பயமின்றி தேர்வு எழுத சி.பி.எஸ்.இ-யின் சேவை மையம்!
பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை முன்னிட்டு, மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தைக் குறைப்பதற்கான ‘இலவச உளவியல் ஆலோசனைகளை’ சி.பி.எஸ்.இ வாரியம் நேற்று (ஜனவரி 6) முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ஜூன் 1-ம் தேதி வரை தொடரவுள்ள இந்தச் சேவை, மாணவர்கள் தேர்வுகளை நம்பிக்கையுடனும் தெளிவான மனநிலையுடனும் எதிர்கொள்ள வழிவகை செய்யும்.
24 மணிநேர உதவி: ஐ.வி.ஆர்.எஸ் (IVRS) வசதி மாணவர்கள் எந்நேரமும் தகவல்களைப் பெறும் வகையில் 1800-11-8004 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் இயங்கும் இந்தத் தானியங்கிச் சேவை மூலம்:

-
மன அழுத்தமில்லாத தேர்வுத் தயாரிப்பு.
-
முறையான நேர மேலாண்மை (Time Management).
-
அடிக்கடி கேட்கப்படும் சந்தேகங்களுக்கான விளக்கங்கள்.
-
சி.பி.எஸ்.இ-யின் முக்கியத் தொடர்புத் தகவல்கள் ஆகியவற்றை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
நேரடி ஆலோசனைக் குழு (Tele-Counselling) தொலைபேசி வாயிலாக நிபுணர்களுடன் நேரடியாகப் பேச விரும்பும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:
-
நேரம்: வார நாட்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை.
-
நிபுணர்கள்: பள்ளி முதல்வர்கள், சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் உளவியலாளர்கள் என மொத்தம் 73 நிபுணர்கள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
-
சர்வதேச சேவை: இவர்களில் 61 பேர் இந்தியாவிலும், மீதமுள்ளவர்கள் நேபாளம், ஜப்பான், கத்தார், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் பணியாற்றுவதால், வெளிநாடுகளில் உள்ள மாணவர்களும் பயனடையலாம்.
டிஜிட்டல் ஆதாரங்கள் தொலைபேசி ஆலோசனைகள் மட்டுமன்றி, மன அழுத்த மேலாண்மை மற்றும் பயனுள்ள படிப்பு முறைகள் குறித்த டிஜிட்டல் ஆவணங்களையும் வீடியோக்களையும் சி.பி.எஸ்.இ தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. “மாணவர்களின் முழுமையான வளர்ச்சியே எங்கள் நோக்கம்” என்று தெரிவித்துள்ள அதிகாரிகள், இந்த வாய்ப்பினை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.


