தமிழ் குரல் / AI Voice
தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ள குட்கா விவகாரத்தில் அதன் உற்பத்தி யாளர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சட்ட விரோதமாக உற்பத்தி மற்றும், விற்பனை செய்ய அனுமதி வழங்கியுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குட்கா உற்பத்தியாளர் மாதவராவ் குடோனில் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில், ஜார்ஜ் பெயரும் இருந்ததால் சிபிஐ நேற்று முன்தினம் அவர் வீட்டில் ரெய்டு நடத்தினர்.ஜார்ஜ் வீடு மட்டுமின்றி தற்போதைய காவல் ஆணையர், சுகாதார துறை அமைச்சர், காவல்துறை உயர் அதிகாரிகள் என சுமார் 40க்கும் மேற்பட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சிபிஐ தமிழக அரசியல் மற்றும் அரசுத்துறை வட்டாரத்தில் பலத்த அதிர்வலைகளை கிளப்பியிருந்தது.
இதை அடுத்து இதுவரை பணியின் போது கூட அதிகமாக செய்தியாளர்களை சந்திக்காத ஜார்ஜ், இன்று மதியம் செய்தியாளர் களை சந்திப்பதாக அறிவித்தார். அறிவித்தபடி, இன்று ஜார்ஜ் சென்னை நொளம்பூரில் உள்ள தனது வீட்டில் வைத்து செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “உண்மையை கூறுவதற்காகவே இந்த செய்தியாளர்கள் சந்திப்பு. அடிப்படை ஆதாரமின்றி என் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அன்பழகன் தாக்கல் செய்துள்ள மனுவில் நான் குறிப்பிட்ட சில நாட்களில் லஞ்சம் வாங்குவதாக குறிப்பிட்டுள்ளார். புகார் அளிக்கப்பட்ட காலத்தில் நான் பணியிலே இல்லை. குட்கா விவகாரத்தில் 2016 ஏப்ரல், மே, ஜூனில் சோதனை நடந்தது. ஆனால் நான் செப்டம்பரில் தான் பதவிக்கு வந்தேன்.
2016 செப்டம்பரில் நான் ஆணையராக வந்த போது, குட்கா விவகாரத்தில் ஏதோ ஊழல் நடக்கிறது என்று தெரிந்து, துணை ஆணையராக இருந்த ஜெயகுமாரிடம் நான் சில பொறுப்புகளை கொடுத் தேன். ஆனால், அவர் அந்த வேலையை சரியாக செய்யவில்லை என்பது பின்னர் தெரிந்தது. ஊழல் நடக்கிறது என்று தெரிந்தும் ஜெயக்குமார் உயரதிகாரிகளுக்கு இதுகுறித்து தெரிவிக்கவில்லை. செங்குன்றம் குடோனில் சோதனை நடத்திய விமலா அங்கு புகையிலை பொருட்கள் இல்லை என்று தெரிவித்தார். மேலும், குட்கா ஊழல் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். உடனே, அரசுக்கு நான் கடிதம் மூலமாக தகவல் தெரிவித்தேன். உயர் அதிகாரிகளின் உதவியுடன் ஊழல் நடப்பதை அரசுக்கு தெரியப்படுத்தினேன். நான் ஒரு காவல் ஆணையர் தான். என்னால் மட்டுமே இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட முடியாது.
300 காவல் நிலையங்கள் உள்ள சென்னையில் காவல் ஆணையர் உதவியுடன் மட்டுமா குட்கா ஊழல் நடந்திருக்கும்? உயரதிகாரிகள் சிலரும் லஞ்சம் பெற்றிருக்கலாம். நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் தான் இங்கு இருக்கிறது. என் மீதும், டிஜிபி மீதும் வேண்டுமென்றே புகார் கொடுக்கப்பட்டுள்ளது. குட்கா புகாரில் எனது வீட்டில் சோதனை நடைபெற்றது துரதிருஷ்டவசமானது. சோதனை நடத்திய போது, எனது வீட்டில் இருந்து அதிகாரிகள் எதுவும் கைப்பற்றவில்லை. குட்கா விவகாரம் தொடர்பாக நான் எதுவும் லஞ்சம் வாங்கவில்லை. மூத்த அதிகாரியாக எனது பணியை சிறப்பாகச் செய்து பாராட்டும் பெற்றுள்ளேன். அனைவரிடமும் குடும்பம் போன்று தான் பழகினேன். கடினமான இலக்குகளை நான் செய்து முடித்துள்ளேன். தற்போது அளவுக்கு அதிகமான வலி என் இதயத்தில் உள்ளது” என்றார்.


