ஆட்டோ அடாவடி: பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்!
அதிக கட்டணம் வசூலிப்பது, அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்வது உள்ளிட்ட விதி முறைகளை மீறி செயல்படும் ஆட்டோக்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க தமிழக அரசு சார்பில் ‘1800 425 5430’ என்ற இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த எண்கள் பொதுமக்களின் பார்வைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக விருகம்பாக்கம், வடபழனி, கோயம் பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விருகம்பாக்கம் வட்டார போக்குவரத்து அதிகாரி ரவிச் சந்திரன் தலைமையில், தமிழக அரசு அறிவித்த இலவச தொலைபேசி எண்கள் அச்சிடப்பட்ட ‘ஸ்டிக்கரை’ ஆட்டோக்களில் ஒட்டும் பணி நடைபெற்றது.

இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள்,”ஆட்டோக்களில் அதிக பயணிகள் ஏற்றுவது, அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள் குறித்து அடிக்கடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறும் ஆட்டோக்கள் குறித்து, தமிழகத்தில் எந்த இடத்தில் இருந் தாலும் ‘1800 425 5430’ என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இந்த தொலைபேசி அழைப்புக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது.
பொதுமக்கள், புகார் குறித்த ஆட்டோவின் எண், எந்த இடம் என்று தெரிவித்தால் மட்டும் போதும். அந்த தகவல் பதிவு செய்யப்பட்டு உடனே புகார் தெரிவிக்கப்பட்ட ஆட்டோ மற்றும் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இதில் ஆட்டோவை பறிமுதல் செய்து 10 நாட்களுக்கு ஆட்டோ செல்ல தடை விதிக்கப்படும். 10 நாட்கள் கழித்தே அந்த ஆட்டோ விடுவிக்கப்படும். தொடர்ந்து 3 முறை புகார்களில் சிக்கினால் அந்த ஆட்டோவின் உரிமம் மற்றும் டிரைவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.


