உலகப் பொருளாதாரம் பணக்காரர்களுக்கு மட்டுமே! – அமைதியாக நடக்கும் ‘சமத்துவமின்மை’ அநீதி!
நம்மில் பலர் தினமும் ஓடிக் கொண்டிருக்கிறோம், கஷ்டப்படுகிறோம். ஆனால் உலகப் பொருளாதாரத்தின் கதையைக் கேட்டால், நம் உழைப்பின் பலன் எங்கே போகிறது என்று புரியும். அதாவது இன்று உலகில் உள்ள மொத்தச் செல்வத்தின் அளவு வரலாறிலேயே இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. இதை கேட்டால், “சரி, உலகம் நல்லா இருக்கு” என்று நினைக்கலாம். ஆனால், அங்குதான் பெரிய ட்விஸ்ட்! இந்த மொத்தச் செல்வமும் அத்தனை பேருக்கும் சமமாகப் போகவில்லை. ஒருபக்கம், கோடிக்கணக்கான ஏழைகள் அன்றாட வாழ்க்கைக்கே போராடிக் கொண்டிருக்க, மறுபக்கம் ஒரு சிறிய சூப்பர் ரிச் கூட்டம் இருக்கிறது. இந்தச் சமத்துவமின்மை அறிக்கை சொல்கிறது:
பூமியில் உள்ள அதி உச்சப் பணக்காரர்களில் 0.001% பேர், அதாவது வெறும் சில ஆயிரம்பேர், உலகில் இருக்கும் ஏழ்மையான பாதி மனிதகுலத்தை (சுமார் 400 கோடி பேரை) விடச் சேர்ந்து மூன்று மடங்கு அதிக செல்வத்தை வைத்திருக்கிறார்கள்.
இதிலிருந்து தெளிவாக தெரிவது என்ன?. இந்த உலகப் பொருளாதாரம், சாதாரண மக்களுக்குச் சாதகமாக இல்லை என்பதுதான். பணக்கார நாடுகளும், சில அதீத செல்வாக்குள்ள தனிநபர்களும் மட்டுமே லாபம் பார்க்கும் வகையில் இந்த அமைப்பு வளைந்துள்ளது. நம் கண் முன்னாலேயே நடக்கும் இந்த அநியாயத்தைப் பற்றித்தான் இந்த அதிர்ச்சியூட்டும் அறிக்கை பேசுகிறது.
ஆம்.. உலகின் மொத்தச் செல்வம் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. ஆனால், அந்த செல்வம் ‘அசமத்துவமாக விநியோகிக்கப்பட்டுள்ளது’ என்று 2026 உலக சமத்துவமின்மை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கட்டுப்பாடு இல்லாத ஏற்றத்தாழ்வு, தற்போதைய உலகப் பொருளாதார அமைப்பு பணக்கார நாடுகளுக்குச் சாதகமாகச் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டிற்கு வலுசேர்க்கிறது.

1. சொத்து குவிப்பின் விஸ்வரூபம்: 0.001% பேரரசர்கள்
இந்த அறிக்கையின் மிக முக்கியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் தரவு, பொருளாதாரப் பிளவின் ஆழத்தை உணர்த்துகிறது:
-
அதி உச்சப் பணக்காரர்கள் (Top 0.001%): சுமார் 60,000 பில்லியனர்கள் மற்றும் மல்டி மில்லியனர்கள் மட்டுமே இந்தப் பிரிவில் உள்ளனர்.
-
சொத்து மதிப்பு: இந்த 60,000 பேர் மட்டுமே, பூமியில் வாழும் ஏழ்மையான பாதி மனிதகுலத்தை (Bottom 50% of humanity) விடச் சேர்ந்து மூன்று மடங்கு அதிகமான செல்வத்தை வைத்திருக்கிறார்கள்.
இதன் பொருள் என்னவென்றால், கோடான கோடி மக்களின் கூட்டு உழைப்பு மற்றும் வறுமையின் பலனை, விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில ஆயிரம் பேர் மட்டுமே அனுபவிக்கிறார்கள்.
2. மண்டல ரீதியான ஏற்றத்தாழ்வு: 90% Vs. 1% சண்டை
இந்தச் சமத்துவமின்மை ஒருசில நாடுகளுக்கு மட்டும் உரியது அல்ல; இது உலகளாவிய நோய் என்பதை அறிக்கை வலியுறுத்துகிறது:
-
உலகத்தின் கிட்டத்தட்ட ஒவ்வொரு மண்டலத்திலும், அந்தப் பகுதியின் உச்சத்தில் இருக்கும் 1% மக்கள் மட்டுமே, அந்த மண்டலத்தில் வாழும் கீழே இருக்கும் 90% மக்களின் மொத்தச் செல்வத்தை விட அதிக சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.
வளர்ந்த நாடுகளோ, வளரும் நாடுகளோ – செல்வம் திரள்வது ஒரே திசையை நோக்கித்தான் என்பதை இது காட்டுகிறது. மண்டல வேறுபாடுகள் இருந்தும், இந்த பொருளாதார விதி எங்கும் மாறவில்லை.
3. ‘அமைதியான’ ஏற்றத்தாழ்வு: குரல் கொடுக்கும் அறிக்கை
இந்த அறிக்கை குறித்துப் பேசிய அதன் முன்னணி எழுத்தாளர் ரிகார்டோ கோமஸ்-கரெரா (Ricardo Gómez-Carrera), சமத்துவமின்மை என்பது அது ‘ஆபாசமானதாக’ மாறும் வரை ‘அமைதியாகவே’ இருக்கும் என்று குறிப்பிட்டார்.
“இந்த அறிக்கை சமத்துவமின்மைக்குக் குரல் கொடுக்கிறது—அதேபோல், இன்றைய சமத்துவமற்ற சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, விரக்தியில் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கும் குரல் கொடுக்கிறது.”
— ரிகார்டோ கோமஸ்-கரெரா, அறிக்கை முதன்மை ஆசிரியர்.
இந்த ஏற்றத்தாழ்வு, வெறுமனே பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் அல்ல; அது பில்லியன் கணக்கான மக்களின் வாய்ப்புகள், கல்வி, சுகாதாரம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பறிக்கிறது என்பதே இந்த அறிக்கையின் பிரதான அறைகூவல்.
4. ஆந்தை ரிப்போர்ட்டர் பார்வை: உலக அமைப்பு யாருக்குச் சாதகம்?
“இந்த அறிக்கை உறுதிப்படுத்துவது என்னவென்றால், தற்போதைய உலகளாவிய நிதி அமைப்பு (Global Financial System) என்பது, ஏழை நாடுகளுக்கும், ஏழை மக்களுக்கும் எதிராகச் சாதகமற்ற வகையில் (Rigged in favour of the rich countries) வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரம் தன்னைத்தானே திருத்திக் கொள்ளவில்லை என்றால், இந்த ஏற்றத்தாழ்வு ஜனநாயகத்தின் ஸ்திரத்தன்மையையும், சமூக அமைதியையும் கேள்விக்குறியாக்கும்.”
இந்தப் பணக் குவிப்பைத் தடுக்கவும், ஜனநாயகத்தை மீட்கவும், உலகளாவிய கார்ப்பரேட் வரி சீர்திருத்தங்கள் மற்றும் செல்வந்தர்கள் மீதான வரி விதிப்புகள் போன்ற தீவிரமான கொள்கை முடிவுகள் தேவை என்பதை உரக்கச் சொல்கிறது.
பிருத்விராஜ்


