உலக நாடக தினம் – மார்ச் 27
சர்வதேச நாடக தினம் இன்று (மார்ச் 27) உலக அளவில் நாடகத்தில் ஈடுபாடு கொண்ட நாடகச் செயல்பாட்டாளர்களால் கொண்டாடப்படுகிறது. நாடகப்பள்ளிகள், நிகழ் கலை சார்ந்த நிறுவனங்கள், நாடகக்குழுக்கள், தனித்த நாடகக் கலைஞர்களுக்கு என அனைவராலும் ஒரு பொது செய்தியுடன் இந்த நாடகத்தினம் அனுசரிக்கப்படுகிறது.நாடகம் அல்லது கலை உலகில் தொலைநோக்குப் பார்வையுடன் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த ஒரு கலைஞரிடம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு செய்தி தரப்பட்டு இருபது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகங்களின் வழியாக வெளியிடப்படுகிறது.

இத்தனைக்கும் சினிமாவின் படையெடுப் புக்கு முன்பு, தமிழர்களின் வாழ்வில் பின்னி பிணைந்திருந்தது நாடகம் மட்டுமே. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில், நாடகத்தின் தாக்கம் எப்படி இருந்தது என்பதற்கு இந்த சம்பவங்களை உதாரணம் சொல்வார்கள். ‘நல்லதங்காள்’ நாடகம் நடந்துகொண்டிருந்தது. கண்ணீர் சிந்தவைக்கும் நாடகம். நல்லதங்காளுக்கு 7 குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையையும் தாலாட்டு பாடியபடி கிணற்றில் வீசுவாள் நல்லதங்காள். ஒரு கிராமத்தில் இந்த நாடகம் நடந்த போது, நல்லதங்காளாக நடித்த பெண், ஒரு குழந்தையை மட்டும் தாலாட்டு பாடாமல் கிணற்றில் போட்டாளாம். நாடகம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கொதித்து விட்டார்கள். எப்படி தாலாட்டு பாடாமல் குழந்தையை கிணற்றில் போடலாம் என்று கேட்டு மேடை ஏறிவிட்டார்கள். கிணற்றில் போட்ட குழந்தையை எடுத்துக் கொடுத்து, தாலாட்டு பாடியபின் போட சொன்னார்களாம்.
இன்னொரு சம்பவம். பாலாமணி அம்மாள், ‘தாரா சசாங்கம்‘ என்ற நாடகத்தை நடத்தினார். இதில் நடித்தவர்கள் பெண்கள் மட்டுமே. இந்த நாடகத்தில், கதாநாயகிக்கு கதாநாயகன் எண்ணெய் தேய்க்கும் காட்சி ஒன்று உண்டு. அந்தக் காட்சியில் நாயகி உடை அணிந்திருக்க மாட்டாள். இதைப் பார்க்க ஏகப்பட்ட கூட்டம். திருச்சியில் இருந்து இந்த நாடகத்துக்காக, ‘பாலாமணி ஸ்பெஷல்’ என்ற ரயில் விடப்பட்டதாம். நாயகியாக நடித்தவர் ஸ்கின் உடை அணிந்திருந்தார் என்பது அவர்களுக்குத் தெரியாது.
1940 வரை புராணம், சமஸ்கிருதக் காவியங்கள், சமுதாயச் சிந்தனை நாட்டுப்பற்று போன்ற வையே நாடகங்களில் இருந்தன. பின்னர் சுதந்திர வேட்கையை உணர்த்தும் விதமான நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. தமிழ் நாடக மேடைகளில் சீர்திருத்த நாடகங்களை அறிமுகம் செய்தவர் பம்மல் சம்பந்த முதலியார். மேடை நாடகங்களில் உரைநடைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் இவர். தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படும், சங்கரதாச சுவாமிகள், ‘சமரச சன்மார்க்க சபை’ என்ற நாடகக் குழுவை உருவாக்கியவர். இதில், கிட்டப்பா நடித்து புகழ்பெற்றார். விஸ்வநாத தாஸின் ‘வள்ளித் திருமணம்‘ நாடகம் அப்போது புகழ்பெற்ற நாடகம். முருகன் வேடத்தில் வந்த விஸ்வநாத தாஸ், மேடையில் உச்சபட்சக் குரலில் பாடிக்கொண்டிருந்தபோதே உயிர் பிரிந்துவிட்டது.
சினிமா வந்த பிறகு நாடகத்துக்கான மவுசு குறைய ஆரம்பித்தது. பாஸ்கர தாஸ், பூமி பாலக தாஸ், உடுமலை நாராயண கவி போன்ற நாடக வாத்தியார்கள், ஸ்டூடி யோக்களுக்கு தங்களை இடம் மாற்றினார்கள். நாடக கம்பெனிகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. இப்போது நாடகங்கள் முற்றிலும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நாடக கம்பெனிகள் இருந்தாலும் அதற்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் போன்றோர் காமெடி நாடகங்களை நடத்தி வருகின்றனர். இது ஓரளவு வெற்றிகரமாக சென்றாலும் முழுமையான வரவேற்பு இல்லை.
இந்நிலையில் பாலிவுட்டில் நசிருதீன் ஷா உள்பட பல திரைப்பட கலைஞர்கள் நாடகத்தில் நடிக்கிறார்கள். ஹாலிவுட் நடிகர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்ள நாடகத்தில் நடிக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமா நட் சத்திரங்கள் மட்டும் நாடகம் என்றால் விலகிப் போகிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள் நாடகம் பார்க்கவாவது வரவேண்டும். கிராமங்களில் திருவிழாக்களில் நாடகம் போட்ட கலைஞர்கள் இன்று வாழ்க்கையையே போராட்டமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதார வசதி இல்லை. நாடகத்திற்கு மக்களின் ஆதரவு குறைவாக இருக்கிறது. ஆனால் அந்த கலைஞர்கள் இன்னும் கலை தாகத்தோடு இருக்கிறார்கள். முன்பு இருந்த நிலையை ஒப்பிடும்போது இப்போது சற்று மாற்றம் வந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.
வெளிநாட்டில் உள்ளவர்கள், சினிமாவை விட பத்து மடங்கு நாடகத்தின் மேல் மதிப்பும், ஆர்வமும் கொண்டிருக்கிறார்கள். நாடக கலைஞர்களை கொண்டாடுகிறார் கள். நாடகம் ஒன்றில்தான் பாராட்டோ, திட்டோ நேருக்கு நேர் கிடைக்கும். அதிலிருக்கும் த்ரில்லே தனி. நாடக கலை அழிகிற கலையாக இருந்திருந்தால் சினிமா வந்த பத்து ஆண்டுக்குள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். என் தலைமுறை வரை அது வந்திருக்கிறது என்றால் எந்த காலத்திலும் அழியாத அற்புத கலை நாடக கலைதான் என்பதுதான் உண்மை.


