அடுத்த மாசமும் ஒரு எலெக்‌ஷன் வருது1 – இது ராஜ்ய சபா எம்.பி. க்கான எலெக்‌ஷன்!

அடுத்த மாசமும் ஒரு எலெக்‌ஷன் வருது1 – இது ராஜ்ய சபா எம்.பி. க்கான எலெக்‌ஷன்!

தமிழக சட்டசபைத் தேர்தல் ஜூரம் உச்சக் கட்டத்தில் இருக்கும் நிலையில் பார்லிமெண்டின் ராஜ்ய சபாவைச் சேர்ந்த 57 உறுப்பினர்கள் பதவிக்கு ஜூன் 11-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பில் தமிழகத்திலும் 6 பதவிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 15 மாநிலங்களில் இருந்து வரும் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலாவதியாக உள்ளது.

rajya sabha may 13

இது குறித்து, இன்று மாலை மத்திய தேர்தல் ஆணையத்தின் இயக்குநர் திரேந்தர் ஓஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்படி, வரும் மே 24-ல் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட பின் மனு தாக்கல் செய்யலாம். இதற்கான கடைசி தேதி மே 31 எனவும், இதை பரிசீலனை செய்யும் நாள் ஜூன் 1 என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மனுக்கள் வாபஸ் பெற கடைசி தேதியாக ஜூன் 3 குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 11 ஆம் தேதி காலை 9.00 முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவிருக்கும் தேர்தலின் வாக்குகள் அடுத்த ஒரு மணி நேரத்தில் எண்ணப்படும். இது போன்ற மாநிலங்களவையின் உறுப்பினர்கள் தேர்தலின் முடிவுகள் அநேகமாக அதே நாள் வெளியாகி விடுவது வழக்கமாக உள்ளது.

தமிழகத்தில் ஆறு உறுப்பினர்கள்

மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான இந்த தேர்தலில் தமிழகத்திலும் ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் பதவி வரும் ஜுன் 29-ல் காலியாக உள்ளன. இதில் அதிமுக சார்பில் தற்போதைய மாநிலங்களவை கட்சித் தலைவரான நவநீதி கிருஷ்ணன், முன்னாள் பத்திரிகையாளரான ஏ.டபிள்யூ.ரபி பெர்ணார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் உள்ளனர். காங்கிரஸில் சுதர்சன நாச்சியப்பன், திமுகவில் கே.பி.ராமலிங்கம் மற்றும் எஸ்.தங்கவேலுவும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பதவிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்.

மற்ற மாநிலங்கள்

ஆந்திரபிரதேசம் 4 பேர், தெலுங்கானா 2 பேர், சத்தீஸ்கர் 2 பேர், மபி 3 பேர், கர்நாடகா 4 பேர், ஒடிஷா 3 பேர், மகராஷ்ட்ரா 6 பேர், பஞ்சாப் 2 பேர், ராஜஸ்தான் 4 பேர், உபி 11 பேர், உத்தராகண்ட் ஒருவர், பிஹார் 5 பேர், ஜார்கண்ட் மற்றும் ஹரியானா தலா இரண்டு பேர் என்று மற்ற மாநிலங்களின் உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

மத்திய அமைச்சர்கள்

இந்த 57 உறுப்பினர்களில் பல்வேறு மாநிலங்கள் மூலமாக மத்திய அமைச்சர்களும் இடம் பெற்றுள்ளனர். கர்நாடகா மாநிலம் சார்பு உறுப்பினரான நாடாளுமன்ற விவாகரத்துறையின் மத்திய அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு மற்றும் ஆந்திரா மாநிலம் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய வர்த்தக்கதுறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மாநிலங்களை உறுப்பினர் பதவியும் முடிவு பெற உள்ளது. உ.பி.யில் நாடாளுமன்ற விவாகரத்துறையின் மத்திய இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலாவதியாக உள்ளது.

மெஜாரிட்டியில் காங்கிரஸ்

மாநிலங்களவையில் தற்போதுள்ள நிலவரப்படி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் அதிகமாக உள்ளனர். கடந்த 2014-ல் நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றமையால் இந்த நிலை, பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், கடந்த வருட பிஹார் மாநில தேர்தலில் பாஜகவிற்கு ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அக்கட்சிக்கு மாநிலங்களவையில் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தற்போது, நடைபெற்று வரும் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களிலும் பாஜகவிற்கு வாய்ப்புகள் குறைவு எனக் கருதப்படுகிறது. எனவே, மாநிலங்களவையில் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை காங்கிரஸை விட அதிகரிக்காது எனக் கருதப்படுகிறது.