32°C
விளம்பரம்
Advertisement

இந்தியாவில் அதிகரிக்கும் மொடா குடிகாரர்கள்!- உலக சுகாதார நிறுவனம் தகவல்

admin சேலம் Published: September 23, 2018 4 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




நம் நாட்டில் சுமார் 85% ஆண்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் மது அருந்துகின்றனர் என்றும் இதில் 30-40% பேர் அதற்கு முழு அடிமையாகிறார்கள் எனவும் முன்னரே சில புள்ளி விபரங் கள் மூலம் தெரிய வந்தது. இந்த மது குடிப்பது முதலில் சாதாரணப் பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும் போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங் கள் அல்லது வருடங்களில் மூளையில் ஆல்கஹால் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்து வதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால் தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் பாட்டில் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கி றார்கள். ஒரு கட்டத் தில் குடியை விட முடியாத அளவுக்கு மனநோயாளி யாகவே மாறி விடுகிறார்கள்.அந்த வகையில் இப்போதைய இந்தியாவில் மொடா குடிகாரர்கள் குடிக்கும் மதுவின் அளவு கடந்த 2005 முதல் 2016 ஆண்டுகளில் இரண்டு மடங்கை விட அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

அதாவது உலகில் யார் அதிகம் குடிக்கிறார்கள் மற்றும் குடியால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் கணக்கெடுத்தது. அதன்படி உலகளவில் இந்தியர்கள் தான் அதிகளவில் குடிக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வு அறிக்கையின் இதோ:

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் 1 தனிநபர் குடிக்கும் மதுவின் அளவு அதிகரித்துள்ளது. ஆம். 2005ம் ஆண்டில் இந்தியர்கள் சராசரியாக 2.4 லிட்டர் மதுபானம் அருந்தினார்க்ள. ஆனால் 2016ம் ஆண்டில் அது 5.7 லிட்டராக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 4.2 லிட்டரும் பெண்கள் 1.5 லிட்டரும் மது குடிக்கிறார்கள்.

வருகிற 2025ம் ஆண்டுக்குள் பதினைந்து வயதுக்கும் மேற்பட்டவர்களின் தனி நபர் மது குடிக்கும் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தென்– கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உயர்ந்தபட்ச அதிகரிப்பை எதிர்பார்க்கலாம். இந்தியாவில் மட்டும் 2.2 லிட்டர் அதிகரிக்கலாம்.

இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் குடிக்கு அடிமையாக இருப்பதே இந்த நிலைக்கு காரணம். இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலும் மது குடிப்பது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் உலகளவில் ஒரு வருடத்தில் இறக்கும் 20 பேரில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் குடிப்பழக்கம் காரணமாக மரணமடைவதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.குடியால் ஏற்படும் உடல்நிலை பாதிப்புகள், சாலை விபத்துகள், வன்முறைகள் ஆகியவற்றால் மனிதர்கள் அதிகளவில் இறப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. உலகில் எய்ட்ஸ், வன்முறை மற்றும் சாலை விபத்துகளில் இறப்பவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட குடிப்பழக்கத்தால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

குடியால் இறப்பவர்களில் மூன்றில் இரண்டு சதவீதம் ஆண்கள். கடந்த 2016ம் ஆண்டு மட்டும் மது குடிப்பவர்களில் 30 லட்சம் பேர் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் 23 லட்சம் பேர் ஆண்கள் மற்றும் 7 லட்சம் பேர் பெண்கள் ஆகும். இது 2016ம் ஆண்டில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையில் 5.3 சதவீதம் ஆகும்.

மது அருந்தும் பழக்கத்தால் உலகளவில் சுமார் 23.7 கோடி ஆண்கள் மற்றும் 4.6 கோடி பெண்கள் குடிப்பழக்கம் தொடர்பான உடல்நலபாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். மது குடிப்பதால் 200க்கும் மேற்பட்ட நோய்கள் தாக்கும் நிலை உள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அடிசினல் ரிப்போர்ட்:

யார் போதைக்கு அடிமை?

பொதுவாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் குடிப்பழக்கத்தைப் பற்றி விசாரித்தால் “நீங்க நினைக்கிற மாதிரி நான் மொடாக்குடிகாரன் கிடையாது டாக்டர்” என்ற பதில்தான் முதலில் வரும். ஆனால், உண்மை வித்தியாசமானது. குடிப் பழக்கத்துக்கு ஒருவர் அடிமையா, இல்லையா என்பதை நிர்ணயிக்கச் சில வரைமுறைகள் இருக்கின்றன. இது தனிப்பட்ட நபரின் எண்ணத்தைப் பொறுத்தது அல்ல. கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் சில காரணங்கள் இருந்தாலே, அந்நபர் போதைக்கு அடிமை என்றே அர்த்தம்.

# தினசரி குடிப்பது, மற்ற விஷயங்களைவிட குடிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது.

# ஆரம்பத்தில் குடித்ததைவிட அதிகம் குடித்தால்தான் போதை ஏற்படுகிறது என்ற நிலை.

# பல முறை முயன்றும் குடியை முழுவதுமாக நிறுத்த முடியாமல் தோல்வியடைதல்.

# உடல்நலத்துக்குக் கேடு என்று தெரிந்தும் அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்ட பின்னரும் குடியை நிறுத்த முடியாமை.

# குடித்தால்தான் தூக்கம் வரும் அல்லது கைநடுக்கம் குறையும் என்ற நிலை.

குடி தருவது என்ன?

ஆல்கஹால் உடலில் சேரும் இடம் கல்லீரல்தான். இதனால் நாளடைவில் மஞ்சள்காமாலையில் ஆரம்பித்து கல்லீரல் செயலிழந்து போவதுவரை உடல்நலப் பிரச்சினைகள் தோன்றலாம். அல்சர், இதய வீக்கம் மற்றும் செயலிழப்பு, நரம்பு கோளாறுகள், கணைய வீக்கம், வைட்டமின் குறைபாடுகள், உணவு மண்டலத்தில் புற்றுநோய் போன்றவை மற்ற முக்கியப் பாதிப்புகள்.

பாதிக்கு மேற்பட்டோர் மனக்குழப்பங்கள், மனப்பதற்றம், மன அழுத்தம், தூக்கம் சம்பந்தப்பட்ட நோய்கள், செக்ஸ் பிரச்சினை போன்ற மனநலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். இது தவிர சமுதாயத்தில் சுயகௌரவத்தை இழத்தல், குடும்பப் பிரச்சினைகள், பணவிரயம் மற்றும் கடன், தனிமனித உறவு பாதிப்பு, விபத்துகள், தற்கொலை எனப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்