இன்னாது.. இந்தியா முழுக்க மது விலக்கா? ஐயே.. ஆசையை பாரு.! –
நம்ம தமிழ்நாட்டில் மது விலக்குக்காக ஆங்கிலேயரது ஆட்சிக் காலத்திலேயே -அதாவது1886-ல் மதராஸ் அப்காரி சட்டம் என்ற ஒரு சட்டம் இயற்றப்பட்டது என்று சொன்னால் வியப்பாக இருக்கிறதோ?. அப்காரி என்ற சொல்லுக்குப் போதை ஊட்டும் பானங்களையோ மருந்துகளையோ தயாரிப்பது அல்லது விற்பது என்பது பொருளாகும். இச்சொல், பெர்ஷிய மொழிச் சொல்லாகும். இந்தச் சொல்லுக்கு இன்னொரு பொருள் மதுபானம் மற்றும் மருந்துகள் தயாரிப்பது அல்லது விற்பதற்கு விதிக்கப்படும் வரி என்பதாகும்.

மதராஸ் அப்காரி சட்டம், 1905, 1913, 1929 ஆகிய ஆண்டுகளில் திருத்தம் செய்யப்பட்டு, அதன் பின்னால் ஒரு புதுச் சட்டமாக 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் முதல் நோக்கம் என்னவென்றால், போதையூட்டும் பானங்களையும், மருந்துகளையும் தயாரிப்பது, விற்பது மற்றும் அருந்துவது ஆகிய அனைத்தையும் தடை செய்வதாகும். ஆனால் பின்னாளில், மதுபானங்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் அருந்துதலை ஒழுங்குபடுத்தும் சட்டமாக இது மாற்றப்பட்டுவிட்டது.
1947-ல், இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 26.1.1950-ல் நமது அரசியல் நிர்ணயச் சட்டம் அமலுக்கு வந்தபிறகு, அதில் மருத்துவத் தேவையைத் தவிர மற்ற எந்தக் காரணத்துக்காகவும் மது அருந்துவதைத் தடை செய்வதற்கு எல்லா மாநிலங்களும் தீவிர முயற்சி எடுக்க வேண்டும் என்னும் உறுதிப்பாடு, பிரிவு 47-ல் கொண்டுவரப்பட்டது. இது ஏட்டளவில் நின்றுபோய், பெருவாரியான மாநிலங்கள் மது விலக்கைத் தளர்த்தி, குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளை உடல் மற்றும் மனவளம் குன்றியவர்களாக ஆக்கிவிட்டது. கடந்த 67 ஆண்டுகளாகச் சுதந்திர இந்தியாவில் பல மாநிலங்கள் மது விற்பனையால் வரும் வருமானத்தைக்கொண்டே மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்துவதாகக் கூறுகின்றன.
இந்நிலையில் மக்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது பேசிய ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் கவுசலேந்திர குமார், “பிஹார் மாநில அரசு மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது போன்று, நாடுமுழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வரும் எண்ணம் மத்திய அரசுக்கு உள்ளதா” எனக் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த உள் துறை இணையமைச்சர் ஹன்ஸ் ராஜ் கங்காராம் ஆஹிர், “நாடு தழுவிய மதுவிலக்கைக் கொண்டு வரும் திட்டம் அரசுக்கு இல்லை. இது மாநில அரசு விவகாரம். எனவே, தேவையைப் பொறுத்து மதுவிலக்கைக் கொண்டு வருவது மாநில அரசுகளின் பொறுப்பு. உதாரணமாக குஜராத்தில் ஏற்கெனவே மதுவிலக்கு அமலில் உள்ளது. பல்வேறு மாநில அரசுகள் மதுவிலக்கை அமல் படுத்த முடிவு செய்தால், மத்திய அரசு அவைகளுக்கு நிச்சயம் உதவும். பிஹாரில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் உயிர்ப்பலி நிச்சயம் குறையும்” எனத் தெரிவித்தார்.
பிஜு ஜனதா தளம் உறுப்பினர் நாகேந்திர குமார் பிரதான் பேசும் போது, “நாடுதழுவிய மதுவிலக்கு நிச்சயம் தேவை. சுதந்திரம் பெறுவதற்கு முன்பு மகாத்மா காந்தி ஒரு முறை பேசும்போது தேச விடுதலையை விட மதுவிலக் குக்கே முதல் முன்னுரிமை என தெரிவித்துள்ளார். மதுவிலக் குக்கு ஆதரவாக தேசப்பிதாவே கருத்து தெரிவித்திருப்பதால் மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும்” என்றார்.
பாஜக உறுப்பினர் கிரித் சோலங்கி கள்ளச்சாரயம் குடிப்ப தால் நாடு முழுவதும் ஏராளமான வர்கள் உயிரிழப்பது தொடர்பாக கவலை தெரிவித்தார் என்பது அடிசினல் தகவல்


