‘சிங் கீதம்’ பிரீ ரிலீஸ் விழா:40 ஆண்டுகால கனவு-சிங்கீதம் சீனிவாச ராவ் நெகிழ்ச்சி!
பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட பிரீ ரிலீஸ் (Pre-Release) நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு “ராக் ஸ்டார்” தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அயன், அஹல்யா பம்ரு மற்றும் ஷாலினி கொண்டேபுடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் ஜூன் 11 அன்று உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜென்-ஜி (GenZ) தலைமுறையை விட சிங்கீதம் சார் முன்னணியில் இருக்கிறார்: உலகநாயகன் கமல்ஹாசன் புகழாரம்

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற உலகநாயகன் கமல்ஹாசன் பேசியதாவது:
“மாயாபஜார் காலம் முதல் தற்போதைய ‘சிங் கீதம்’ வரை, சிங்கீதம் சீனிவாச ராவ் அவர்களிடம் சினிமா அப்படியேதான் இருக்கிறது; அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. எனக்கு 20 வயது இருக்கும்போதே அவருடன் பணியாற்றத் தொடங்கினேன். அவருடைய படங்களில் தயாரிப்பாளராகவும், உதவி இயக்குநராகவும் இருந்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னிடம் சொன்ன இரண்டு கதைகளில் ஒன்று ‘புஷ்பக விமானம்’. இரண்டாவது கதைதான் இந்த ‘சிங் கீதம்’.
எனக்கு 20 வயதில் அவர் சொன்ன கதையை, இப்போது எனக்கு 70 வயதாகும் பொது திரையில் பார்க்கப் போகிறேன். சில கதைகள் காலத்தால் அழியாதவை, சிங்கீதம் சாரின் கதைகளும் அப்படித்தான். பலர் அவர் பெயரை ‘சங்கீதம்’ என்று தவறாக உச்சரிப்பார்கள், ஆனால் இனி அந்த குழப்பம் வராது, இசை அவர் பெயரிலேயே (சிங்கீதம்) இருக்கிறது. சிங்கீதம் சார் இப்போதும் ஜென்-ஜி (GenZ) தலைமுறையினரை விட முன்னோடியாக, முன்னணியில் இருக்கிறார்.
‘புஷ்பக விமானம்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்ற படங்கள் ஒரு நல்ல உணர்வுடனும் பேரார்வத்துடனும் உருவாக்கப்பட்டவை. அத்தகைய பேரார்வத்துடன் வரும் படம்தான் இந்த ‘சிங் கீதம்’. இந்தப் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. நானே தயாரித்தது போன்ற ஒரு உணர்வு எனக்குள் இருக்கிறது. அவருடன் பணிபுரிய மற்றொரு வாய்ப்பு எனக்கு நிச்சயம் வரும் என்று நம்புகிறேன்.”

40 வருடக் கனவு நனவாகியுள்ளது: இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ்
நெகிழ்ச்சியுடன் பேசிய இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ், “இந்தப் படம் எனது 40 வருடக் கனவு. இந்தக் கதையை நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், நாக் அஸ்வின் தயாரிப்பில் வைஜயந்தி மூவிஸ் மூலம் இறுதியாக இந்தப் படத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். நாக் அஸ்வின் ஒரு உலகப் புகழ்பெற்ற இயக்குநர் என்றாலும், அவர் படத்தை விட என்னை அதிகமாக நேசித்தார், ஒரு தந்தையைப் போல நடத்தினார். இந்தப் படத்தின் முழுப் பெருமையும் நாக் அஸ்வினையே சாரும். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தக் கதையை அற்புதமாகப் புரிந்துகொண்டு இசையமைத்துள்ளார். இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்த என் அன்புக்குரிய கமல்ஹாசனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்” என்றார்.
ஆஸ்கர் விருது பெற்றது போல் உணர்கிறேன்: இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் பேசுகையில், “கமல்ஹாசன் சார், சிங்கீதம் சார் மற்றும் அஸ்வினி தத் சார் ஆகிய மூவருமே எப்போதும் இசைக்கு முதலிடம் கொடுப்பவர்கள். சிங்கீதம் சாரின் பாராட்டை நான் ஆஸ்கர் விருது பெற்றதாகவே உணர்கிறேன். சிறுவயதிலிருந்தே செய்தித்தாள் கட்டுரைகளை இசையாக மாற்றும் பழக்கம் எனக்கு உண்டு, அது இந்தப் படத்திற்குப் பெரிதும் உதவியது. ஒரு படத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் பாடல் போல ஒலிக்கச் செய்வது சவாலாக இருந்தது. குறிப்பாக, இதில் நடித்த அனைவரும் தங்களது சொந்தக் குரலிலேயே பாடியுள்ளனர். இப்படம் பார்வையாளர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைத் தரும்” என்றார்.
புதுமுக நாயகன், நாயகி நெகிழ்ச்சி
படத்தின் நாயகன் அயன் பேசுகையில், “சிங்கீதம் சீனிவாச ராவ் அவர்களின் நாயகன் என்று என்னை அழைப்பதில் என் வாழ்நாள் முழுவதும் பெருமைப்படுவேன். ஜாம்பவான் கமல்ஹாசன் சார் எங்களுக்குப் பெரிய உத்வேகம்” என்றார். நாயகி அஹல்யா பம்ரு பேசும்போது, “இத்தனை ஜாம்பவான்களுடன், சிங்கீதம் சாரின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. எங்களைப் போன்ற புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்த நாக் அஸ்வின் மற்றும் வைஜயந்தி மூவிஸ் நிறுவனத்திற்கு நன்றி” எனத் தெரிவித்தார்.
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் வரும் ஜூன் 11 முதல் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ரசிகர்களுக்கு காட்சி விருந்தாக அமையவுள்ளது.


