யோலோ – விமர்சனம்!

yolo என்றால் you only live.once அதாவது வாழ்க்கை ஒருமுறை தான் என்ற அர்த்தத்தில் இந்த டைட்டிலாம். சொல்லி இருக்கும் கதை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், எடுக்கப்பட்டுள்ள விதத்தில் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம். மெதுவான திரைக்கதையும், நடிகர்களின் நடிப்பும் படம் பார்க்கும் நம்மை ஈர்க்க தவறுகிறது. இதுவே இந்த படத்தின் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளும் படம் முழுக்க உள்ளதால் அடுத்தடுத்த காட்சிகளின் என்ன நடக்கும் என்ற சுவாரசியத்தை ஏற்படுத்தவில்லை.
அதாவது நாயகன் தேவ் ஒரு youtube சேனல் நடத்தி வருகிறார். அதன் பெயர்தான் ‘யோலோ..!’ இவரது ஒரே டூட்டி இரவில் பேய் போல வேடமிட்டு தனியாக வருபவர்களை பயமுறுத்தி பிராங்க் பண்ணுவது. அப்படி ஒரு முறை செய்த பிராங்கில் வில்லனின் ஆசை நாயகி பயத்தில் கோமாவில் விழுந்து விடுகிறார்.இன்னொரு பக்கம் நாயகி தேவிகாவை பெண்பார்க்க வருபவர்கள் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதை தாங்கள் அறிந்ததாக சொல்கிறார்கள். ஆனால் தேவிகா மறுக்க ஒரு கட்டத்தில் அவருக்கும் மேற்படி தேவுக்கும் திருமணம் ஆனது உறுதியாகிறது. ஆனால் தேவுக்கும் அந்தத் திருமணம் பற்றிய நினைவு இல்லை. இருவருக்குமே தெரியாமல் எப்படி திருமணம் ஆனது என்பதை ஆராயப் போகும்போதுதான் அவர்கள் நடத்தும் யூடியூப் சேனலை விட பயங்கரமான சம்பவம் காத்திருக்கிறது. அவர்களுக்கு உண்மையிலேயே திருமணம் ஆனதா? அப்படி ஆன திருமணம் ஏன் யாருக்கும் தெரியவில்லை..? அவர்களும் ஏன் அதை மறந்தார்கள்.? என்கிற எல்லா குழப்பக் கேள்விகளுக்கும் பதில் சொல்வதுதான் இப்படக் கதை.
ஹீரோ தேவ் மற்றும் நாயகி தேவிகா இளமை துள்ளலோடு படம் முழுவதும் ஜொலித்திருக்கிறார்கள். இருவருக்குமான கெமிஸ்ட்ரி, பயாலஜி என அனைத்தும் கச்சிதமாக பொருந்துவதால் படம் முழுவதும் பார்வையாளர்கள் இந்த ஜோடி சிறப்பாகவே பொழுதுபோக்கியிருக்கிறது.
ஹீரோயினை பெண் பார்க்க வரும் விஜே நிக்கியின் கதாபாத்திரம் திரைக்கதையோடு ஒட்டாமல் பயணித்தாலும் அவர் மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள்.ஆகாஷ் பிரேம்குமார், கிரி துவாரகிஷ், படவா கோபி, யுவராஜ் கணேசன், ஸ்வாதி நாயர், பூஜா உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்து திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இன்னொரு ஹீரோ என்று கேமராமேன் சூரஜ் நல்லுசாமியைச் சொல்ல வேண்டும். படத்தில் வரும் நாயகன் தேவ் மற்றும் நாயகி தேவிகா மட்டுமல்லாது படத்தில் வரும் அத்தனை பாத்திரங்களின் முகங்களையும் அழகுற காட்டி இருப்பதில் ஒளிப்பதிவாளரின் பங்கு முதன்மையாக இருக்கிறது. தேவிகா மட்டுமல்லாமல் இன்ன பிற பாத்திரங்களில் வரும் அத்தனைப் பெண்களும் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள்.
சகிஷ்மா சேவியன் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்தாலும் பாடல்கள் எடுபடவில்லை
திரைக்கதை, வசனத்தை நான்கு பேர் சேர்ந்து எழுதி இருப்பதாக டைட்டிலில் குறிப்பிட்டார்கள். ஆனால் நோ யூஸ்.
படத்தின் டைரக்டர் சாம்.எஸ், இன்னும் குழப்பம் இல்லாமல் கதையைச் சொல்ல முயற்சித்து இருக்கலாம்.
மொத்தத்தில் யோலோ – ஒட்டவில்லை
மார்க் 2.25/5