எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
நீண்ட நாட்களுக்குப் பிறகு கவுண்டமணியை முதன்மைப் படுத்தி “எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது” என்று ஒரு படம் வெளி வந்திருக்கிறது.ஆங்காங்கே ஒன்றிரண்டு பெரிய தியேட்டர்களில் பகல் காட்சியாக ஒரே ஒரு காட்சி மட்டும் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படத்தை தேடிப் பிடித்து போய் பார்த்தேன்.

காரணம்,நான் கவுண்டமணியின் வெறித்தனமான ரசிகன்.படையப்பாவில் ரஜினியைப் பார்த்து “வயசானாலும் உன் ஸ்டைல் இன்னும் குறையில” என்று ரம்யா கிருஷ்ணன் சொல்வதைப் போல இந்தப் படத்தில் வயசானாலும் கவுண்டமணியின் லொள்ளு கொஞ்சம்கூட குறையவில்லை.சாதி மறுப்பு,மூடநம்பிக்கை எதிர்ப்பு,காதல் திருமணங்களை ஊக்குவிப்பது போன்ற கொள்கைகளுடன் காதலர்களை சேர்த்து வைக்கும் ‘கேரவன் கிருஷ்ணன்’ என்கிற கதாபாத்திரத்தில் பெரியாரிஸ்ட்டாக அசத்தியிருக்கிறார் கவுண்டமணி.
இன்றைய முன்னணி சினிமா பிரபலங்கள்,அரசியல்வாதிகள் என யாரையும் விட்டு வைக்காமல் சகட்டுமேனிக்கு தன்பாணியில் நக்கலடித்து தள்ளுகிறார்.அந்த காலத்திலிருந்தே தன் காமெடியில் மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை சொல்வதோடு நிற்காமல் அறிவியல் முன்னேற்றத்தை உயர்த்திப் பிடிப்பவராகவே கவுண்டமணி இருந்திருக்கிறார்.அந்த வகையில் இந்தப் படத்தில் இணையதள சமூக ஊடகங்களை உயர்த்திப் பிடிக்கிறார் கவுண்டமணி.
இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் சமூக ஊடகங்களும் கவுண்டமணியை எப்போதுமே உயர்த்திப் பிடித்து வருகின்றன என்பதுதான்.இன்றைய இளைய தலைமுறை விவரம் தெரிந்து வளர்கிற காலகட்டத்தில் கவுண்டமணி கிட்டத்தட்ட ஓய்வு பெற்று விட்டார் என்றே சொல்லலாம்.
இருந்தாலும் இன்று சமூக ஊடகங்களில் அவர் இல்லாமல் ஒரு மீம்ஸ் கிடையாது என்பதில் இருந்தே இன்றைய தலைமுறை மத்தியிலும் அவரது தாக்கம் எந்த அளவு உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.வாழ்க கவுண்டமணி!


