அமைதியான கொலையாளி: உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வும் மேலாண்மையும்!

அமைதியான கொலையாளி: உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வும் மேலாண்மையும்!

லக சுகாதார அமைப்பு மற்றும் உலக உயர் இரத்த அழுத்த லீக் ஆகியவை இணைந்து உலக உயர் இரத்த அழுத்த விழிப்புணர்வு நாள் (World Hypertension Day)  என்று ஒவ்வோர் ஆண்டும் கடைபிடித்து வருகின்றன. உலகளவில் இறப்புக்கான மிக முக்கியக் காரணியாக இந்த உயர் இரத்த அழுத்தம் (Hypertension) விளங்குகிறது.

உலகளாவிய கணக்கெடுப்பின்படி, தற்போது சுமார் 170 கோடி மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அதில் வெறும் 18% மக்கள் மட்டுமே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஆண்டுதோறும் சுமார் ஒன்றேமுக்கால் கோடி (1.75 கோடி) நபர்கள் இந்த உயர் இரத்த அழுத்தத்தினால் உயிரிழக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் உண்மையாகும்.

இந்தியாவும் உயர் இரத்த அழுத்தமும்

இந்தியாவில் சர்க்கரை வியாதியால் (நீரிழிவு நோய்) பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8.5 கோடியாக உள்ளது. ஆனால், உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதைவிடப் பல மடங்கு அதிகமாக, அதாவது சுமார் 24 கோடியாக உள்ளது. மாரடைப்பு, மூளை பாதிப்பு மற்றும் பக்கவாதம் (Stroke) மூலம் உயிருக்கு பேராபத்தை ஏற்படுத்தும் முதன்மைக் காரணியாக இது திகழ்கிறது.

கட்டுப்பாட்டின் மூலம் தவிர்க்கக்கூடிய பாதிப்புகள்: இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பதன் மூலம் பின்வரும் ஆபத்துகளைத் தவிர்க்கலாம்:

  • பக்கவாதம் (Stroke) – 42% தவிர்க்கலாம்

  • மாரடைப்பு (Heart Attack) – 24% தவிர்க்கலாம்

  • இருதய செயலிழப்பு (Heart Failure) – 50% தவிர்க்கலாம்

  • சிறுநீரக பாதிப்பு மற்றும் செயலிழப்பு – 50%-க்கும் மேல் தவிர்க்கலாம் 

உயர் இரத்த அழுத்தம்: முதுமையின் விளைவா? வாழ்க்கைமுறை மாற்றமா?

உயர் இரத்த அழுத்தம் என்பது முதுமையின் விளைவினால் மட்டுமே ஏற்படுகிறது என்று கூறிவிட முடியாது. அவ்வாறு இருந்தால் முதியவர்கள் அனைவருக்கும் இந்நோய் வரவேண்டும், ஆனால் அப்படி நடப்பதில்லை.

ஆப்பிரிக்க கிராமம் ஒன்றில் நடத்தப்பட்ட பல ஆண்டுகால ஆராய்ச்சியில், அங்குள்ள மக்கள் முதுமையடையும் வரை யாருக்கும் உயர் இரத்த அழுத்தம் வரவில்லை என்பது தெரியவந்தது. ஆனால், அதே கிராமத்திலிருந்து மேலை நாடுகளுக்குக் குடியேறி, அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்த நபர்களைப் பரிசோதித்தபோது, அவர்களில் பெரும்பாலானோருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதன் மூலம், ஒருவரது பழக்க வழக்கங்கள், வாழும் இடம், சுற்றுப்புறச் சூழ்நிலை மற்றும் உணவு முறை ஆகியவையே உயர் இரத்த அழுத்தம் வருவதற்கு முக்கியக் காரணமே தவிர, முதுமை மட்டுமே காரணமல்ல என்பது நிரூபணமாகிறது.

உயர் இரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்

1. முதன்மை இரத்த அழுத்தம் (Essential Hypertension)

முதுமையில் இதயம் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் மாற்றங்களினாலும், இரத்தக் குழாய்களின் நெகிழ்வுத்தன்மை குறைவதனாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. சுமார் 90% முதியவர்களுக்கு இந்த வகை இரத்த அழுத்தம் வருவதற்கான துல்லியமான காரணம் தெரிவதில்லை.

2. இரண்டாம் நிலை இரத்த அழுத்தம் (Secondary Hypertension)

வேறு சில உடல்நலப் பாதிப்புகள் அல்லது பழக்கவழக்கங்களால் ஏற்படும் இரத்த அழுத்தம்:

  • இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு

  • சிறுநீரகம் செயலிழத்தல்

  • புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்

  • தைராய்டு சுரப்பி கோளாறுகள்

  • சில குறிப்பிட்ட மாத்திரைகளின் பயன்பாடு (உதாரணமாக: வலி நிவாரணிகள், ஸ்டீராய்டுகள், ஈஸ்ட்ரோஜன் மற்றும் மன அழுத்தத்திற்கான மருந்துகள்)

அறிகுறிகளும் கண்டறியும் முறைகளும்

உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகளாக மயக்கம், நடக்கும்போது மூச்சு வாங்குவது, நெஞ்சுவலி மற்றும் கால் வீக்கம் போன்றவை இருந்தாலும், முதியவர்களில் பலருக்கு எந்தவித வெளிப்படையான அறிகுறிகளும் இல்லாமல் இது மறைந்திருக்கலாம். எனவே, இது “அமைதியான கொலையாளி” என்று அழைக்கப்படுகிறது.

இரத்த அழுத்த அளவீடுகள் (Blood Pressure Readings)

  • இயல்பான அளவு: எந்த வயதினராக இருந்தாலும் மேல் அளவு (Systolic) 120 – 140க்குள்ளும், கீழ் அளவு (Diastolic) 80 – 90க்குள்ளும் இருக்க வேண்டும்.

  • முதுமையில் இரத்த அழுத்தம்: முதியவர்களுக்கு 140/90 mmHg அளவுக்கு மேல் இருந்தால் அது உயர் இரத்த அழுத்தமாகக் கருதப்படுகிறது.

  • நீரிழிவு நோயாளிகள்: சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் 130/80 mmHg என்ற அளவிற்குள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

முக்கிய குறிப்பு: முதியவர்களுக்கு ஒருமுறை பரிசோதித்த உடனேயே உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக முடிவு செய்துவிடக் கூடாது. ஏனெனில், முதுமையில் மேல் அளவு அடிக்கடி ஏற்ற இறக்கத்துடன் இருக்க வாய்ப்புண்டு. மனதில் ஏற்படும் பயம், குளிர்காலம், காய்ச்சல், உடல் வலி மற்றும் நெடுநேரம் சிறுநீரைக் கழிப்பில்லாமல் வைத்திருத்தல் போன்ற தற்காலிகக் காரணங்களாலும் அளவு மாறுபடலாம். எனவே, குறைந்தது மூன்று முறையாவது வெவ்வேறு நேரங்களில் பரிசோதித்த பின்னரே இந்நோயை உறுதி செய்ய வேண்டும்.

மேல் அளவு மட்டும் அதிகமாக இருக்கும் இரத்த அழுத்தம் (Isolated Systolic Hypertension)

சில முதியவர்களுக்கு கீழ் அளவு 80 – 90 என்ற இயல்பான அளவில் இருக்கும், ஆனால் மேல் அளவு மட்டும் 160 – 180 என மிக அதிகமாக இருக்கும். இது ஓரளவிற்கு முதுமையின் விளைவாகக் கருதப்படுகிறது.

  • பாதிப்புகள்: இதனை அலட்சியப்படுத்தினால் பக்கவாதம், மாரடைப்பு, இருதய வலிமை இழப்பு மற்றும் சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

  • அறிகுறிகள்: தலைச்சுற்றல், மயக்கம், மூச்சு இரைத்தல், மூக்கில் இரத்தம் வடிதல், களைப்பு, படபடப்பு மற்றும் கால் வீக்கம்.

  • நன்மை: இந்த மேல் அளவு இரத்த அழுத்தத்தை முறையான சிகிச்சை மூலம் குறைத்தால், பக்கவாதம் வரும் வாய்ப்பு 30% மற்றும் மாரடைப்பு வரும் வாய்ப்பு 28% குறைகிறது.

உடற்பரிசோதனைகள்

உயர் இரத்த அழுத்தத்தினால் உடலின் பிற உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய பின்வரும் பரிசோதனைகள் அவசியமாகும்:

  • ஈ.ஸி.ஜி. (E.C.G.) மற்றும் மார்பு எக்ஸ்ரே (X-ray)

  • இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு (Lipid Profile)

  • இரத்தச் சர்க்கரை அளவு (Blood Sugar)

  • சிறுநீரகச் செயல்பாடு அறிய இரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனைகள் (Kidney Function Test)

இரத்த அழுத்தத்தைக் குறைக்க எளிய வாழ்வியல் வழிமுறைகள்

  • உடல் எடை மேலாண்மை: உடல் பருமனைக் குறைத்து, எடையைச் சீராக வைத்திருக்க வேண்டும்.

  • உடற்பரிசோதனை & உடற்பயிற்சி: தினமும் தவறாமல் நடைபயிற்சி போன்ற எளிய உடற்பயிற்சிகளைச் செய்வது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

  • பழக்கவழக்கங்களை மாற்றுதல்: புகைப்பிடித்தலை நிறுத்தினால் மருந்தின்றியே இரத்த அழுத்தம் பெருமளவு குறையும். மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

  • உணவில் உப்பைக் குறைத்தல்: உப்பின் அளவைப் பெருமளவு குறைக்க வேண்டும். முக்கியமாக ஊறுகாய், அப்பளம், வடகம், வடை, உப்பு பிஸ்கட், டின்னில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் கருவாடு ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

  • மன அழுத்தம் தவிர்த்தல்: தினசரி தியானம் மற்றும் யோகா செய்வதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

மருத்துவச் சிகிச்சை முறைகள்

மேற்கண்ட வாழ்வியல் மாற்றங்களை 4 முதல் 5 வாரங்கள் தொடர்ந்து கடைபிடித்தும் இரத்த அழுத்தம் குறையவில்லை எனில், மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.

தற்காலத்தில், உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய பிற நோய்களையும் சேர்த்து குணப்படுத்தும் கூட்டு மாத்திரைகள் (Combination Pills) கிடைக்கின்றன.

  • இரத்த அழுத்தம் மட்டுமே உள்ளவருக்கு ஒரு தனி மாத்திரை.

  • இரத்த அழுத்தத்துடன் இதய நோயும் இருந்தால் அதற்குரிய மாத்திரை.

  • இரத்த அழுத்தத்துடன் சிறுநீரகப் பாதிப்பு இருந்தால் அதற்குத் தகுந்த மாத்திரை.

இப்படி நோயாளியின் ஒட்டுமொத்த உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருந்துகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நோயாளி உட்கொள்ளும் மாத்திரைகளின் எண்ணிக்கையும், அதன் பக்க விளைவுகளும் பெருமளவு குறைகின்றன.

வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா?

ஒருவரின் வாழ்நாளை மருத்துவர்களால் தீர்மானிக்க முடியாது என்றாலும், இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளின் அளவைக் கூட்டியோ அல்லது குறைத்தோ தொடர்ந்து சாப்பிட வேண்டியிருக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்தைத் திடீரென நிறுத்தவோ அல்லது அளவை மாற்றவோ கூடாது.

நிம்மி