சென்னை என் தாயின் ஊர்- ‘பெத்தி’ நிச்சயம் வெல்லும்: ராம் சரண் நெகிழ்ச்சி!
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், கிராமத்து விளையாட்டுப் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் ‘பெத்தி’. புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பு ஒட்டுமொத்தப் படக்குழுவின் பங்கேற்போடு கோலாகலமாக நடைபெற்றது.

ஆலமரமாக வளர்ந்து நிற்கும் ராம் சரண்: இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு
“சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ராம் சரண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். சிரஞ்சீவி சாரின் மகனாக இருந்து, அதே உயரத்தை எட்ட முடியுமா என்று பலர் கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால், ராம் சரண் அதையெல்லாம் தாண்டித் தனக்கெனத் தனித்துவமான இடத்தை உருவாக்கி, மற்றொரு ஆலமரமாக வளர்ந்து நிற்கிறார். இளம் தலைமுறைக்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.
‘பெத்தி’ போன்ற பெரிய வர்த்தகப் படங்களில் நடிகர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள். இந்தத் தெலுங்குத் திரையுலகின் பிரம்மாண்ட லட்சியப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். இன்று காலைதான் பின்னணி இசைப் பணிகளை முடித்தோம். முடிந்த பிறகும் ‘இதை இன்னும் சிறப்பாக செய்ய முடியுமா?’ என்ற ஆர்வம் குறையவில்லை. அந்த உற்சாகமே இந்த படத்தின் சிறப்பு.”
எனக்காகக் காத்திருந்த படக்குழு: நெகிழ்ந்த சிவராஜ்குமார்
“இயக்குநர் புச்சி பாபு என்னிடம் இந்தக் கதையைக் கூறி, ‘குரு’ கதாபாத்திரத்தை விவரித்தபோதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ராம் சரணுடன் இணைந்து நடிப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஆனால், அதன் பிறகு எனக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, சிகிச்சைக்காகச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. படம் தள்ளிப்போகுமே என்று வருந்தினேன். ஆனால் படக்குழுவினர் எனக்காகக் காத்திருந்தார்கள்; அது என்னை நெகிழச் செய்தது.
ஏ.ஆர். ரஹ்மான் சாருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி. ராம் சரணின் அசாத்திய உடல் மாற்றமும், அர்ப்பணிப்பும் ரசிகர்களை வியக்க வைக்கும். ஜூன் 4-ஆம் தேதி படம் வெளியாக உள்ளதை உங்களைப் போலவே நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.”
சென்னை என் புனித இடம்: இயக்குநர் புச்சி பாபு சனா
“எனக்கு சென்னை என்றால் மிகவும் பிடிக்கும்; இது சினிமா வாழும் நகரம். இங்கே வரும்போதெல்லாம் ஒரு புனித இடத்திற்குச் செல்வது போன்ற உணர்வு வரும். எனது முதல் பட நாயகன் விஜய் சேதுபதி எப்போதும் எனக்குத் துணையாக நிற்பவர், அவருக்கும் என் நன்றி.
‘பெத்தி’ மிகவும் உணர்வுப்பூர்வமான படம். குறிப்பாக இரண்டாம் பாதியில் ராம் சரணின் நடிப்பு அற்புதம்; ‘பெத்தி’ என்றாலே எனக்கு ராம் சரண் தான் நினைவுக்கு வருகிறார். ரத்னவேலு சார் இப்படத்தை உலகத் தரத்தில் காட்சிப்படுத்தியுள்ளார். சிவராஜ்குமார் சார் உண்மையான குருவாகத் தோன்றி படத்திற்குப் பெரும் கம்பீரத்தைச் சேர்த்துள்ளார்.”
அசாத்திய உழைப்பைத் தந்த ராம் சரண்: ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு
“சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போல ‘பெத்தி’ என் திரைப் பயணத்தில் மிக முக்கியமான மைல்கல்லாக இருக்கும். திரையரங்கில் இது ஒரு முழுமையான மூழ்கடிக்கும் அனுபவத்தைத் தரும். ராம் சரண் இப்படத்திற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். கிரிக்கெட் வீரர், மண்ணின் மணம் வீசும் கிராமத்து இளைஞன், கட்டுக்கோப்பான உடல் எனப் பல பரிமாணங்களுக்காகத் தினசரி பல மணி நேரங்கள் உழைத்தார். கதையின் சரிவுத் தருணங்களிலும் அதற்கேற்பத் தோற்றத்தை மாற்றினார். ராம் சரணின் மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இது இருக்கும்.”
கம்ஃபர்ட் ஜோனை உடைத்த படம்: திவ்யேந்து சர்மா
“‘பெத்தி’ திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாவது பெருமையாக உள்ளது. என் கம்ஃபர்ட் ஜோனை விட்டு வெளியே வந்து, புதிதாக முயற்சி செய்ய இயக்குநர் புச்சி பாபு முழு சுதந்திரம் தந்தார். ராம் சரண் காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னைச் சுதந்திரமாக உணர வைத்தது. ஜாம்பவான்களான ஏ.ஆர். ரஹ்மான், சிவராஜ்குமார் மற்றும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.”

சென்னை என் தாயின் ஊர்; ‘பெத்தி’ நிச்சயம் வெல்லும்: ராம் சரண் நம்பிக்கை
“சென்னை எனக்கு எப்போதும் சிறப்பான இடம்; நான் பிறந்து வளர்ந்த நகரம். என் அம்மாவும் இங்கு பிறந்தவர் என்பதால், இது என் தாயின் ஊர் என்ற பாசமான உணர்வை அளிக்கிறது. ஆர்.ஆர்.ஆர், மகதீரா போல சென்னைக்கு வரும்போதெல்லாம் வீட்டிற்கு வந்த உணர்வே கிடைக்கிறது.
இப்படத்தை முடிக்க 285 நாட்களுக்கு மேல் உழைத்தோம். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் இப்படத்தின் மையத்தூண். கடந்த பத்து நாட்களாக விழித்திருந்து பின்னணி இசை அமைத்துள்ளார். சிவராஜ்குமார் சார் திரையில் தோன்றினாலே தீப்பொறி பறக்கும்; ‘ஜெயிலர்’ படத்தில் அவர் நடந்து வரும் ஐகானிக் காட்சியை காரில் செல்லும்போது கூட மீண்டும் மீண்டும் பார்ப்பேன். ஜாம்பவான் ரத்னவேலு சாருடன் பணியாற்றியது பெருமை.
நான் ஒரு படத்தைப் பற்றி படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் தொடர்ந்து பேசினால் அந்த படம் பெரிய வெற்றி பெறும் என்று என் வீட்டில் சொல்வார்கள். ஆர்.ஆர்.ஆர், ரங்கஸ்தலம், மகதீரா படங்களுக்குப் பிறகு ‘பெத்தி’ பற்றித்தான் வீட்டில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். அதுவே என் நம்பிக்கை.
இறுதியாக, உச்சகட்ட நட்சத்திர அந்தஸ்தை விட்டு பொதுச் சேவைக்காக வந்துள்ள தமிழக முதல்வர் விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். படத்தைக் குடும்பத்தோடு, குறிப்பாகக் குழந்தைகளோடு வந்து திரையரங்குகளில் கொண்டாடுங்கள்.”
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்களும், சமீபத்தில் வெளியான மிரட்டலான டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் ‘பெத்தி’ தடம் பதிக்க வருகிறது.


