தமிழ் குரல் / AI Voice
சவுதி அரேபியாவில் 2018ம் ஆண்டு முதல் சுற்றுலா பயணிகளுக்கான விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விசா வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக சவுதியின் சுற்றுலா மற்றும் தேசிய பாரம்பரியம் ஆணையத்தின் தலைவர் இளவரசர் சுல்தான் பின் சல்மான் பின் அப்துலாசிஸ் அறிவித்தார்.
சவுதி அரேபியாவில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் கோடிக்கணக்கான மக்களை தவிர பிறர் நுழைவது மிக கடினம். சுற்றுலாவுக்கு சவுதி அரேபியா செல்வதற்கான செலவும் மிக அதிகம். அங்கு சுற்றுலா செல்வோர் குறிப்பிட்ட ஹோட்டலில்தான் தங்க வேண்டும், குறிப்பிட்ட நிறுவனங்கள் மூலம்தான் பயணம் செய்ய வேண்டும் என்பது போன்ற பல கடினமான விதிமுறைகளைச் சந்திக்க வேண்டும். மேலும் சவுதிக்குள் நுழைய சில நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் சவுதி அரேபியாவுக்கு செல்ல அனுமதியளிக்கும் அனைத்து நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கும் விசா வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதியின் பட்டத்து இளவரசரால் சமீபகாலமாக மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்று.
இது குறித்து செய்தியாளார்களிடம் பேசிய சவுதியின் சுற்றுலா மற்றும் தேசிய பாரம்பரியம் ஆணையத் தலைவர் இளவரசர் சுல்தான் பின் சல்மான் பின் அப்துலாசிஸ் ‘‘விசா வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார். விசா பெற என்னென்ன தகுதிகள் தேவை என்பதை வரையறை செய்யும் ஒழுங்குமுறைகளை தற்போது தயாரித்து வருகிறோம்.’’
‘‘மேலும் விசாவுக்கான தொகை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால் அது முன்பைவிட குறைவாகதான் இருக்கும். எனென்றால் சுற்றுலா மூலம் கூடுதல் பணம் சம்பாதிக்கலாம். விசாவுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாகவே அமையும். அதன் மூலம் பணம் சம்பாதிக்க நினைத்தால் சுற்றுலா வருமானம் குறையும் ’’ என இளவரசர் சுல்தான் பின் சல்மான் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சவுதியில் உள்ள 50 தீவுகள் மற்றும் செங்கடல் (Red Sea) அருகே உள்ள பல இடங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான சொகுசு விடுதிகளை கட்டப்போவதாக பட்டத்து இளவரசர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


