கடலின் அமேசான் ‘பவள முக்கோணம்’:மனித பேராசையால் சிதையும் உலகப் பெருங்கடலின் இதயம்!
இயற்கை மனிதனுக்கு அள்ளித் தந்திருக்கும் கொடைகள் எல்லையற்றவை. ஆனால், நவீன அறிவியல் வளர்ச்சி, தொழில் நுட்பப் பாய்ச்சல், மாறிப்போன ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார வேட்கை ஆகியவற்றின் காரணமாக, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உலகக் கொடைகள் மனித இனத்தினால் மிகக் கொடூரமாக அழிக்கப்பட்டு வருகின்றன. அத்தகைய மாபெரும் இயற்கை அதிசயங்களில் ஒன்றுதான் உலகப் புகழ்பெற்ற ‘பவள முக்கோண கடல் பகுதி’ (Coral Triangle).
இன்று (ஜூன் 9) உலகளவில் ‘பவள முக்கோண நாள்’ (Coral Triangle Day) கடைப்பிடிக்கப்படுகிறது. கடல் பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தவும், இந்த அரிய கடல் வளங்களைப் பாதுகாக்கவும் இந்நாள் நிறுவப்பட்டது. நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான பவள முக்கோண நாளின் மையக்கருத்து: “மறு கற்பனை: நாம் அறிந்த உலகிற்கு அப்பால், நம் பெருங்கடலுடன் ஒரு புதிய உறவு” (Reimagine: Beyond the World We Know, a New Relationship With Our Ocean). உலகப் பெருங்கடல்கள் தினத்தின் நோக்கத்தோடு இணைந்து, சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘உயர் கடல் உடன்படிக்கை’ (BBNJ Agreement) ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த ஆண்டு இப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஆபத்தின் விளிம்பில் இருக்கும் கடலின் அமேசானைப் பற்றிய ஒரு விரிவான அலசல் இதோ:

உலகக் கடல்களின் பல்லுயிர் கருவூலம்
மலேசியா, பிலிப்பைன்ஸ், பப்புவா நியூ கினியா, இந்தோனேஷியா, சாலமோன் தீவுகள் மற்றும் டைமோர் லெஸ்லே ஆகிய நாடுகளை உள்ளடக்கிய, பசிபிக் பெருங்கடலுக்கும் இந்தியப் பெருங்கடலுக்கும் இடைப்பட்ட பரப்பே ‘பவள முக்கோணம்’ என்று அழைக்கப்படுகிறது. தென் அமெரிக்காவின் அமேசான் காடுகள் நிலப்பரப்பில் எத்தகைய பல்லுயிர்ச் செறிவைக் கொண்டுள்ளதோ, அதேபோன்ற உன்னத நிலையை இக்கடல் பகுதி கொண்டுள்ளதால், இது ‘கடலின் அமேசான்’ என்றே வர்ணிக்கப்படுகிறது.
கிட்டத்தட்ட உலகின் 75% பவளப்பாறை வகைகளைத் தன்னுள் கொண்டுள்ள இந்த முக்கோணப் பகுதி, உலகிலுள்ள ஒட்டுமொத்த மீன் இனங்களில் 37 சதவீதத்திற்கும், கத்தி மட்டி உயிரினங்களில் 50 சதவீதத்திற்கும் புகலிடமாக விளங்குகிறது. உலகிலுள்ள 7 வகையான அரிய கடல் ஆமை இனங்களில் 6 சிற்றினங்கள் இங்குதான் வாழ்கின்றன. அடர்ந்த அலையாத்திக் காடுகளும் (மாங்குரோவ்), 950-க்கும் மேற்பட்ட மெல்லுடலி சிற்றினங்களும், 458 கணுக்காலி இனங்களும், 3000-க்கும் மேற்பட்ட எலும்பு மீன் வகைகளும் இங்குள்ள சூழியலைத் தீர்மானிக்கின்றன. வெறும் 58,550 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான முதன்மைப் பகுதியில் 10 முதல் 19 வகையான கடல் தாழை தாவரங்கள் செழித்து வளர்ந்திருப்பது இயற்கையின் ஆகச்சிறந்த அதிசயமாகும்.
படிவ எரிபொருள் துரப்பணத்தால் நேரும் பேரழிவு
உயிரின வேற்றுமையின் கருவூலமாக விளங்கும் இப்பகுதிக்கு இயற்கை ரீதியான பருவநிலை மாற்றங்களும், கடல் வெப்பநிலை உயர்வும் அச்சுறுத்தலாக இருக்கும் அதே வேளையில், மனிதனால் உருவாக்கப்படும் பேரழிவுகள் பேராபத்தாய் உருவெடுத்துள்ளன. கட்டுப்பாடற்ற மீன்பிடித்தல், கடல் மாசு, வரம்பற்ற பொழுதுபோக்கு ஆழ்கடல் மூழ்கல் (Sea Diving) ஆகியவற்றுடன், சமீபகாலமாக சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய 10 மில்லியன் சதுர கிலோமீட்டர் கடல் பரப்பில் நடக்கும் படிவ எரிபொருள் (எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு) துரப்பணச் செயல்பாடுகள் இக்கடலின் மரண சாசனத்தை எழுதிக் கொண்டிருக்கின்றன.
இப்பகுதியின் 20,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (ஒட்டுமொத்த பரப்பில் வெறும் 1%) மட்டுமே தற்போது 100 எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டுச் செயல்பட்டு வருகின்றன. வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், மேலும் 450 புதிய கிணறுகளை உருவாக்க (அதாவது 1.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில்) பிரம்மாண்ட திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இந்த துரப்பண வெறியின் காரணமாக ஏற்கனவே இப்பகுதியின் 24% பவளப்பாறைகளும், 22% கடல் தாழை தாவரங்களும், 37% அலையாத்திக் காடுகளும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
கப்பல் விபத்துகளும் கட்டுக்கடங்காத நச்சு மாசுகளும்
கப்பல் போக்குவரத்தின் மூலம் வெளியேறும் எண்ணெய் கசிவுகள் இக்கடல் சூழலை முழுமையாகச் சிதைக்கின்றன. இதுவரை சுமார் 793 கப்பல்களின் அடிப்புற வெளியேற்ற எண்ணெய் கசிவுகளால் 24,000 சதுர கிலோமீட்டர் கடல் பரப்பு முற்றிலும் மாசடைந்துள்ளது. இதில் உச்சக்கட்ட கொடுமையாக, 2023 ஆம் ஆண்டில் ‘பிரின்சஸ் எம்பெரர்’ (Princess Empress) என்ற கப்பல் ஏற்படுத்திய மிக மோசமான எண்ணெய் கசிவு விபத்து உலகையே உலுக்கியது.
இந்த ஒரேயொரு விபத்தினால், பாதுகாக்கப்பட்ட இப்பகுதியின் கடல் வளத்தில் 20 சதவீதம் மொத்தமாகப் பாதிக்கப்பட்டது. இதன் நேரடி விளைவாக 21,000 மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானதோடு, பொருளாதார ரீதியாக 68.3 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. திரவ இயற்கை எரிவாயு (LNG) எடுப்பதற்காக மட்டும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் 2016 முதல் 2022 வரை சுமார் 30 பில்லியன் டாலர் மூலதனத்தைக் கொட்டியுள்ளன. தற்போது 19 எரிவாயு முனையங்கள் இங்கு இயங்கி வரும் நிலையில், வருங்காலத்தில் இவை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற எச்சரிக்கை உலகச் சூழலியலாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சூழலியல் சிதைவும் ஒலி மாசும்
எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணப் பணிகளால் கடல் நீர்மட்டம் நச்சுத்தன்மை அடைவது ஒருபுறமிருக்க, அங்குள்ள ராட்சதக் கப்பல்களின் போக்குவரத்து உருவாக்கும் ‘ஒலி மாசு’ (Noise Pollution) மற்றொரு பெரும் சாபமாக மாறியுள்ளது. கடலில் வாழும் திமிங்கலங்கள், டால்பின்கள் போன்ற பாலூட்டி உயிரினங்கள் தங்களின் வழி தேடலுக்கும், உணவு தேடலுக்கும், தங்களுக்குள் தொடர்பு கொள்வதற்கும் ஒலியலைகளையே நம்பியுள்ளன. கப்பல்களின் அதீத சத்தம் இந்த ஒலியலைத் தொடர்பைத் துண்டித்து, அவற்றின் வாழ்வியல் நடத்தையைப் பெரிதும் பாதிக்கின்றது.
இங்குள்ள 19 எரிவாயு முனையங்களில் 15 முனையங்கள், மிக முக்கிய கடல் தாழைகளும் பல்லுயிர்களும் நிறைந்த வெறும் 10 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள்ளேயே நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் நச்சு வேதிப்பொருட்களால் கடலில் பாசி மாசுபாடு (Algal Bloom) ஏற்பட்டு, நீரின் தரம் முற்றிலும் குறைந்து, கடல்வாழ் உயிரினங்கள் மூச்சுத் திணறி மடியும் அவலம் தொடர்கிறது. 16% பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளில் (80 முக்கிய மண்டலங்கள்) இத்தகைய அகழ்வுப் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பது கவலையளிக்கும் உண்மை.
உள்ளூர் மக்களின் வாழ்வாதாரப் போராட்டம்
இயற்கை அழிப்புச் செயல்பாடுகள் கடல் வாழ் உயிரினங்களை மட்டுமன்றி, கடற்கரையோர உள்ளூர் மக்களின் வாழ்வையும் நேரடியாகப் பதம் பார்க்கின்றன. பவள முக்கோணப் பகுதியை வாழ்வாதாரமாக நம்பியுள்ள 120 மில்லியன் மக்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாகியுள்ளது. ‘பிரின்சஸ் எம்பெரர்’ கப்பல் விபத்தின்போது கடற்கரையெங்கும் பரவிய நச்சு வாயுவின் நெடியால், அத்தீவுக்கூட்ட மக்கள் கடுமையான சுவாசக் கோளாறுகளுக்கு ஆளாகினர்; பள்ளிகள் மூடப்பட்டன; மீனவர்களின் வாழ்வாதாரம் பல மாதங்கள் முடங்கியது.
இதேபோல், இந்தோனேஷியாவின் தெற்கு பாலி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் துரப்பணப் பணிகளால், அங்குள்ள மக்களின் புனிதத்தலங்கள் மற்றும் பாரம்பரிய இடங்கள் சிதைக்கப்படுவதை எதிர்த்து உள்ளூர் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பவள முக்கோணத்தைக் காக்க COP16 மாநாட்டின் பரிந்துரைகள்
உயிரின வேற்றுமைப் பாதுகாப்புக்கான பன்னாட்டு மாநாட்டில் (COP16) சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய ஆய்வறிக்கையின்படி, கடலின் இந்த அமேசான் பகுதியைக் காப்பாற்ற இரண்டு மிக முக்கியமான பரிந்துரைகள் உலக நாடுகளின் முன் வைக்கப்பட்டுள்ளன:
-
துரப்பணத் தடை உடன்படிக்கை (Moratorium): பவள முக்கோண இயற்கை மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வுப் பணிகளையும் உடனடியாக நிறுத்த பன்னாட்டு அளவில் நாடுகள் ஒன்றிணைந்து அவசர உடன்படிக்கையைச் செயல்படுத்த வேண்டும்.
-
மாற்று ஆற்றல் நோக்கிய இடப்பெயர்வு: படிவ எரிபொருட்களை முற்றிலும் தவிர்த்துவிட்டு, அதற்கு மாற்றாக அனைத்து நாடுகளும் புதுப்பிக்கத்தக்க தூய்மையான ஆற்றல் மூலங்களை (சூரிய ஒளி, காற்றுத் திறன்) நோக்கித் தங்களின் பொருளாதாரப் பார்வையைத் திருப்ப வேண்டும்.
உலகளாவிய சட்டங்களும், பரிந்துரைகளும் காகித வடிவில் ஆறுதல் தந்தாலும், நடைமுறையில் ‘பொருளாதார முன்னேற்றம்’ என்ற போர்வையில் இயற்கை வளங்கள் தொடர்ந்து பலிகடா ஆக்கப்படுவதுதான் கசப்பான உண்மை. ஈடு செய்யவே முடியாத இந்த உலகப் பெருங்கடலின் இதயம், மனிதப் பேராசையினால் இனிமேலும் களவு போய்விடக் கூடாது என்பதே இந்த பவள முக்கோண நாளில் உலக மக்களின் கூட்டுப் பிரார்த்தனையாக இருக்க வேண்டும்.


