இந்திய கிராமங்கள் முழுசும் நெட் ஒர்க்கிங்! – மத்திய அரசு மும்முரம்

இந்திய கிராமங்கள் முழுசும் நெட் ஒர்க்கிங்! – மத்திய அரசு மும்முரம்

சர்வ தேச அளவில், சீனாவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் 40 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள், (87%) தங்கள் மொபைல் போன்களின் வழியே தான், இணையத்தை அணுகித் தங்கள் தேடலை மேற்கொள் கின்றனர். இந்தியாவில் உள்ள, 5 லட்சத்து 97 ஆயிரத்து 608 கிராமங்களில், 5 லட்சத்து 41 ஆயிரத்து 939 கிராமங்களில் தற்போது மொபைல் இணைப்பு கிடைத்து வருகிறது. இன்னும் 55,669 கிராமங்களுக்கு மட்டுமே மொபைல் இணைப்பு வழங்க வேண்டியதுள்ளது. இது மொத்த கிராமங்களின் எண்ணிக்கையில் 9.31% மட்டுமே.

digi may 9

மொபைல் போன் இணைப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, நகர்ப்புறங்களில் தான் இது மிக அதிகமாக உள்ளது. 152.36% இணைப்பு இங்கே உள்ளது. கிராமப்புறங்களில், 48.79% மொபைல்போன் இணைப்பு தரப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில், 4ஜி இணைப்பு வேகமாக வளர்ந்து வருகையில், கிராமப் புறங்களில், இன்னும் 2ஜி இணைப்புதான் முதன்மையாக உள்ளது. இருப்பினும், கிராமப் புறங்களை, நகர்ப்புற அளவிற்குத் தகவல் தொழில் நுட்பத்தில் உயர்த்த அரசு முனைந்து வருவதாக, மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார். 2017ல், கிராமங்களில், மொபைல் போன் இணைப்பினை 70% ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாட்டில் உள்ள 55,669 கிராமங்களுக்கு வரும் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் செக் போன் இணைப்புகளை பல்வேறு கட்டங்களாக வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.கடந்த 2 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறை தயாரித்த அறிக்கையில், “வடகிழக்குப் பிராந்தியத்துக்கு ரூ.5,336.18 கோடி மதிப்பிலான தொலைத்தொடர்பு வளர்ச்சித் திட்டத்துக்கு ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி தீவிரவாத பாதிப்பு உள்ள பகுதிகளில் 2,199 செல்போன் கோபுரங்களில் 1,517 கோபுரங்களின் செயல்பாடு தொடங்கியுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. வடகிழக்குப் பிராந்தியங்களில் 8,621 கிராமங்களில் செல் போன் இணைப்பு வழங்க அடுத்த ஆண்டுக்குள் (2017) 321 செல்லிடப்பேசி கோபுரங்களை நிறுவும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவின் கிராமப்புறங்களை அகண்ட வரிசை தொலைத் தொடர்பு வசதி மூலம் இணைப்பதற்காக, கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி 48,199 கிராம ஊராட்சிகளில் ஒளியிழை (ஆப்டிக் ஃபைபர்) பதிக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. மேலும் 55,699 கிராமங்களுக்கு வரும் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் செல்லிடப்பேசி இணைப்புகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.