ஆரம்பிச்சிட்டாருய்யா.. மன்னார்குடியில் அம்மா அணி !- திவாகரன் ஆரம்பிச்சிட்டார்
“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என கட்சி ஆரம்பித்து போலி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் தினகரன்” என திவாகரன் பகிங்கரமாக குற்றம் சாட்டிய நிலையில் மன்னார்குடியில் அம்மா அணி என்ற பெயரில் அலுவலகத்தை திவாகரன் திறந்து வைத்தார்..
மறைந்த தமிழக முதலமைச்சரான ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஃபேமிலியைச் சேர்ந்த தினகரன் மற்றும் திவாகரன் இடையான மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. தினகரன் யதேச்சதிகாரமாக நடந்துகொள்வதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியிருக் கிறார். கடந்த சில மாசங்களாக உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த இந்த விவகாரம் சமீப காலமாக ஓப்பனாக வெடித்துள்ளது. ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ.வும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நடத்திவரும் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான வெற்றி வேல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதியன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார்.. அந்தப் பதிவில், “எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப் படுத்தும் எண்ணத்தில், சின்னம்மா குடும்பத்தை சார்ந்த திவாகரனும், ஜெய்ஆனந்தும் செயல் படுவது வேதனையளிக்கிறது. கடந்த ஆண்டு மறைந்த திரு.மகாதேவன் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர் களையும், மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்தரமாக எடப்பாடி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யாரென்பதும் எங்களுக்கு தெரியும். ஏதோ தங்கள் பின்னால் தான் 18 சட்ட மன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகிப் போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சின்னம்மாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திரு.திவாகரன் செயல்படுவது உண்மைக்கு புறம்பானது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, திவாகரனின் மகனான ஜெயானந்த் தான் நடத்திவரும் போஸ் மக்கள் பணியகத்தின் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். வெற்றிவேலுக்கு பதில் சொல்வதைப் போல அமைந்த அந்த அறிக்கையில், தானும் திவாகரனும் எல்லா மேடைகளிலும் டிடிவி தினகரனே முதல்வர் என்று பேசி வருவதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும், அரசியலில் தினகரனுடன் பயணித்த தால்தான் கடந்த எட்டு மாத காலமாக பா.ஜ.க. வருமான வரித்துறை மூலமாக மிகுந்த இன்னல் களையும் இம்சைகளையும் கொடுத்தார்கள் என்றும் 72 மணி நேரம் தன்னுடைய வீட்டில் தங்கி, அடிக்க வருவதுபோல செய்து, அவர்கள் விரும்பியதை எழுதி வாக்குமூலம் வாங்க நினைத்தார்கள் என்றும் கூறியிருந்தார்.
அதன் பின் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் கடந்த வாரம் பேசிய திவாகரன், ’அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் துவங்கியதில் சசிகலா உட்பட யாருக்கும் ஒப்புதல் இல்லை என்று தெரிவித்தார். இது அவருடைய குடும்பத்தினர் மட்டுமே சேர்ந்து எடுத்த முடிவு என்றும் தினகரனின் செயல்பாடுகள் தங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லையென்றும் கூறினார். அண்ணா தி.மு.கவின் சுவடே இல்லாமல் கட்சியை நடத்த வேண்டுமென தினகரன் விரும்புவ தாகவும் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என எதேச்சதிகார பாணியில் கட்சியை நடத்தவதாகவும் திவாகரன் குற்றம் சாட்டினார்.
திவாகரனின் குற்றச்சாட்டுகளையடுத்து, தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “திவாகரன் குடும்பத்தில் மூத்தவர். அதற்கான மரியாதையை அவருக்கு கொடுப்பேன். அதற்காக கட்சி நடவடிக்கைகளில் அவர் தலையிட முடியாது. அவரைவிட மூத்தவர்கள் எல்லாம் குடும்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டும் கட்சியை நடத்த முடியுமா? சசிகலா மீதான கோபத்தை திவாகரன் என்னிடம் காட்டுகிறார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் மன்னார்குடியில் அம்மா அணி என்ற கட்சியின் அலுவலகத்தினை திவாகரன் இன்று திறந்து வைத்துள்ளார்.அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இது குறித்து பேசும் பொழுது, அம்மா அணிக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்படுவர். அணியில் இணைய யாருக்கும் அழைப்பு விடமாட்டேன். விருப்பம் உள்ளவர்கள் அணியில் இணைவார்கள். தினகரனால் இழுத்து மூடப்பட்ட அம்மா அணிக்கு புத்துயிர் அளித்துள்ளேன். ஜெயலலிதா முதன்முதலில் கட்சி தொடங்கியபொழுது என்னுடைய ஆதரவாளர்களுக்கே பொறுப்புகளை தந்தார் என கூறினார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செயல்பட விருப்பம் இல்லாத நிலையில் அம்மா அணி அலுவலகம் திறக்கப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:
திவாகரன், வி.கே. சசிகலாவின் சகோதரர். டிடிவி தினகரன் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மூத்த மகன். இவரது சகோதரர் சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக சிறிதுகாலம் இருந்தார். 2011 டிசம்பரில் வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்ப உறுப்பினர்கள் 12 பேரை ஜெயலலிதா விலக்கிவைத்ததோடு, அ.தி.மு.க விலிருந்தும் நீக்கினார். பிறகு, சசிகலாவை மட்டும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, டிடிவி தினகரனையும் அவரது மைத்துனர் வெங்கடேஷையும் கட்சியில் மீண்டும் சேர்த்தார் சசிகலா என்பது குறிப்பிடத்தக்கது.




