்க்கணும்னு ஆர்வமா இருக்கு. என் படங்களின் வெற்றிக்கு காரணமான ரசிகர்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் இசை வெளியீட்டு விழா நடத்தி, அதில் கலந்துகொள்கிறேன்” என்று ஆரம்பித்தவர் “ஆளப்போறான் தமிழன் தமிழர்களின் அடையாளம், ஒரு விரல் புரட்சி ஒட்டு மொத்த மக்களின் அடையாளம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு கிடைத்தது, சர்காருக்கே ஆஸ்கர் கிடைத்தது போல உள்ளது” என்றவர் நடிகையர் திலகம் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மேடையிலேயே வாழ்த்து தெரிவித்தார். பின்னர், வர லஷ்மிய.. ஏன் வேண்டாம்னு சொல்லணும்னு, நடிகை வரலக்‌ஷ்மிக்கு ஒரு பன்ச் வசனம் பேசி, கைதட்டல்களை அள்ளினார்.

வெற்றிக்காக எவ்வளோ வேணுனாலும் உழைக்கணும். ஆனா ஒரு சிலர் வெற்றியடைய கூடாதுனு உழைக்குறாங்க. `உசுப்பேத்துருவங்ககிட்ட உம்முனு இருந்து கடுப்பேத்துருவங்ககிட்ட கம்முனு இருந்தா, வாழ்க்கை ஜம்முனு இருக்கும்’. இத தான் என் வாழ்க்கையிலே பாலோ பண்ணுறேன். இத நீங்களும் பாலோ பண்ணுங்க. என்று சொல்லி விட்டு தொடர்ந்த அவர், மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது, இதில் முருகதாஸ் அரசியலில் மெர்சல் செய்துள்ளார் என்றார். மேலும், விழா நாயகன் ஏ.ஆர். ரஹ்மான், இசையில், பாட முடியாத தனது ஆதங்கத்தை, சமாளிஃபிகேஷனுடன் வெளிப்படுத்தினார். கலைக்காக அள்ளி அள்ளி நிதி தருவதால், தான் அவருக்கு கலாநிதிமாறன் என்ற பெயர் வந்ததா, என தயாரிப்பாளரை குளிர்வித்தார். அப்போது தொகுப்பாளராக பணியாற்றிய நடிகர் பிரசன்னா, “படத்துல நீங்க முதலமைச்சரா? வரீங்கண்ணு பேசிக்கிறாங்க” என்றார். அதற்கு இல்லை என்பது போல் தலையாட்டி மறுத்துவிட்டார். அப்பவும் விடாத பிரசன்னா, “ஒருவேளை முதலமைச்சர் ஆனால்” என கேள்விக் கேட்க.. கற்பனையகத் தானே என முன்னெச்சரிக்கை போர்டு போட்டுக் கொண்டு, “முதலமைச்சர் ஆனால், முதலமைச்சராக செயல்படுவது போல் நடிக்க மாட்டேன்” என்றார்.

அடுத்து, “எல்லாரும் தேர்தலுக்கு அப்புறம் தான் சர்கார் உருவாக்குவாங்க.. நாங்க சர்கார உருவாக்கிட்டு தேர்தல்ல நிக்கப் போறோம்” என்று விஜய் சொன்னதும் என ஆரவாரம் கிளம்பியது. சின்ன கேப் விட்ட விஜய், “லஞ்சம், ஊழல் வைரஸ் மாதிரி இங்கு பரவியிருக்கு. அதை ஒழிக்கிறது கஷ்டம். ஆனாலும் அதை ஒழித்து தான் ஆக வேண்டும். இதற்கு உதாரணமாக ஒரு குட்டி கதை சொல்கிறேன். ஒரு மன்னர் தன்னுடைய பரிவாரங்களுடன் நகர்வலம் சென்றார். அப்போது அவருக்கு ஒரு சிப்பாய் எழுமிச்சை சாறு கொடுத்தார். அதில் உப்பு சற்று குறைவாக இருக்கவே அருகில் இருக்கும் கடையில் உப்பு வாங்கிவர சொன்னார் மன்னர். ஆனால் அந்த சிப்பாய், சிறிதளவு உப்பு தானே. அதை ஏன் காசு கொடுத்து வாங்க வேண்டும். ஏதாவது ஒரு கடையில் இருந்து எடுத்து வந்துவிடலாமே எனக் கூறினார். அதற்கு அந்த மன்னர், நான் இப்போது உப்பை எடுத்துவர சொன்னால், என் பின்னால் வரும் பரிவாரங்கள், மன்னரே உப்பை எடுத்து செல்கிறார் என நினைத்து ஊரையே காலி செய்துவிடுவார்கள்.

எனவே, ஒரு தலைவன் சரியாக இருந்தால் பின்னால் வருபவர்களும் சரியாக இருப்பார்கள். ஒரு மாநிலத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால் எல்லோரும் சரியாக இருப்பார்கள். இங்கு பிறப்பு சான்றிதழ் முதல் இறப்பு சான்றிதழ் வரை எல்லா இடத்திலும் ஊழல் நிறைஞ்சு இருக்குது. காந்தி கையில் காங்கிரஸ் இருந்தவரை காங்கிரஸ் கட்சி நன்றாக இருந்தது. அதற்காக இப்போது இருக்கிறவர்களை நான் குறை சொல்லவில்லை. நாம் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். தர்மம், நியாயம் தான் ஜெயிக்கும். ஆனா லேட்டாக ஜெயிக்கும். புழுக்கம் வந்தா மழை வருமுன்னு சொல்ற மாதிரி இங்கே நெருக்கடி வரும்போது நல்லவங்க தானா முன் வருவாங்க. அதான் இயற்கை. ஒருத்தன் அடிபட்டு நொந்து நூலாகி வருவான். அவனுக்கு கீழ வர்ற சர்கார் பயங்கரமா இருக்கும்” என்று சொன்ன போது அரங்கம் அதிர்ந்தது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்