32°C
விளம்பரம்
Advertisement

ஜென் ஆல்ஃபா புரட்சி:இந்தியக் கல்வி அமைப்பின் முகத்திரையைக் கிழித்த அரசுத் தரவுகள்!–

admin Published: August 22, 2026 4 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க / Listen to News


ந்திய வரலாற்றில் இல்லாத வகையில் ஒரு புதிய தலைமுறை மாணவர்களின் போராட்டம் நாடு முழுவதும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. ஜென் ஆல்ஃபா என்று அழைக்கப்படும் 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு பிறந்த பள்ளிச் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள், தங்களுக்கு அடிப்படையாகக் கிடைக்க வேண்டிய கல்வியையும் அடிப்படை வசதிகளையும் கேட்டு வீதிக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் அமீர்பூரில் பள்ளிக்குச் செல்ல ஒரு நல்ல சாலை கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஆறு கிலோமீட்டர் தூரம் பேரணியாகச் சென்ற 300 குழந்தைகள், லக்னோவில் போதிய ஆசிரியர்கள் இல்லாததைக் கண்டித்து வீதிக்கு வந்த 250 மாணவிகள், ஜெய்ப்பூரில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கழிப்பறை வசதி கேட்டு குரல் கொடுத்த குழந்தைகள் என நாட்டின் பல பகுதிகளில் இந்த அமைதியான புரட்சி வெடித்துள்ளது. இந்தச் சிறுவர்களின் கோரிக்கைகள் மிகவும் எளிமையானவை. எங்களுக்குப் பாடம் நடத்த ஆசிரியர் வேண்டும், பயன்பாட்டில் இருக்கும் கழிப்பறை வேண்டும், விளையாட மைதானம் வேண்டும், பள்ளிக்குச் செல்ல ஒரு நல்ல சாலை வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு.

அரசு அறிக்கையும் பிரதிபலிக்கும் நிஜமும்

சிறுவர்கள் தொடுக்கும் இந்தப் போராட்டங்கள் ஏதோ ஒரு சில பகுதிகளில் மட்டும் நடக்கும் தனிப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்பதை ஒன்றிய அரசின் சமீபத்திய யுடிஐஎஸ்இ பிளஸ் (UDISE+) தரவுகள் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. நாட்டின் கல்வி உள்கட்டமைப்பில் இருக்கும் மிகப்பெரிய இடைவெளியை இந்த அரசுத் தரவுகள் உறுதி செய்கின்றன. இந்தியாவில் உள்ள 14.66 லட்சத்திற்கும் அதிகமான பள்ளிகளில் 24.7 கோடிக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். நாட்டின் மொத்தப் பள்ளிகளில் 68.4 சதவீதப் பள்ளிகளை மாநில அரசுகளும், 23.3 சதவீதப் பள்ளிகளைத் தனியார் நிர்வாகங்களும் நடத்துகின்றன. ஆனால் இந்த பிரமாண்ட அமைப்பில் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள் எந்த அளவிற்குப் பின்தங்கியுள்ளன என்பதை புள்ளிவிவரங்கள் அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றன.

ஒரே ஒரு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத பள்ளிகள்

இந்தியக் கல்வி அமைப்பின் மிகப்பரிய முரண்பாடாக இருப்பது ஆசிரியர்களின் பகிர்வு முறைதான். ஒன்றிய அரசின் தரவுகளின்படி, இந்தியாவில் 1,00,843 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரைக் கொண்டு இயங்கி வருகின்றன. இந்த ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில் மட்டும் சுமார் 29 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் படிக்கிறார்கள். ஒரு பள்ளியின் அனைத்து வகுப்புகளுக்கும், அனைத்துப் பாடங்களுக்கும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்தும் சூழல் இங்கு நிலவுகிறது. இதற்கு நேர்மாறாக, இந்தியாவில் ஒரு மாணவர் கூட சேர்க்கப்படாத 5,663 பள்ளிகள் உள்ளன. ஆனால் இந்த மாணவர்களே இல்லாத பள்ளிகளில் 20,667 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஒருபுறம் ஆசிரியர்கள் இல்லாமல் லட்சக்கணக்கான மாணவர்கள் தவிக்கும் போது, மறுபுறம் மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் சம்பளம் பெற்று வரும் முரண்பாடு நிலவுகிறது.

மாநிலங்களுக்கிடையேயான உள்கட்டமைப்பு இடைவெளி

இந்தியாவில் பள்ளிகளின் வசதிகள் மாநிலத்திற்கு மாநிலம் பெரும் வேறுபாட்டைக் கொண்டுள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 36 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் நிலவுகிறது. கர்நாடகாவில் உள்ள மொத்தப் பள்ளிகளில் 10.8 சதவீதம், அதாவது 8,042 பள்ளிகள் ஒரே ஒரு ஆசிரியரை மட்டுமே கொண்டு இயங்குகின்றன. கேரளா போன்ற கல்வியில் சிறந்த மாநிலத்தில் 92.6 சதவீதப் பள்ளிகளில் இணையதள வசதியும், 99.1 சதவீதப் பள்ளிகளில் கணினி வசதியும் உள்ளது. ஆனால் அதே கேரளாவில் ஒரு மாணவர் கூட இல்லாத 68 பள்ளிகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 99 சதவீதப் பள்ளிகளில் இணையதள வசதி இருந்தாலும், மாநில அரசுப் பள்ளிகளில் வெறும் 0.8 சதவீதப் பள்ளிகளில் மட்டுமே டிஜிட்டல் நூலகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் வெறும் 19.7 சதவீதப் பள்ளிகளில் மட்டுமே இணையதள வசதி உள்ளது.

டிஜிட்டல் இந்தியாவின் நிஜ நிலவரமும் மாற்றுத்திறனாளி மாணவர் நிலையும்

நாடு முழுவதும் டிஜிட்டல் கல்வியை நோக்கி நகர்வதாகப் பேசப்பட்டாலும், நிஜத்தில் 67.4 சதவீதப் பள்ளிகளில் மட்டுமே இணையதள வசதி உள்ளது. 63.1 சதவீதப் பள்ளிகளில் மட்டுமே இயங்கும் நிலையிலான கணினிகள் உள்ளன. நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் வெறும் 7.1 சதவீதப் பள்ளிகளில் மட்டுமே டிஜிட்டல் நூலகங்கள் இருக்கின்றன. தனியார் பள்ளிகள் இணையதள வசதியிலும் (79.2%), கணினி வசதியிலும் (74%) அரசுப் பள்ளிகளை விட முன்னணியில் இருக்கின்றன.

அதே நேரத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான வசதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மேகாலயாவில் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான கழிப்பறை வசதி வெறும் 6.3 சதவீதப் பள்ளிகளில் மட்டுமே உள்ளது. நாடு தழுவிய அளவில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்புச் சாய்தள வசதி அரசுப் பள்ளிகளில் 88.2 சதவீதம் இருக்கும் வேளையில், தனியார் பள்ளிகளில் அது 60.4 சதவீதமாக மட்டுமே உள்ளது. அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி அரசுப் பள்ளிகளில் 35.6 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 44.7 சதவீதமும் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

மாற்றத்திற்கான எச்சரிக்கை மணி

நாட்டில் உள்ள 81.9 சதவீதப் பள்ளிகளில் மட்டுமே விளையாட்டு மைதானங்கள் உள்ளன. சிறுமிகளுக்குப் பயன்படக்கூடிய கழிப்பறைகள் அரசுப் பள்ளிகளில் 95.3 சதவீதமும், தனியார் பள்ளிகளில் 96.9 சதவீதமும் உள்ளன. வெளிப்படையாகப் பார்க்கும்போது இந்த எண்கள் பெரியதாகத் தெரிந்தாலும், கழிப்பறை வசதியும், குடிநீர் வசதியும் இல்லாமல் லட்சக்கணக்கான பெண் குழந்தைகள் பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே கைவிடும் சூழல் இன்னமும் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. புதிய தலைமுறை குழந்தைகள் தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக வீதிக்கு வந்து போராடத் தொடங்கியிருப்பது, இந்தியக் கல்வி நிர்வாகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாகும். தாள்கள் மற்றும் அறிக்கைகளில் இருக்கும் வளர்ச்சி புள்ளிவிவரங்களைத் தாண்டி, வகுப்பறைகளின் நிஜ நிலையை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தை இந்த மாணவர்கள் அரசுக்கு உணர்த்தியுள்ளனர்.

பிச்சையாராஜா

உடனடி செய்திகள்