சுரேகா யாதவ் – இந்திய முதல் பெண் ரயில் ஓட்டுநர் பணி ஓய்வு!
இந்திய ரயில்வே துறையில், ஆண் ஆதிக்கம் நிறைந்த ஒரு துறையில், அசாத்தியமான துணிச்சலுடன் நுழைந்து, 36 ஆண்டுகள் சேவை செய்து, ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்த ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் திருமதி சுரேகா யாதவ், தனது சிறப்பான பயணத்தை நிறைவு செய்து, செப்டம்பர் 30 அன்று ஓய்வு பெறுகிறார்.

மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தைச் சேர்ந்த சுரேகா, ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். மின் பொறியியலில் டிப்ளமோ பட்டம் பெற்றிருந்தாலும், ஆசிரியராக வேண்டும் என்பதே அவரது கனவாக இருந்தது. ஆனால், இந்திய ரயில்வேயில் கிடைத்த பணி வாய்ப்பு அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியது. ரயில்கள் மீதான சிறுவயது ஆர்வம் அவரை 1986-இல் ரயில்வே பணியில் சேரத் தூண்டியது.
1989-இல் உதவி ரயில் ஓட்டுநராக தனது பணியைத் தொடங்கிய சுரேகா, படிப்படியாக முன்னேறி, 1996-இல் சரக்கு ரயில்களை இயக்கினார். 2000-ஆம் ஆண்டில் பயணிகள் ரயில்களை இயக்கத் தொடங்கிய அவர், தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைப் படைத்தார். மும்பை – புனே இடையேயான மிகவும் சவாலான, அதிக சரிவுகள் கொண்ட ‘போர் காட்’ பகுதியில் உள்ள ரயில்களை இயக்கி தனது திறமையை நிரூபித்தார்.
அவரது நீண்ட கால சேவையில், அவர் பல முக்கிய ரயில்களை இயக்கியுள்ளார். அதில் குறிப்பாக, மும்பை – புனே டெக்கான் குயின், ராஜதானி அதிவிரைவு வண்டி மற்றும் சமீபத்திய அதிநவீன வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 2023 மார்ச் மாதம், சோலாப்பூர் – மும்பை வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த 450 கி.மீ பயணத்தை நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னரே முடித்து சாதனை படைத்தார்.

சர்வதேச மகளிர் தினத்தன்று, அனைத்துப் பெண்களை மட்டுமே கொண்ட ரயில் குழுவினருடன் சிறப்பு ரயிலை இயக்கியது போன்ற அவரது சாதனைகள், இந்தியப் பெண்களின் ஆற்றலுக்கு ஒரு சிறந்த சான்றாக அமைந்தது. இவரின் சாதனைப் பயணம், 1,500-க்கும் மேற்பட்ட இந்தியப் பெண்கள் ரயில் ஓட்டுநர்களாகப் பணியில் சேர்வதற்கு உந்துசக்தியாக இருந்தது.
தனது பணி நிறைவு பாராட்டு விழாவில், ஹைதராபாத் – மும்பை ராஜதானி அதிவிரைவு வண்டியை ஓட்டி தனது சேவையை நிறைவு செய்தார். இந்த 36 ஆண்டு கால பயணத்தில், சுரேகா யாதவ் மாநில மற்றும் தேசிய அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவரின் பயணம், பாலினம் எந்தவொரு தொழிலுக்கும் ஒரு தடையல்ல என்பதை உலகுக்கு உணர்த்துகிறது. இந்திய ரயில்வே வரலாற்றில் அவரது பெயர் ஒரு பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.


