தமிழ் குரல் / AI Voice
ராபர்ட் கோக் (Robert Koch, டிசம்பர் 11, 1843 – மே 27, 1910) ஜெர்மானிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார்[1]. இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர், 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர், மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்கா கவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.காச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905 இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ராபர்ட் கோக் ஜெர்மனிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார். அவர் ஹெர்மன் கோக் – மதில்டே ஜூலி ஹென்ரிடே பெய்வாண்ட் தம்பதியினருக்கு 1843-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஜெர்மனியின் ஹெனோவர் நகரில் பிறந்தார். இவர் பள்ளியில் சேரும் முன்னரே வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக்கொண்டார். 1862-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த அவர், அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கினார்.
தனது 19-வது வயதில் இயற்கை அறிவியல் பயில்வதற்காக கொட்டிங்கன் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். இருப்பினும் இடையிலேயே மருத்துவ துறையின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தனது துறையை மாற்றிக்கொண்டார். 1866-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த அவர் மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார்.
1885 முதல் 1890-ம் ஆண்டு வரை பெர்லின் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். அதன்பின் பிரஷ்யன் தொற்றுநோய் நிறுவனத்தின் இயக்குனராக செயலாற்றினார்.
இவர் 1877-ல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் நோய்க்கு காரணமான பாக்டீரியாவை கண்டறிந்தார். அதன்பின் 1882-ல் காசநோய் ஏற்பட காரணமாக இருக்கும் மைக்கோபாக்டீரியம் என்ற நுண்ணுயிரையும் கண்டுபிடித்தார். 1884-ம் ஆண்டில் காலரா குறித்த ஆய்வை தொடங்கிய அவர், அந்த நோய் தாக்க காரணமாக இருக்கும் வைபிரியோ காலரா என்ற நுண்ணுயிரை கண்டுபிடித்தார். அவரது இந்த கண்டுபிடிப்புகளே பின்நாளில் அந்த நோய்களுக்கு தடுப்புமருந்து கண்டுபிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

காசநோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905-ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1908-ம் ஆண்டு, சிறந்த மருத்துவர்களை கவுரவப்படுத்துவதற்காக ராபர்ட் கோக் பதக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. 27-05-1910 அன்று தனது 66-வது வயதில் மரணம் அடைந்த ராபர்ட் கோக்கை போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை ‘டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது.
