32°C
விளம்பரம்
Advertisement

மு.க. ஸ்டாலின் போட்டியின்றி திமுக தலைவரானார்!

admin சேலம் Published: August 26, 2018 2 நிமிட வாசிப்பு Updated: August 27, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.

திமுக-வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக-வின் தலைவர் மற்றும் பொருளாளருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமைக் கழகத்தில் பெறப்பட்டன. இதை முன்னிட்டு தலைவர் பொறுப்புக்கான வேட்புமனுவை 65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, பொருளாளர் பொறுப்புக்கு துரைமுருகன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

27-ஆம் தேதி திங்கள்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குள் வேட்புமனு திரும்பப் பெறப்படும். பெறப்பட்ட வேட்புமனுக்கள் 27-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் பரிசீலினை செய்து வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். இந்நிலையில், திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் பொருளா ளர் பதவிக்கு துரைமுருகன் ஆகியோர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர். எனவே இவர்கள் இருவரும் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கருணாநிதிக்கு அடுத்து திமுக-வின் 2-ஆவது தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படவுள்ளார்.

மாலை 4 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரை முன் மொழிந்தும் வழிமொழிந்தும் 65 மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், பொதுக் குழு உறுப்பினர்கள் ஆகியோர் வேட்புமனுக்களைப் பூர்த்தி செய்து தாக்கல் செய்துள்ளனர். புதுவை மாநிலத்தில் உள்ளவர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை மாலை 4 மணிவரை வேட்புமனுவை திரும்பப்பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாலைக்கு மேல் வேட்புமனுவைப் பரிசீலித்து இறுதி பட்டியல் பொதுச் செயலாளரிடம் வழங்கப் படும். அதன்பின்னர், தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்கள், அவர்களுக்காக முன்மொழிந்தோர், வழி மொழிந்தோர்களின் பெயர் பட்டியலையும் 28ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் வெளியிடுவார்.தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கு ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோரைத் தவிர வேறு யாரும் மனுதாக்கல் செய்யவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக, திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனை நேரில் சந்தித்து ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று ஆசி பெற்றார். இதைத்தொடர்ந்து, கோபாலபுர இல்லத்துக்குச் சென்று கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தினார். அங்கு, தயாளு அம்மாள் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் ஆசி பெற்று அண்ணா அறிவாலயம் வந்தடைந்தார். திமுக முதன்மை செயலாளர் துரைமுருகனும் பொருளாளர் பொறுப்புக்கான வேட்புமனுவை கருணாநிதியின் நினைவிடத்தில் வைத்து ஆசிபெற்றார்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்