32°C
விளம்பரம்
Advertisement

சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்: சன் டிவியின் புதிய திரைப்புரட்சி!

admin Published: August 22, 2026 3 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


ந்திய திரைத்துறை வரலாற்றில் பொழுதுபோக்குக் கட்டமைப்பு மிக வேகமாக உருமாறி வருகிறது. ஸ்மார்ட்போன்களின் வரவுக்குப் பிறகு, பெரிய திரையில் படம் பார்ப்பவர்களை விட, கைகளில் இருக்கும் கைப்பேசியில் நொடிக்கு நொடி சுவாரசியமான காட்சிகளைத் தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இந்த நுகர்வு மாற்றத்தை உணர்ந்து, இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான சன் டிவி நெட்வொர்க், தனது ‘சன் நெக்ஸ்ட்‘ செயலியில் ‘சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ்’ எனும் புதிய குறு நாடக (மைக்ரோ டிராமா) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோஸ்டார் மற்றும் சீ என்டர்டெயின்மென்ட் ஆகிய முன்னணி நிறுவனங்களைத் தொடர்ந்து, சன் குழுமமும் இந்த குறுகிய காலக் கதை சொல்லல் களத்தில் தடம் பதித்துள்ளது.

தென்னிந்திய மொழிகளில் உருவாகும் மாபெரும் கலைக்களஞ்சியம்

சன் நெக்ஸ்ட் ஷார்ட்ஸ் சேவை தனியாக ஒரு செயலியாக வராமல், ஏற்கனவே மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட சன் நெக்ஸ்ட் செயலியின் உள்ளேயே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு முக்கிய தென்னிந்திய மொழிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் குறு நாடகங்கள் இதன் மூலம் வழங்கப்படுகின்றன.

இதில் முற்றிலும் புதிதாக தயாரிக்கப்பட்ட மைக்ரோ டிராமக்கள், சர்வதேச அளவில் புகழ்பெற்ற குறு நாடகங்களின் தமிழ் மொழியாக்கங்கள் மற்றும் சன் நெக்ஸ்ட் களஞ்சியத்தில் உள்ள புகழ்பெற்ற திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களின் மறுதொகுப்புகள் ஆகியவை இடம்பெறுகின்றன.

தொலைக்காட்சி திரையிலும் புதிய அனுபவம்

பொதுவாக குறு நாடகங்கள் அல்லது ரீல்ஸ் வடிவங்கள் கைபேசியின் செங்குத்து (Vertical) திரைக்கு மட்டுமே ஏற்றவாறு உருவாக்கப்படும். ஆனால், சன் டிவி நெட்வொர்க் இதில் ஒரு புதிய தொழில்நுட்ப அணுகுமுறையைக் கையாண்டுள்ளது.

ஸ்மார்ட்போன்களில் பார்ப்பவர்களுக்கு மிக நெருக்கமான “க்ளோஸ்-அப்” காட்சிகளுடனும், தொலைக்காட்சி பெட்டிகளில் (TV) பார்ப்பவர்களுக்கு ஏற்றவாறு “4:3” விகிதத் திரையிலும் காட்சிப்படுத்தும் வகையில் உள்ளடக்கங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக குறு நாடகங்களை வீட்டில் உள்ள பெரிய தொலைக்காட்சி திரையிலும் ரசிக்கும் வாய்ப்பை சன் டிவி உருவாக்கியுள்ளது.

காப்பகங்களின் மறுவாழ்க்கை: எந்திரன் முதல் எதிர் நீச்சல் வரை

சன் டிவியிடம் உள்ள மிகப்பெரிய பலம், பல தசாப்தங்களாக அது சேமித்து வைத்துள்ள பல்லாயிரம் மணிநேர கலைக் கருவூலங்கள் ஆகும். புதிய நாடகங்களை மட்டும் நம்பியிருக்காமல், தனது பழைய வெற்றிப் படங்களையும், மாபெரும் வரவேற்பைப் பெற்ற மெகா தொடர்களையும் குறுகிய அத்தியாயங்களாக மறுதொகுப்பு செய்து வெளியிடுகிறது.

ரஜினிகாந்தின் எந்திரன், சூர்யாவின் அயன், தனுஷின் திருச்சிற்றம்பலம் போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் குறு தொடர்களாக உருமாறுகின்றன.

தொலைக்காட்சித் தொடர்களைப் பொறுத்தவரை:
தமிழில்: எதிர்நீச்சல், காயல், சுந்தரி
மலையாளத்தில்: நந்தினி, பெய்தொழியாதே, சுந்தரி
தெலுங்கில்: நந்தினி, சுப சங்கல்பம், சிவங்கி
கன்னடத்தில்: அண்ணா தங்கி, ஜனனி, கன்யாதானா

ஆகிய புகழ்பெற்ற தொடர்கள் ரீமாஸ்டர் செய்யப்பட்டு, திரை அளவுக்கு ஏற்ப மாற்றப்பட்டு, விறுவிறுப்பான குறுகிய அத்தியாயங்களாக மாற்றப்படுகின்றன.

நிறுவனத் தலைவர்களின் பார்வை மற்றும் இலக்கு

நுகர்வோரின் விருப்பங்கள் மாறிவருவதைக் குறித்து சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாக இயக்குநர் காவியா மாறன் பேசுகையில், ரசிகர்கள் அதிகளவில் உள்ளடக்கங்களை விரும்புவதோடு மட்டுமல்லாமல், அவற்றை வெவ்வேறு திரைகளில், குறைந்த நேரத்தில், தடங்கலின்றி பார்க்க விரும்புகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

தங்களிடம் உள்ள 65,000 மணி நேரத்திற்கும் அதிகமான கலைப் படைப்புகள், மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் மிகப்பெரிய விநியோகக் கட்டமைப்பு ஆகியவை புதிய நிறுவனங்களால் ஒரே இரவில் உருவாக்க முடியாதவை என்றும், இந்த பாரம்பரிய சொத்துக்களை அடுத்த தலைமுறைக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

சன் நெக்ஸ்ட் அமைப்பின் தலைவர் ராகேஷ் சீகே கூறுகையில், இது வெறும் பழைய படைப்புகளின் மறுபதிப்பு மட்டுமல்ல, மக்களுடன் ஆழமான உணர்ச்சிப்பூர்வமான தொடர்பைக் கொண்ட பழைய காப்பகங்களுடன், இந்த புதிய ஊடகத்திற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்படும் புதிய கதைகளும் இணைந்த ஒரு இரட்டை உத்தி என்று கூறினார்.

ஒளிபரப்பு உலகில் புதிய போட்டி

இந்தியாவில் மைக்ரோ டிராமா சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. ஜியோஸ்டார் நிறுவனம் தனது ‘ஜியோஹோட்ஸ்டார்’ செயலியில் ‘தட்கா’ எனும் பிரிவைத் தொடங்கி 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை ஈர்த்துள்ளது. சீ நிறுவனம் ‘புல்லட்’ எனும் தளம் மூலம் இதில் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்த வரிசையில் தற்போது சன் டிவியின் வருகை, தென்னிந்திய டிஜிட்டல் பொழுதுபோக்கு சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.

சியாமளா

உடனடி செய்திகள்