அரசுப் பள்ளிகளில் ‘ரோபோட்டிக்ஸ் லேப்’: கல்வித்துறையில் புதிய அத்தியாயம்!
கோவை: தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பப் புரட்சி ஒன்றுக்கு வித்திடப்பட்டுள்ளது. அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மொத்தம் ரூ.15.43 கோடி செலவில் ‘ரோபோட்டிக்ஸ்’ ஆய்வகங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளன. இந்த ஆய்வகங்கள், மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸ் சார்ந்த தொழில்நுட்ப அறிவை வழங்குவதோடு, குழுவாக இணைந்து செயல்படும் திறனையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்படுகின்றன.
மாணவர் திறனை மேம்படுத்தும் நோக்கம்
இந்தத் திட்டம், 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சியாகும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி என, மொத்தம் 38 பள்ளிகளில் இந்த அதிநவீன ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. மாணவர்கள், ரோபோட்டிக்ஸ் குறித்த அடிப்படைக் கோட்பாடுகளைக் கற்றுக்கொள்வதுடன், அவற்றை செயல்முறையாகப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் வாய்ப்பையும் பெறுவார்கள்.

கோவையில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகள்
கோயம்புத்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, இரண்டு கல்வி மாவட்டங்களில் தலா ஒரு பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கோவை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள டி. நல்லிகவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவை இந்தத் திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பள்ளியின் ஒரு வகுப்பறையில் இந்த ஆய்வகம் நிறுவப்படும். இந்த ஆய்வகம், அருகிலுள்ள தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் வந்து பார்வையிடவும், ரோபோட்டிக்ஸ் குறித்து அறிந்து கொள்ளவும் ஏதுவாக அமைக்கப்பட உள்ளது.
திட்டத்தின் முக்கியத்துவம்
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், “அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கவும், எதிர்காலத் தேவைகளுக்கு அவர்களைத் தயார்படுத்தவும் இந்தத் திட்டம் பெரிதும் உதவும். ரோபோட்டிக்ஸ் என்பது எதிர்காலத்தின் மிக முக்கியமான தொழில்நுட்பப் பிரிவு. இந்த ஆய்வகங்கள் மூலம் மாணவர்கள், ரோபோட்டிக்ஸ் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கப்படுவார்கள். அக்டோபர் மாதத்தில் ஆய்வகங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்தனர்.
இந்த ‘ரோபோட்டிக்ஸ் லேப்’ திட்டம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் கல்வியை வழங்கி, அவர்களை புதிய கண்டுபிடிப்பாளர்களாகவும், அறிவியலாளர்களாகவும் உருவாக்க ஒரு சிறந்த அடித்தளமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
தனுஜா


