குறைந்தபட்ச தினக்கூலி மீண்டும் உயர்கிறது?
இந்தியாவில் கூலித்தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச தினக்கூலி ரூ.137 ஆக இருந்து வந்தது. இதை ரூ.160 ஆக உயர்த்தி மத்திய அரசு கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இது தொடர்பாக அனைத்து மாநில முதல்–மந்திரிகள், யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர்களுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பண்டாரு தத்தாத்ரேயா கடிதம் எழுதினார்.

அதில் அவர், ‘‘அனைத்து பட்டியலிடப்பட்ட வேலைகளிலும் குறைந்தபட்ச தினக்கூலியை ஜூலை 1–ந் தேதி முதல் ரூ.137–ல் இருந்து ரூ.160–க்கு குறைவில்லாமல் நிர்ணயிக்கவும், மாற்றி அமைக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.இதன்காரணமாக 34 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுகிற நிலை ஏற்பட்டது. இந் நிலையில், 2–வது தொழிலாளர் கமிஷன் வரையறுத்த அளவுக்கேற்ப தொழிலாளர்களின் குறைந்தபட்ச தினக்கூலியை மீண்டும் உயர்த்துவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
இதுபற்றி மத்திய தொழிலாளர் நலத்துறை செயலாளர் சங்கர் அகர்வால், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘குறைந்தபட்ச தினக்கூலியை உயர்த்துவது குறித்து, தொழிலாளர் நல அமைச்சகத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. 2–வது தொழிலாளர் ஆணையம், இந்திய தொழிலாளர் மாநாடு, முந்தைய திட்டக்கமிஷன் ஆகியவை நிர்ணயித்த அளவுகளை உறுதி செய்கிற வகையில் கூலி அளவு இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்’’ என கூறினார். அதே நேரத்தில், கூலி உயர்வு செய்வது என்பது விவாத அளவில் இருப்பதால், தினக்கூலியை எவ்வளவு உயர்த்துவது என்பது பற்றி இன்னும் அமைச்சகம் கணக்கிடவில்லை எனவும் தெரிவித்தார்.


