தணல் விமர்சனம்!
வழக்கமான காதல், குடும்ப சென்டிமென்ட், பின்னணியுடன் அதர்வா போலீசாக மாறும் காட்சிகள் என மெதுவாக நகரும் படம், அதன் பிறகு வேறு ஒரு களத்திற்குள் நுழைந்து, விறுவிறுப்பான த்ரில்லராக மாறும் இந்த வங்கி கொள்ளைத் திரைப்படம் தான் ‘தணல்’. அதர்வா போலீஸ் ஆகும் வரை சற்றே நிதானமாக நகர்ந்தாலும், அவர் காவல் துறைக்குள் நுழைந்த பிறகு படம் வேகம் பிடித்து, அடுத்தடுத்த காட்சிகள் என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, இறுதிக் கட்டத்தில் ஒரு வித்தியாசமான வங்கி கொள்ளைப் படமாக நம்மை ரசிக்க வைக்கிறது. படம் தொடங்கி சுமார் 20 நிமிடங்களில் கதைக்குள் இழுத்துச் செல்லும் இயக்குநர், அதில் இருந்து இறுதி வரை பார்வையாளர்களின் முழு கவனமும் திரையில் இருக்கும்படியான திருப்பங்களோடு, கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.
கதைக் களம்:
காவல் துறையில் புதிதாக கடைநிலைக் காவலர்களாகச் சேரும் அதர்வா உள்ளிட்ட ஆறு பேர், ரோந்துப் பணிக்கு அனுப்பப்படுகிறார்கள். அப்போது, சாலையில் உள்ள ஒரு கழிவுநீர்க் கால்வாயில் இருந்து ஒருவர் வெளியேறுவதைப் பார்த்து, அவரிடம் விசாரிக்க முயற்சிக்கும்போது, அவர் தப்பித்து ஓடுகிறார். அவரைப் பின்தொடர்ந்து ஓடும் இந்த ஆறு காவலர்களும், ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு குடிசைப் பகுதிக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கு அஸ்வின் ககுமனு தலைமையிலான ஒரு குழுவினர் மிகப்பெரிய சதித்திட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களைப் பார்த்ததும், ஆறு காவலர்களும் விசாரிக்க முயற்சிக்க, சற்றும் எதிர்பாராத நேரத்தில் அஸ்வின் ககுமனு, காவலர்களைத் தாக்கி கொலை செய்கிறார். அவர்களிடம் இருந்து நாயகன் அதர்வா உள்ளிட்ட மற்ற காவலர்கள் தப்பிக்க முயற்சிக்க, அவர்களால் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுவதற்கான வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட காவலர்களின் இணைப்பு கடிதங்கள் (Joining Letters) அந்த இடத்தில் கிடக்கின்றன. காவல் நிலையத்தில் இருக்க வேண்டிய தங்களது இணைப்பு கடிதத்தை அந்த இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் காவலர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா? அஸ்வின் ககுமனு யார்? அவரது சதித்திட்டம் என்ன? இதில் சம்பந்தமே இல்லாத அதர்வா எப்படி சிக்கினார்? ஆகிய கேள்விகளுக்கான பதிலை பரபரப்பாகச் சொல்வதே ‘தணல்’ திரைப்படத்தின் கதை.
நடிகர்களின் பங்களிப்பு:
அதர்வா வழக்கம் போல் தனக்குக் கிடைத்த வேலையை சிறப்பாகச் செய்திருக்கிறார். போலீசுக்கு உரித்தான மிடுக்குடன் நடித்திருக்கும் அவர், காதல் காட்சிகளிலும் சாக்லேட் பாயாக ஜொலிக்கிறார்.
நாயகி லாவண்யா திரிபாதி தனக்குக் கொடுத்த வேலையை நிறைவாகச் செய்திருக்கிறார். வழக்கமான நாயகியாக வரும் அவர், வழக்கமான முறையில் நாயகிகள் என்ன செய்வார்களோ அதையே செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
படத்தின் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் அஸ்வின் ககுமனு சிறப்பான முறையில் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். வில்லத்தனம் நிறைந்த இவரின் கதாபாத்திரம் படத்திற்கு ஒரு பெரிய பலம். இறுதிக்கட்ட காட்சிகளில் அதர்வாவுக்கு இணையாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார்.
இவரது மனைவியாக வரும் லட்சுமி பிரியா சந்திரமௌலி தனக்குக் கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்து இருக்கிறார்.
அதர்வாவின் நண்பர்களாக வரும் பரணி, ஷா ரா ஆகியோர் சிறப்பான முறையில் நடித்து படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். அதேபோல், இவர்களுடன் நடித்த மற்ற போலீஸ் கதாபாத்திரங்களும் சிறப்பான முறையில் நடித்துத் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கின்றன. மற்றபடி படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுமே தங்கள் கதாபாத்திரங்களை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
தொழில்நுட்பக் குழு:
ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறார். இரவு நேரம், அடர்ந்த குடிசைப் பகுதி என இரண்டையும் படம் பார்ப்பவர்களே பதற்றம் அடையும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இருட்டின் மர்மமும், நெருக்கடியான பகுதிகளும் கேமராவில் மிரட்டலாகப் பதிவாகியுள்ளன.
இசை இயக்குநர் ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் ஹிட் ரகம் என்றால், பின்னணி இசை மிரட்டல் ரகம். ஒரே இடத்தில் நகரும் கதைக்குத் தன் பின்னணி இசை மூலம் வித்தியாசத்தை வெளிப்படுத்தி, திரைக்கதையை எந்த இடத்திலும் தொய்வடையாமல் நகர்த்திச் சென்றிருக்கிறார். ஒவ்வொரு பரபரப்பான காட்சிக்கும் அவர் அமைத்த இசை, ரசிகர்களின் இதயத் துடிப்பை வேகப்படுத்துகிறது.
படத்தொகுப்பாளர் கலைவாணன், வேகம் மற்றும் விறுவிறுப்பு மிக்க திரைக்கதை என்றாலும், அதில் சில உணர்வுப்பூர்வமான காட்சிகளை பார்வையாளர்களுடன் தொடர்பு ஏற்படும் வகையில் தொகுத்திருக்கிறார். கதைக்குத் தேவையான வேகத்தையும், சில இடங்களில் சற்றே மெதுவான உணர்வுபூர்வமான தருணங்களையும் கச்சிதமாகக் கையாண்டுள்ளார்.
மொத்தத்தில் வங்கி கொள்ளை சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் ஏற்கனவே நிறைய வந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. அப்படியான ஒரு பழங்காலக் கதையான வங்கி கொள்ளையை, வித்தியாசமான திரைக்கதை மூலம் கையாண்டு, ‘தணல்’ திரைப்படம் பாஸ் மார்க் வாங்கி விடுகிறது. சில இடங்களில் சற்றே செயற்கையாகத் தெரிந்தாலும், படத்தின் விறுவிறுப்பான இரண்டாம் பாதி, அதர்வா மற்றும் அஸ்வினின் நடிப்பு, மற்றும் ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை ஆகியவை படத்திற்குப் பெரிய பலம். ஒரு நல்ல த்ரில்லர் படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் ‘தணல்’ திரைப்படத்தைக் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்.
மார்க் 2.75 / 5


