உலகைக் காக்கும் உன்னதக் கொடை: உலக குருதிக் கொடையாளர் நாள் சிறப்புக் கட்டுரை!

உலகைக் காக்கும் உன்னதக் கொடை: உலக குருதிக் கொடையாளர் நாள் சிறப்புக் கட்டுரை!

னிதநேயத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடு தன்னிடம் உள்ள ஒரு பொருளை, பிரதிபலன் பாராமல் பிறருக்குக் கொடுப்பது. அந்த வகையில், தன் உடலின் ஜீவநாதமாக விளங்கும் குருதியை (இரத்தத்தை) பிறருக்குத் தானமாக வழங்குவது என்பது வெறும் கொடை மட்டுமல்ல; அது ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தரும் “மறுவாழ்வு”. ஆண்டுதோறும் ஜூன் 14 அன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் “உலக குருதிக் கொடையாளர் நாள்” (World Blood Donor Day) இரத்த தானத்தின் மகத்துவத்தையும், அதை வழங்கும் உன்னத மனிதர்களையும் போற்றும் ஒரு முக்கிய நாளாகும்.

கார்ல் லேண்ட்ஸ்டெய்னர்: இரத்தப் பிரிவுகளின் தந்தை

இந்த நாள் ஜூன் 14 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மிக முக்கியக் காரணம் உள்ளது. மனித உடலில் உள்ள இரத்தத்தை வெறும் சிவப்பான திரவமாக மட்டுமே உலகம் பார்த்துக் கொண்டிருந்தபோது, அதில் A, B, O போன்ற இரத்தப் பிரிவுகள் (Blood Groups) இருப்பதை 1901 ஆம் ஆண்டில் கண்டறிந்தவர் ஆஸ்திரிய நாட்டு மருத்துவர் கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் (Karl Landsteiner).

அவரது இந்த கண்டுபிடிப்புதான் மருத்துவ உலகில் பாதுகாப்பான இரத்தச் செலுத்தலுக்கு (Blood Transfusion) அடித்தளமிட்டது. இந்த மாபெரும் சாதனைக்காக அவருக்கு 1930 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1868 ஜூன் 14 இல் பிறந்த இவருடைய நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்கு நன்றி செலுத்தும் விதமாகவுமே அவரது பிறந்தநாள் உலக குருதிக் கொடையாளர் நாளாக அறிவிக்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டின் மையக்கருத்து (Theme)

உலக சுகாதார அமைப்பு (WHO) ஒவ்வொரு ஆண்டும் இரத்த தான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு குறிப்பிட்ட மையக்கருத்தை (Theme) அறிவிக்கும். அந்த வகையில் இந்த 2026 ஆம் ஆண்டிற்கான மையக்கருத்து:

“One Drop of Humanity. Give Blood. Save Lives.”

(ஒரு துளி மனிதநேயம். இரத்தம் கொடுங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள்.)

விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் விண்ணைத் தொடும் அளவுக்கு வளர்ந்துவிட்ட போதிலும், மனிதநேயம் என்ற ஒற்றைப் புள்ளிதான் இன்றும் பல கோடி உயிர்களைப் பூமியில் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பதை இந்த மையக்கருத்து நமக்கு உணர்த்துகிறது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு துளி இரத்தமும், ஏதோ ஒரு குடும்பத்தின் விளக்கு அணையாமல் காக்கும் மனிதநேயத் துளியாகும்.

வணிகமயமாக்கப்படாத ஒரே “தானம்”

மனித வரலாற்றில் மருத்துவம் என்பது ஒரு சேவையாகத் தொடங்கி, இன்று மிகப்பெரிய வணிகமாக உருவெடுத்துள்ளது. உடலின் உறுப்புகளை மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்குக் கூட இன்று லட்சக்கணக்கில் பணம் கைமாறுகிறது. ஆனால், இத்தனை வணிகப் புயல்களுக்கு மத்தியிலும், இன்னும் “தானம்” என்ற புனிதமான மனிதநேயச் சொல்லைத் தாங்கி நிற்பது இரத்த தானம் மட்டுமே.

இரத்தத்தை விலைக்கு வாங்கவோ, விற்கவோ சட்டப்படி அனுமதியில்லை. அது ஒரு மனிதனின் நல்மனதில் இருந்து மட்டுமே வர வேண்டும். சாதி, மதம், இனம், ஏழை, பணக்காரன் என்ற எந்தப் பாகுபாடும் இரத்தத்திற்கு இல்லை. அவசரக் காலத்தில் ஒரு அநாதையின் உடலில் ஓடும் இரத்தம் ஒரு பெரும் கோடீஸ்வரரைக் காப்பாற்றலாம்; மாற்று மதத்தவரின் இரத்தம் இன்னொரு மதத்தவருக்கு உயிர் கொடுக்கலாம். உலகளவில் இரத்தம் ஏன் புனிதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது என்பதற்கு இதுவே சான்று.

நவீன மருத்துவ சவால்களும் இரத்தத்தின் தேவையும்

அறிவியல் மற்றும் மருத்துவ வளர்ச்சியால் எத்தனையோ கொடிய நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. நோய்களால் ஏற்படும் மரணங்கள் குறைந்துவிட்டாலும், துரதிர்ஷ்டவசமாக விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

  • விபத்து காலங்கள் (Trauma Care): ஒரு விபத்து நடக்கும்போது மனித உடல் முதலில் சந்திப்பது கடுமையான இரத்தப்போக்கு (Hemorrhage). அந்தச் சமயத்தில் சில நிமிடங்களில் கிடைக்கும் இரத்தம் மட்டுமே அந்த உயிரைத் தக்க வைக்க முடியும்.

  • பிரசவ கால மரணங்கள்: பிரசவத்தின் போது (Postpartum Hemorrhage) ஏற்படும் அதிகப்படியான இரத்தப்போக்கினால் தாய்மார்கள் உயிரிழப்பதைத் தடுக்க பெருமளவில் இரத்தம் தேவைப்படுகிறது.

  • கூறு அணுக்களின் பயன்பாடு (Blood Components): இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால் முழு இரத்தத்தையும் அப்படியே செலுத்தாமல், அதிலிருந்து இரத்தச் சிவப்பணுக்கள், தட்டணுக்கள் (Platelets), பிளாஸ்மா எனத் தனித்தனியாகப் பிரித்து வழங்குகிறார்கள். இது டெங்கு போன்ற காய்ச்சல்களால் தட்டணுக்கள் குறையும்போதும், புற்றுநோய் (Cancer) மற்றும் தலாசீமியா (Thalassemia) போன்ற மரபணு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைகளுக்கும் பெருமளவு பயன்படுகிறது.

செயற்கையாக உருவாக்க முடியாத உன்னதம்

அறிவியல் வளர்ச்சியால் மனிதன் நிலவுக்குச் சென்றுவிட்டான், செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்கிவிட்டான். ஆனால், அவனால் இன்றுவரை செயற்கையாக ஒரு துளி இரத்தத்தைக் கூட ஆய்வகத்தில் உருவாக்க முடியவில்லை.

இயற்கையின் இந்த விசித்திர விதியை மனிதனால் மீற முடியவில்லை. ஒரு மனிதனுக்கு இரத்தம் வேண்டுமென்றால், அதை இன்னொரு மனிதனின் உடலில் இருந்துதான் எடுத்தாக வேண்டும். இங்குதான் குருதிக்கொடையின் அத்தியாவசியமும், கொடையாளர்களின் முக்கியத்துவமும் உச்சத்தை அடைகிறது.

நீங்களும் ஒரு “சூப்பர் ஹீரோ” ஆகலாம்!

நம்மில் பலர் திரையில் தோன்றும் நடிகர்களையும், கற்பனை கதாபாத்திரங்களையும் “ஹீரோக்கள்” என்று கொண்டாடுகிறோம். ஆனால், நிஜ வாழ்க்கையின் உண்மையான கதாநாயகர்கள் இரத்த தானம் செய்பவர்கள்தான். உலக சுகாதார நிறுவனமே (WHO) “இரத்தம் வழங்கும் ஒவ்வொருவரும் ஒரு கதாநாயகன்தான்” என்று மனதாரப் பாராட்டுகிறது.

உங்களின் அரை மணி நேரப் பொறுமையும், ஒரு சிறிய ஊசி குத்தலின் வலியும், ஒரு மனிதனுக்கு இன்னும் சில பத்தாண்டுகள் இந்த பூமியில் வாழும் வாய்ப்பை வழங்குகிறது. குருதிக் கொடை அளிப்போம்; மனிதநேயம் காப்போம்!

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts