பூமியின் தண்ணீர் மர்மம்: நாசாவின் புதிய ஆய்வும் அப்பல்லோ கொடுத்த விடையு!
பூமி ஏன் ‘நீலக்கோள்’ என்று அழைக்கப்படுகிறது? இங்கு இவ்வளவு தண்ணீர் எங்கிருந்து வந்தது? – பல தசாப்தங்களாக விஞ்ஞானிகளைத் தூங்கவிடாமல் செய்த கேள்விகள் இவை. வால் நட்சத்திரங்கள் அல்லது விண்கற்கள் மூலமாகத்தான் பூமிக்குத் தண்ணீர் வந்திருக்க வேண்டும் என்கிற பொதுவான கோட்பாடுகளுக்குப் புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது நாசாவின் சமீபத்திய ஆய்வு. அரை நூற்றாண்டுக்கு முன்னால் நிலவிலிருந்து கொண்டு வரப்பட்ட அப்பல்லோ மண் மாதிரிகள், இப்போது ஒரு மாபெரும் ரகசியத்தை உடைத்திருக்கின்றன.
அப்பல்லோ மண் மாதிரிகள் சொல்லும் ரகசியம்
அப்பல்லோ விண்வெளிப் பயணங்களின் போது நிலவிலிருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை (Soil Samples) அதிநவீன தொழில்நுட்பம் கொண்டு விஞ்ஞானிகள் மீண்டும் ஆய்வு செய்துள்ளனர். இந்த மண்ணில் விண்கற்களின் மோதல்களால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் அதன் வேதியியல் மாற்றங்களை நுணுக்கமாக ஆராய்ந்தபோது, பூமியின் நீராதாரம் குறித்த புதிய உண்மைகள் கிடைத்துள்ளன. நிலவும் பூமியும் ஒரே மாதிரியான தாக்கங்களைச் சந்தித்துள்ளதால், நிலவின் மண் மாதிரிகள் பூமியின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகக் கருதப்படுகின்றன.

உடைக்கப்படும் பழைய கோட்பாடுகள்
பூமியில் உள்ள தண்ணீர் முழுவதும் விண்கற்கள் (Meteorites) மூலமாகவே கொண்டு வரப்பட்டது என்கிற கருத்தை இந்த ஆய்வு சற்று மாற்றியமைக்கிறது. விண்கற்கள் மோதல்கள் மூலமாகப் பூமிக்குத் தண்ணீர் வந்திருப்பது உண்மைதான் என்றாலும், அதன் அளவு மற்றும் விநியோகம் குறித்து இதுவரை நம்பப்பட்டு வந்த கோட்பாடுகள் தவறாக இருக்கலாம் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பூமி உருவான காலத்திலேயே அதன் உட்பகுதியிலேயே நீர் இருப்பதற்கான சூழல் இருந்ததா அல்லது மோதல்களின் தாக்கம் எந்த அளவு தண்ணீரை வழங்கியது என்பதில் இப்போது ஒரு தெளிவு கிடைத்துள்ளது.
எதிர்கால விண்வெளி ஆய்வின் மைல்கல்
இந்த ஆய்வு பூமியின் தண்ணீரைத் தேடுவது மட்டுமல்லாமல், நிலவில் தண்ணீர் இருக்கும் வாய்ப்புகள் மற்றும் எதிர்காலத்தில் மனிதர்கள் நிலவில் தங்குவதற்கான சூழல் குறித்தும் முக்கியத் தரவுகளை வழங்கியுள்ளது. விண்கற்கள் மூலமாக நிலவுக்கு நீர் கடத்தப்பட்டிருந்தால், அந்த நீரின் சுவடுகள் நிலவின் எந்தப் பகுதிகளில் அதிகமாக இருக்கும் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
பூமியின் பிறப்பு மற்றும் அதன் உயிர்நாடியான தண்ணீரின் ஊற்றுக் கண் எது என்பதைக் கண்டறியும் இந்தப் பயணம், விண்வெளி அறிவியலில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
நிலவளம் ரெங்கராஜன்


