32°C
விளம்பரம்
Advertisement

விரைவில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ! – முதல்வர் எடப்பாடி உறுதி!

admin சேலம் Published: August 26, 2018 5 நிமிட வாசிப்பு Updated: August 27, 2018 Running News2
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




காஞ்சிபுரம் மாவட்டம் பையனூரில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.

மாமல்லபுரம் அருகே பையனூரில் தமிழக அரசு சார்பில் 65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் 15 ஏக்கரில் பிரம்மாண்டமான படப்பிடிப்புத் தளம் கட்டப்பட்டுள்ளது. 5 கோடி ரூபாய் செலவில், 56 அடி உயரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தப் படப்பிடிப்பு தளம் இந்தியாவிலேயே மிக உயரமானதாக அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தப் படப்பிடிப்புத் தளத்தை திறந்து வைத்ததுடன், நலிவடைந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘நாகரீக உலகில் மனிதன் உருவாக்கிய மிகச்சிறந்த படைப்பு திரைத்துறை என்றும், சமூக கருத்துக்களை மக்களிடம் கொண்டு சென்றதில் திரைப்படங்களுக்கு முக்கிய பங்குண்டு’ என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், ‘’22 சங்கங்கள் இணைந்த ஒரு கூட்டமைப்புதான் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம். அதாவது பெப்சி என்ற இந்த அமைப்பு ஆகும். எம்.ஜி. ஆர். தான் இந்த அமைப்பை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பதை அறிவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து எம்.ஜி.ஆரின் பெயரால் படப்பிடிப்பு தளம் உருவாக்கி இருப்பது பாராட்டுக்குரிய செயலாகும்.

110 அடி நீளமும் 100 அடி அகலமும் 56 அடி உயரமும் கொண்ட இந்த படப்பிடிப்புத் தளம் இந்தியா விலேயேமிக உயர்ந்த படப்பிடிப்பு தளம்  என்று அறிவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். மேலும் யாரிடமும் கடன் பெறாமல் சம்மேளனத்தின் கலை நிகழ்ச்சியின் மூலமும், இணைக்கப்பட்ட சங்கங்களின் இருந்து பெறப்பட்ட நன்கொடையின் மூலமும் இத்தனை அழகு மிக்க படப்பிடிப்பு தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளது பெப்சி அமைப்பு. சென்னையின் பிற இடங்களிலும், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் இப்படிப்பட்ட படப்பிடிப்பு தளங்களை இந்த அமைப்பு உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

அதிக அளவில் படப்பிடிப்பு தளங்கள் உருவாக்கப்படுவதன் மூலம் தமிழ் படத் தயாரிப்பாளர்கள் வெளியிடங்களுக்குச் செல்லாமல் உள்ளூரிலேயே படப்பிடிப்பு நடத்த வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் அவர்கள் தயாரிக்கும் படங்களுக்கான செலவுகள் குறைய வாய்ப்பு ஏற்படுகிறது. மேலும் இதர மொழிப் படங்களும் இங்குள்ள படப்பிடிப்பு தளங்களில் பயன்படுத்திக் கொள்ள முன்வரும் வாய்ப்பு உருவாகும். இதன் மூலம் இங்குள்ள தமிழ் திரைப்படத் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கப் பெறுவது உறுதிப்படுத்தப்படும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா திரைப்படத் துறைக்கும் தனக்கும் உள்ள தொடர்பை பற்றிக் குறிப்பிடும் போது, எப்பொழுதெல்லாம் நான் முதலமைச்சராக பொறுப்பேற்கிறேனோ, அப்போ தெல்லாம் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தேவையான அனைத்து ஊக்கத்தையும் , உதவியையும், ஆதரவையும் அளித்து வருகிறேன் என்று கூறினார். அவர் வழி வந்த அரசும் தமிழ் திரையுலகத்தை ஊக்கப்படுத்தியும், வழிகாட்டியும் வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெப்சி அமைப்பின் அலுவலகத்திற்காக சென்னை100 அடி சாலையில் இடம் வழங்கினார். இந்த இடத்தில்தான் தற்போது பெப்சி அலுவலகம் இயங்கி வருகிறது.

குறைந்த முதலீட்டில் திரைப்படம் எடுக்கும் சிறு தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அந்த திரைப்படத்திற்கான மானியத் தொகையையும், திரைப்படங்களின் எண்ணிக்கையையும் ஜெயலலிதா தான் உயர்த்தினார் என்பதையும் ஒற்றைச் சாளர முறையில் படப்பிடிப்பு நடத்த அனு மதி வழங்கும் முறை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. திரைப் படத் தொழிலாளர்கள் பணிபுரியும் போது உயிரிழந்தாலோ, ஊனமுற்றாலோஅவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் ஜெயலலிதாவின் ஆட்சியிலே கொண்டு வரப்பட்டது. மறைந்த சிவாஜி கணேசன் பெயரில் விருது, பெண்களை உயர்வாக சித்தரிக்கும் திரைப்படத்திற்கு அரசு விருது, சிறந்த திரைப்பட ஒப்பனைக் கலைஞர் விருது, சிறந்த தையல் கலைஞர் விருது, பின்னணிக் குரல் கொடுப்பவர்களுக்கு விருது, சிறந்த நகைச்சுவை நடிகர் மற்றும்நடிகையர், குணச்சித்திர நடிகர் மற்றும் நடிகையர் ஆகியோருக்கு புதிய விருதுகள்ஆகியவை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தான் தோற்றுவிக்கப்பட்டன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு 50 லட்சம் ரூபாய் மானியம் அளித்தார். அதைஅரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. ஜெயலலிதாவிடம் திரைப்படத் துறையினர் வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.அதே நிலையில் தான் அவரது வழியில், அம்மாவின் அரசும் திரைப்படத் துறைக்குபல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறது.

விரைவில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்தத் தருணத்திலே தெரிவித்துக் கொள்கின்றேன். அதுமட்டுமல்லாமல், இன்றைக்கு பல தொழிலாளர்கள் வீடு இல்லாமல் இருக்கின்றார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில், குடிசை யில்லா வீடு உருவாக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டம் தீட்டினார், அந்தத் திட்டத்தைஅரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது. பல இலட்சம் வீடுகளை கட்டித் தருவதற்கு இந்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்னிடத்திலே தெரிவித்திருக்கின்றார். அவர்களுக்கு எப்படி வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், எவ்வாறு உதவி செய்ய முடியும் என்பதையெல்லாம் பரிசீலித்து உங்களுடைய தொழிலாளர்களுக்கும் சட்டப்படி, விரைவாக அரசு உங்களுக்கு உதவி புரியும்

முதன்முதலாக திரைப்படத் துறையினர் நடத்துகின்ற முதல் விழா, இந்த விழாவில் நான் கலந்து கொண்டிருக்கின்றேன். எனக்கு முன்னாலே, சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி திடீரென்று அழைப்பிதழ் அளிக்க வருவதாகச் சொன்னார், வாருங்கள் என்று சொல்லி விட்டேன். நான் வீட்டிலேஅமர்ந்திருந்த பொழுது, இந்த அழைப்பிதழைக் கொடுத்தார், நான் எப்படி உடை அணிகிறேன் என்று சுட்டிக் காட்டினார். நானெல்லாம் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன், துணை முதல்வரும் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். ஆகவே, கஷ்டம் என்றால் என்ன என்பது நன்றாகத் தெரியும். உழைக்கின்றவர்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்பதை நன்றாகப் புரிந்தவர்கள். அரசிய லில் வருவதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன. இந்த 23 அமைப்புகளும் எப்படி கஷ்டப்படு கின்றீர்கள், எப்படி வலி தாங்கிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதையெல்லாம் உங்கள் சம்மேளனத் தலைவர் அழகாக கோடிட்டுக் காட்டினார். அத்தனையையும் உணர்ந்தவர்கள் நாங்கள், உங்களோடு இருந்து பழகியவர்கள், உழைப்பில் இருந்து நாங்கள் வளர்ந்தவர்கள். ஆகவே, உழைப்பிற்கு என்றைக்கும் முன்னுரிமை வழங்குகின்ற அரசு அம்மாவினுடைய அரசு என்பதை சுட்டிக் காட்டுகிறேன்.

பக்கத்திலே ஒரு அரங்கம் கட்டித் தர வேண்டும் என்று ஒரு கோரிக்கையும் வைத்தார்கள். இங்கே எம்.ஜிஆருடைய நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை துவக்கி வைக்க வேண்டும் என்று தான் நான் இங்கே நுழைந்தேன். அதை மேடையில் வந்து பார்க்கின்ற பொழுதுதான் பல்வேறு கோரிக்கைகள் வந்தன. இவ்வளவு கோரிக்கைகள் திரைப்படத் துறைக்கு இருக்கின்றது என்று நான் இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன். இருந்தாலும், முதன்முதலாக இந்தத் திரைப்படத் துறையால் நடத்து கின்ற விழாவில் பங்கு பெற்றிருக்கின்ற நிகழ்ச்சியின் காரணமாக, அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரிலே அமைக்கப்படுகின்ற அந்த அரங்கிற்கு அம்மாவினுடைய அரசு 5 கோடி ரூபாய் நிதியை வழங்கும் என்று தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.”என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியரஜன், நடிகர் சங்க நிர்வாகிகள் விஷால், நாசர், பொன்வண்ணன், கார்த்தி உள்ளிட்ட  பல்வேறு திரையுலகினரும் கலந்து கொண்டனர்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்