தமிழ் குரல் / AI Voice
சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, பணப் பரிவர்த்தனை, நேரடிப் பலன் பரிமாற்றம் (உங்கள் பணம் உங்கள் கையில் திட்டம்), ரசீது, பயன்பாட்டுக் கட்டண சேவைகள், தொழில் கட்டணங்கள், வணிகக் கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை இந்தியா அஞ்சல் வங்கி சேவையை பிரதமர் நாளை அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளார்.
இந்திய அஞ்சல் துறை வங்கித்துறையில் கால்பதிக்கும் வகையில் ‘இந்தியா போஸ்ட் பேமண்ட் பேங்க்’ (இந்திய அஞ்சல் பணப்பட்டுவாடா வங்கி) என்ற பெயரில் அஞ்சல் வங்கி சேவை திட்டத்தை தொடங்க மத்திய அரசு தீர்மானித்தது இந்த வங்கியை தொடங்குவதற்காக 800 கோடி ரூபாய் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டது. இப்போது இந்த வங்கி தொடங்குவதற்கான செலவு, திருத்திய மதிப்பீட் டின் படி ரூ.1,435 கோடி ஆகும். எனவே இந்த வங்கிக்காக மேலும் ரூ.635 கோடி நிதி வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப் பட்டது. கூடுதல் நிதியான 635 கோடி ரூபாயில் 400 கோடி தொழில்நுட்ப உபகரணங்கள் சார்ந்த செலவினங்களுக்கும், 235 கோடி ரூபாய் மனிதவள செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் கணக்கை தொடங்க விரும்புபவர்கள் தங்கள் பகுதி தபால்காரர்களை வர வழைத்து தங்கள் வீட்டில் இருந்தபடியே கணக்கை தொடங்கலாம். கணக்கை தொடங்கியவர்கள் கணக்கில் இருக்கும் பணத்தைப்பெற வங்கியை நாடிச்செல்ல வேண்டியதில்லை. தபால்காரர்களை வீட்டுக்கு அழைத்து அவர் மூலமாகவே பணமும் பெற்றுக் கொள்ளலாம். நவீனமயமாகி விட்ட இக்காலத்திற்கேற்ற வங்கித் தொழில்நுட்பத்துடன் ஏடிஎம், மொபைல் பேங்கிங், எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட சேவைகளையும் இந்தியா போஸ்ட் கட்டண வங்கி வழங்கும்.
இதனை நாளை செப்டம்பர் 1ஆம் தேதியன்று டெல்லியிலுள்ள தல்கதோரா அரங்கத்தில் இந்தியா போஸ்ட் கட்டண வங்கியைப் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளார். டிஜிட்டல் நிதிச் சேவைகளை சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக, மலிவாக, நம்பகத் தன்மை வாய்ந்ததாக இந்தியா போஸ்ட் கட்டண வங்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் நிதிச் சேவைகளுக்குள் மக்களைக் கொண்டுவருவதற்கான ஒன்றிய அரசின் நோக்கங்களை விரைவில் எட்டுவதற்கும் இந்த வங்கி அறிமுகப்படுத்தப்படுகிறது.
3 லட்சத்துக்கும் மேற்பட்ட அஞ்சல் ஊழியர்களைக் கொண்ட அஞ்சல் துறை நாட்டின் மூலை முடுக்குகளுக்கும் சேவை வழங்கிவருகிறது. இந்த அமைப்பைப் பயன்படுத்தி இந்தியாவின் வங்கிச் சேவையை மேலும் அதிகப்படுத்த இந்தியா போஸ்ட் கட்டண வங்கி பயன்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்தியா போஸ்ட் கட்டண வங்கிக்கு நாடு முழுவதும் 650 கிளைகளும், 3,250 அணுகல் மையங்களும் இருக்கும். நடப்பு ஆண்டின் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நாட்டிலுள்ள அனைத்து 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்களும் இந்தியா போஸ்ட் கட்டண வங்கியுடன் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


