ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் “திரிஷ்யம் 3”!
இந்தியத் திரை உலகில் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானருக்கு புதிய இலக்கணம் எழுதிய ‘திரிஷ்யம்’ திரைப்படத் தொடரின் அடுத்த அதிரடி அத்தியாயமான “திரிஷ்யம் 3” திரைப்படத்தின் உலகளாவிய டிஜிட்டல் வெளியீட்டை முன்னணி ஓடிடி தளமான பிரைம் வீடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மொழிகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களாலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட ஜார்ஜ்குட்டியின் இந்த இறுதிப் போராட்டம், வரும் ஜூன் 18 முதல் உலகம் முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
அசுரக் கூட்டணியின் அடுத்த அற்புதம்
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்திய சினிமாவைத் தன் அசாத்திய திரைக்கதையால் கட்டிப்போட்டுள்ள ஜீத்து ஜோசப் எழுதி, இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தை PEN Studios மற்றும் Panorama Studios வழங்க, ஆண்டனி பெரும்பாவூர் தனது Aashirvad Cinemas நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். ‘திரிஷ்யம்’ பிராண்டின் முதுகெலும்பாக விளங்கும் உலகநாயகன் மோகன்லால், மீனா மற்றும் சித்திக் ஆகியோர் மீண்டும் தங்களின் அசல் கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது டிஜிட்டல் தளத்திற்கு இப்படம் வரவுள்ளது.

கடந்த காலம் புதைந்த இடத்திலேயே இருக்க மறுக்கிறது: கதைக்களம்
‘திரிஷ்யம் 2’ சம்பவங்களுக்குப் பிறகு, ஜார்ஜ்குட்டி தனது குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பான, அமைதியான எதிர்காலத்தை உருவாக்கியுள்ளார். தன் கடந்தகாலப் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு வெற்றிகரமான திரைப்படத்தையும் அவர் தயாரித்து விடுகிறார். ஆனால், விதி வேறு ஒரு திட்டத்தோடு காத்திருக்கிறது.
ஜார்ஜ்குட்டியின் அந்தத் திரைப்படத்தின் பின்னணியில் உள்ள உண்மைக்கதையை இரு பத்திரிகையாளர்கள் தீவிரமாக ஆராயத் தொடங்குகின்றனர். அதே சமயம், அவரது மூத்த மகள் அஞ்சுவுக்கு ஏற்பாடு செய்யப்படும் திருமண முயற்சியானது, எதிர்பாராதவிதமாக உயிருக்கு ஆபத்தான ஒரு பெரும் சதியாக மாறுகிறது. பழைய எதிரிகள் புதிய உத்திகளுடன் ஜார்ஜ்குட்டியின் குடும்பத்தை வேட்டையாட மீண்டும் வருகிறார்கள். பயம், குற்றவுணர்வு, சந்தேகம் என நாற்புறமும் ஆபத்துகள் சூழ்ந்து கொள்ள, தனது குடும்பத்தையும் அவர்களின் ரகசியங்களையும் காப்பாற்ற ஜார்ஜ்குட்டி மீண்டும் தனது அசாத்திய புத்திக்கூர்மையை நம்பிக் களமிறங்குவதே ‘திரிஷ்யம் 3’ இன் விறுவிறுப்பான கதைக்களம்.
நீடித்த கதை சொல்லலின் ஆகச்சிறந்த உதாரணம்
பிரைம் வீடியோ இந்தியாவின் Content Licensing பிரிவின் இயக்குநரும் தலைவருமான மனீஷ் மெங்கானி இத்திரைப்படம் குறித்துப் பேசுகையில்,
“இந்திய சினிமாவில் திரிஷ்யம் போன்ற சாதனையை நிகழ்த்திய திரைப்படத் தொடர்கள் மிகக் குறைவு. ஒரு தசாப்தத்திற்கு முன்பு மலையாளத்தில் தொடங்கிய இந்தக் கதை, இன்று மொழிகளையும் நாடுகளையும் தாண்டி கொண்டாடப்படுகிறது. ஜார்ஜ்குட்டி இனி ஒரு கதாபாத்திரம் மட்டுமல்ல; இந்திய சினிமாவின் கூட்டு நினைவின் ஒரு பகுதியாக மாறியுள்ளார். இந்தியாவின் மிக வெற்றிகரமான இத்திரைப்படத் தொடரை உலக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமை கொள்கிறோம்” என்றார்.
ஒரு தந்தையின் ஆழமான மனப்போராட்டம்
இயக்குநர் ஜீத்து ஜோசப் படம் குறித்துப் பகிர்கையில்,
“திரிஷ்யம் 3 மூலம் கதையைத் தொடர்வது மட்டுமல்ல, ஜார்ஜ்குட்டியின் மனநிலையை இன்னும் ஆழமாக ஆராய வேண்டும் என்பதே என் நோக்கம். குடும்பத்தைக் காப்பாற்ற எடுத்த முடிவுகளால் உருவான மனிதராக அவர் இருக்கிறார். ஆனால் அவரது மனதின் ஆழத்தில், பயம், நிச்சயமின்மை மற்றும் கடந்த காலத்தின் சுமையுடன் வாழும் ஒரு தந்தை இருக்கிறார். இந்த அத்தியாயம் அந்த மன அழுத்தங்களின் தாக்கத்தை ஆராய்வதால், இது இந்தத் தொடரிலேயே மிகவும் நெருக்கமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான படைப்பாக மாறியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களின் அன்பிற்கு மோகன்லால் நன்றி
இப்படத்தின் நாயகன், ‘ஜார்ஜ்குட்டி’ மோகன்லால் கூறுகையில்,
“ஜார்ஜ்குட்டி என்ற கதாபாத்திரம் பல ஆண்டுகளாக ரசிகர்களுடன் பயணித்து வருகிறது. திரிஷ்யம் ரசிகர்களுக்குப் பிடிக்கக் காரணம், அதன் மர்மக் கதையைத் தாண்டி குடும்பம், அன்பு மற்றும் உயிர்வாழ்தல் பற்றிய மனிதநேயமான கதையாக இருப்பதுதான். ஜார்ஜ்குட்டிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. திரிஷ்யம் 3 இப்போது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கக் காத்திருக்கும் “திரிஷ்யம் 3” திரைப்படம் அதன் அசல் மொழியான மலையாளத்துடன், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுடனும் ஜூன் 18 முதல் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாகக் காணக் கிடைக்கிறது.


