தமிழ் குரல் / AI Voice
தமிழ் சினிமாவில் அவ்வப்போது அதிசயங்கள் நடப்பது வாடிக்கைதான். அந்த வகையில் கோலி வுட்டில் குடும்பத்தோடு பார்க்கத் தகுந்த படமாக ‘கடைக்குட்டி சிங்கம்’ரிலீசாகி 50 நாட்களைத் தாண்டி தற்போதும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இச்சூழலில் ஃபேமிலியோடு போய் பார்த்தே ஆக வேண்டிய மற்றோரு படமாக வெளியாகி இருக்கிறது – 60 வயது மாநிறம். அதிலும் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் அன்பையும் சுரீர் என சுட்டிக் காட்டும் படமிது என்று சொன்னால் மிகையாகாது. அதற்காக இது டாக்குமெண்டரி டைப் படமா இல்லை என்று கேள்வி எழும் முன்பே அப்படியெல்லாம் இல்லை என்று கோரஸ் குரலில் சவுண்டாக சொல்லும் ராதாமோகன் படமிது. கோதி பன்னா சாதாரண மைகட்டு’ என்ற கன்னட படத்தின் ரீமேக்தான் இது என்றாலும் தமிழக குடும்பங்களுக்கு தேவையான பாடம் இது என்றே சொல்ல வேண்டும்.
படத்தின் கதை என்னவென்று கேட்டால் தான் யார் என்பதையே மறந்து விடும் வியாதியான “அல் சீமர் டிசீஸ்”சால் பாதிக்கப் பட்டவர் பிரகாஷ் ராஜ். அவரது மகனான விக்ரம் பிரபு வேலைக்காக அமெரிக்கா செல்ல வேண்டிய சூழலில் அவரை ஒரு கேர் ஹோமில் சேர்க்கிறார். 6 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வந்து பிரகாஷ் ராஜை பார்க்கிறார். அப்படி ஒருமுறை வந்து, பிரகாஷ்ராஜை வெளியே அழைத்துச் செல்லும் போது, பிரகாஷ் ராஜ் காணாமல் போகிறார். அவரைத் தேடி விக்ரம் பிரபுவும், மருத்துவராகிய இந்துஜாவும் அலைகிறார்கள். அப்படி அவரை தேடும்போது தான், தனது அப்பாவிடம் இருந்து தான் எவ்வளவு தூரம் விலகியிருந்தேன் என்பதையும் அவர் உணர்வதன் மூலம் சகலருக்கும் உணர்த்துகிறார்.
இன்னொரு பக்கம், நிழல் உலக தாதாவின் அடியாளாக இருக்கும் சமுத்திரக்கனி, தனது முதலா ளிக்கு இடைஞ்சலாக இருக்கும் அரசு அதிகாரியை கொலை செய்து ஒரு வேனில் வைத்துக் கொண்டு திரிகிறார். அப்போது வழியில் எதிர்பாராத விதமாக பிரகாஷ் ராஜ் அந்த வண்டியில் ஏறி பிணத்தை பார்த்து விடுகிறார். உடனே அந்தக் உடலை பார்த்த சாட்சியங்கள் யாரும் இருக்க கூடாது என்பதால் பிரகாஷ்ராஜை கொலை செய்யும்படி, சமுத்திரக்கனியின் முதலாளி உத்தரவு போட, சமுத்திரக்கனி என்ன செய்தார், விக்ரம் பிரபு தனது அப்பாவை கண்டுபிடித்தாரா இல்லையா, என்பது தான் ‘60 வயது மாநிறம்’ படத்தின் மிச்சக்கதை.
சிவா என்ற கேரக்டரில் வரும் விக்ரம் பிரபுவின் அப்பா ஒய்வு பெற்ற பேராசிரியர் கோவிந்தராஜாக வரும் பிரகாஷ்ராஜ்-தான் படத்தின் முதுகெலும்பு. மனைவியை கேன்சர் நோய்க்கு பறிகொடுத்து விட்டு கொஞ்சம் கொஞ்சமாக ஞாபக மறதி நோய்க்கு ஆளாகும் கேரக்டரில் நம் ஒவ்வொருவரின் அப்பா – தாத்தாக்களை எல்லாம் நினைவுக் கொண்டு வரச் செய்து ரசிகர்களை கபளீகரம் செய்கிறார். “எல்லா மனிதனுக்குள்ளும் ஒரு கருப்பு நாய், ஒரு வெள்ளை நாய் ஒளிந்திருக்கும்.. அவை நமக்குள் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருக்கும்.. நாம் அந்த இரண்டில் எந்த நாய்க்கு அதிகமாக உணவளிக்கிறாயோ, அந்த நாய் வென்று நீயாக மாறும்”..என்று கதை சொல்லும் போதும் , தனக்கு ஞாபக மறதி நோய் வந்து விட்டது என்பதை உணரும் பிரகாஷ் ராஜ், தான் தன்னையே மறந்து விட்டால் தான் யார்? என்பதை தெரிந்து கொள்ள செல்போனில் வீடியோவில் பதிந்து கொள்ளும் காட்சியை காண்போர் சகலருக்கும் கண்களில் நீர் வழிகிறது.
அப்பா பிரகாஷ்ராஜை தொலைத்து விட்டு தேடும் மகனாக வரும் விக்ரம் பிரபு இப்படத்தில் ஸ்பெஷல் மார்க் வாங்குகிறார். அதிலும், “எல்லார் மாதிரியும் எனக்கு 300 கிராம் இதயம் ஆனா, அதுல, 500 கிராம் பிரச்சினை…. நான் என்ன பாவம் பண்ணினேன்? நீ டாக்டர் நிறைய டெட் பாடி பார்த்திருப்ப…. ஆனா, ரோட்ல அடிபட்டு அநாதையாக செத்தவன் எல்லாம் என் அப்பா வான்னா கூப்பிட்டு கேட்பது…. எனக்கு ரொம்ப கொடுமையா இருக்கு….. என காதலியிடம் புலம்பும் ஒரு காட்சியில் நடிகர் திலகம் பேரன் என்பதை நிரூபிக்கிறார்.
பணத்திற்காக கொலை செய்யும் சமுத்திரக்கனி, தனது முதலாளியிடம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும், ஒரு கட்டத்தில் அவரையே கொலை செய்ய முதலாளி முடிவு செய்வது, அறிந்து நல்லவனாக முயற்சி செய்வதால் அவருக்கு ஏற்படும் முடிவு ஒரு குறுஞ் செய்தியை சொல்கிறது..
சமுத்திரகனி, பிரகாஷ்ராஜுக்கு வேறு வழியில்லாமல் அடைக்கலம் கொடுக்கும் குமாரவேல், மதுமிதா ஜோடியும் பிரகாஷ்ராஜின் நண்பர் பாலு வாக வரும் மோகன்ராம் சமுத்திரகனியின் கையாள் காசி, காசியின் ஆள் ‘கம்’ கனியின் முதலாளி வீட்டு வேலை ஆள், காமெடி இன்ஸ் ‘தங்கதுரை,…. உள்ளிட்டோரும் தங்கள் பங்களிப்பை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள்
ராதாமோகனின் படங்களில் வசனங்கள் வழக்கம் போல் இந்தப் படத்திலும் அவர் பெருமையை சொல்கிறது. அதற்குக் காரணம் வசனகர்த்தா விஜி. படம் நெடுகிலும் டாபிக்கல் சப்ஜெக்டில் கலக்கல் வசனங்கள்தான் கலகலப்பூட்டி கதை ஸ்லோவாக போவதை உணராமல் செய்கிறது. இசைஞானியின் பங்களிப்பு கச்சிதம்.
ஆக மொத்தத்தில், “60 வயது மாநிறம்’ – ‘ஆரம்பத்தில் சொன்னது போல் செல்போனில் வாழ்க் கையை புதைத்து கொண்டிருக்கும் இளம் மகன்களை அழைத்துப் போய் ஒவ்வொரு அப்பாக்களும் பார்க்க வேண்டிய நல்ல படம்!”
Rating: 5 / 3.5
.

